Tuesday, 21 April 2020

கூர்ம அவதாரம்



கூர்ம அவதாரம்




பெருமாளின் அவதாரங்களில் 
இது 2வது அவதாரமாகும்: 

தேவர்களும் அசுரர்களும் 
பாற்கடலைக் கடைந்த போது 
மந்திரமலையைத் தாங்க திருமால் 
எடுத்த ஆமை அவதாரம் 
கூர்மாவதாரம். 

மலையை அசையும் போது 
தம் களைப்பு தீர்ந்து பெருமாள் 
நன்கு தூங்கிக் களித்ததாகச் 
சொல்வர். பாற்கடலைக் கடைய 
மந்திர மலை மத்தாக வேண்டி 
இருந்தது. அது சமயம் 
மந்திரமலையைப் பெருமாள் 
தாங்க வேண்டியதாயிற்று. 
அடிக்கடி அசுரர்களுக்கும் 
தேவர்களுக்கும் இடையே 
யுத்தம் ஏற்பட்டது. தங்கள் தீவிர 
பக்தியின் காரணமாக அசுரர்களில் 
செத்தவர்கள் எழுந்தனர். மேலும் 
அசுரகுரு சுக்ராச்சாரியார் 
அமுதபானம் கொடுத்து இறந்த 
தம் சீடர்களை உயிர்ப்பித்துக் 
கொண்டிருந்தார். தேவர்களுக்கு 
அந்த சலுகை கிடைக்கவில்லை. 
இதனால் நிறைய தேவகணம் 
நஷ்டமாயிற்று. ஆகவே 
தேவர்களுக்கும் அமிர்தம் 
கிடைக்க வேண்டுமென 
ஸ்ரீஹரி விரும்பினார்.  
போரில் தோல்வி பெற்றதோடன்றி 
இந்திரன் துர்வாச முனிவர் 
சாபத்திற்கும் ஆளாகி இருந்தான்.

ஒரு நாள் துர்வாச முனிவர் 
வைகுண்டத்திலிருந்து திரும்பி 
தேவலோகத்திற்கு வந்துகொண்டு 
இருந்தார். தேவலோகத்தில் 
அப்போது இந்திரனாக இருந்தவன் 
மந்தரத்துருமன் என்பவன். 

ஆப்பியாள் எனப்படுபவர்கள் 
தேவர்களாக இருந்தார்கள். 
அவிஷமானு, அரசுனி என்பவர் 
ரிஷிகள். வைராஜன் என்பவருடைய 
பத்தினி சம்பூதினியிடம் 
பகவான் அவதரித்தார். அப்போது 
அவருக்குப் பெயர் சுசிதர் 
என வழங்கலாயிற்று. 

அவர்தான் பாற்கடலைக் கடைந்து
 தேவர்களுக்கு அமிர்தம் அளித்தார். 
துர்வாசர் தேவலோகம் நோக்கி 
வரும்போது, அவர் கழுத்தில் 
பரமன் அளித்த மலர்மாலையை 
அணிந்திருந்தார். 

தேவேந்திரன் ஐராவதத்தின் 
மீது ஏறி எதிரே வருவதைத் 
துர்வாசர் பார்த்தார். 
முனிவர் தன் கழுத்தில் 
கிடந்த மாலையை இந்திரனுக்கு 
கொடுத்தார். செருக்கேறிக் கிடந்த 
இந்திரன் அந்த மாலையைத் 
தன் யானையாகிய ஐராவதத்தின் 
தலைமீது விட்டு எறிந்தான். 
யானையோ அதைத் துதிக்கையால் 
எடுத்து பூமியில் போட்டுக் 
காலால் மிதித்தது.
துர்வாசருக்கு கோபம் வந்தது.

இந்த இந்திரனால் மூன்று 
உலகங்களும் அவனும் பாழாகப் 
போகட்டும் என்று சபித்தார். 
அது முதல் மூன்று உலகங்களும் 
களையிழந்து இருண்டு கிடந்தன. 
இந்திரனும் தேவாதியரும் 
பிரம்மனை அணுகி பிரார்த்தித்து 
அந்த இடரிலிருந்து காப்பாற்றும்படி 
வேண்டினர். இந்த கஷ்டத்தை 
ஸ்ரீமந்நாராயணன் ஒருவராலே 
தான் தீர்க்கமுடியும் என 
அனைவரும் வைகுண்டம் 
சென்று மஹாவிஷ்ணுவை 
வணங்கினர். உடனே விஷ்ணு 
தேவர்களே! உங்கள் நன்மைக்காக 
நான் கூறுகிறேன். நீங்கள் 
உங்களுக்கு நல்ல காலம் 
வரும் வரை காத்திருங்கள். 
இப்போது அசுரர்களுடன் 
சமாதானம் செய்து கொள்ளுங்கள். 
நாம் நாடும் பொருளை 
அடையும் பொருட்டு 
எதிரியையும் அணுக 
வேண்டியதாகிறது. இப்போது 
சாவை நீக்கும் அதர்மத்தை 
தேட வேண்டும். பாற்கடலில் 
பற்பல மூலிகைகளையும், 
பச்சிலைகளையும் கொண்டு 
போடுங்கள். மந்திரமலையை 
மத்தாகவும் வாசுகியைக் 
கயிறாகவும் வைத்து 
பாற்கடலைக் கடையுங்கள். 
நீங்கள் மட்டுமின்றி அசுரர்களும் 
சேர்ந்து திருப்பாற்கடலைக் 
கடைய வேண்டும். 
நானும் உங்களுக்கு உதவுகிறேன்.

இதிலிருந்து வரும் அமிர்தத்தை 
உங்களுக்கு மட்டுமே 
கிடைக்கும்படி வழி செய்கிறேன். 
அதர்மமே குறிக்கோளாக 
இருக்கும் அசுரர்கள் 
அமிர்தபானம் உண்டால் இறப்பு 
ஒழிந்து உலகத்திற்கு மேன்மேலும் 
கஷ்டத்தைத் தந்து விடுவார்கள். 
அமிர்தம் பருகினால் அதிக பலம் 
பெற்று நீங்கள் மரணமில்லா 
நல்வாழ்வு பெறுவதுடன் 
தேவலோகமும் சுபிட்சமடைய 
நேரிடும், என்றார். 

இந்த யோசனைப்படி 
நான்முகனாகிய பிரம்மா 
தேவேந்திரனிடம், இந்திரனே 
நீ உடனே அசுரர்களை நெருங்கி 
அமிர்தம் கடையும் காரியத்தில் 
அவர்கள் துணை நிற்க வேண்டும் 
என்று கேட்டு அவர்களிடம் இணக்கம் 
பெற்று வா என்று சொல்லிவிட்டு 
அவர் அவருடைய சத்யலோகத்திற்குப் 
போனார்.

தேவேந்திரன் சில தேவர்களை 
அழைத்துக் கொண்டு மகேந்திரபுரி 
நோக்கி நடந்து போனான். 
எந்தவித ஆடம்பரமுமின்றி 
அரசருக்குரிய முறையில் 
டாம்பீகமான ஆடை 
அணிகலங்களின்றி மிகவும் 
எளிய தோற்றத்தில் வந்து 
நின்ற இந்திரனைப் பார்த்து 
அரக்கர் குலத்தினர் ஏளனம் 
செய்தனர். எனினும் அவன் 
வந்த காரியம் தம் குலத்திற்கு 
மிகவும் உயர்வழி காட்டும், 
சாவைப் போக்கும் அமிர்தம் 
கடையும் விஷயம் என்பது 
தெரிந்து அவனிடம் மகிழ்ச்சியுடன் 
நடந்து கொண்டனர். விரோசன 
குமாரனும், அசுர அரசனுமாகிய 
பலியும் இந்திரன் வந்த 
காரியத்திற்கு உதவ 
சம்மதித்தான்.

நாராயணன் இட்ட 
கட்டளைப்படி தேவர்களும், 
அசுரர்களும் மந்திரமலையைத் 
தூக்கிக் கொண்டு பாற்கடலை 
நோக்கி வந்தார்கள். வரும் 
வழியில் மலையின் பாரம் 
தாங்க முடியாமல் களைப்புற்ற 
இந்திரன், பலி முதலியோர் 
மந்திரமலையை பூமியில் 
வைத்து விட்டார்கள். கீழே 
விழுந்த மலை பலரைத் தாக்கிக் 
கொன்று விட்டது. இதை அறிந்த 
ஸ்ரீஹரி கருடன் மீது ஏறி அங்கு 
வந்தார். வந்து தன் கருணைக் 
கடாட்சத்தால் காயம் 
அடைந்தவர்களைக் 
குணப்படுத்தினார். 
மலையைக் கருடன் மீது 
விளையாட்டாக தூக்கி வைத்துக் 
கொண்டு பாற்கடல் நடுவே 
பறந்து சென்று மந்திர மலையைக் 
கீழே இறக்கினார். வாசுகி 
என்ற பாம்பிற்கு அமிர்தத்தில் 
பங்கு தருவதாக ஆசை 
காட்டினார்கள். தேவர், 
அசுரர்களின் வேண்டு
கோளுக்கிணங்க பாம்பு 
மந்திரகிரியைக் கடையும் கயிறாக 
மந்திர மலையை சுற்றி வளைத்துக் 
கொண்டது. தேவர்களும் அசுரர்களும் 
அமிர்தம் கடையத் தொடங்கும் 
போது நாராயணன் பாம்பின் 
தலைப்பகுதியை பிடித்துக் கொண்டார்.

தேவர்களும் அவருடன் சேர்ந்து 
தலைப்புறமாக நின்றார்கள். 
இதைக் கண்ட அசுரத் தலைவர்கள் 
வாலைப் பிடிப்பது என்பது நம் 
நிலைக்கு இழுக்கு. அதனால் 
தாங்கள் தான் தலைப்பக்கம் 
நிற்போம் என்றனர். உடனே 
ஸ்ரீஹரியும் தேவர்களும் பாம்பின்
 வால்பக்கமும், அசுரர்கள் 
தலைப்பக்கமும் நின்று பாற்கடலைக் 
கடையத் தொடங்கினார்கள். 
மலையோ அதனுடைய பெரும் 
பாரத்தால் கடலுக்குள் மூழ்கியது. 
உடனே பகவான் ஆமையாக 
அவதாரம் எடுத்தார். 
மந்திரமலையைத் தன் 
முதுகால் தாங்கிக் கொண்டார்.
மறுபடியும் இருசாரர்களும் தங்களது 
பணியை செய்யத் தொடங்கினார்கள். 
இந்நிலையில் வாசுகி என்ற 
பாம்பின் முகம் மற்றும் கண்களிலிருந்து 
உஷ்ண ஜ்வாலைகள் வெளிவந்தன. 
ஆலகாலம் என்ற விஷத்தை 
கக்கியது. அந்த விஷத்தின் 
தன்மை எல்லாப் பக்கமும் 
பரவ ஆரம்பித்தது. அசுரர்கள் 
பாம்பை விட்டுவிட்டு தலை
தெறிக்க நாலாபுறமும் 
ஓடிவிட்டார்கள். தேவர்கள் 
மீது மட்டும் மழை பொழிந்து 
கடல்காற்று வீசியது. எனினும் 
அமிர்தத்திற்கு பதில் கொடிய 
விஷமே பரவியது. இதனால் 
தேவர்களும், அசுரர்களும் 
மிகவும் சிரமப்பட்டனர். 
தேவர்களுடன் தேவேந்திரன் 
கைலாயத்திற்கு சென்று 
சிவபெருமானை பிரார்த்தித்தான்.

அம்பலத்தரசே! நாங்கள் 
பாற்கடல் கடைந்த சமயம் 
வாசுகியின் தாங்க முடியாத 
ஆலகால விஷம் நாலாப்புறமும் 
பொங்கித் ததும்பக் காண்கிறோமே 
ஒழிய அமிர்தம் வந்தபாடில்லை. 
ஆலகாலத்தின் விஷத்தைப் 
பொறுத்துக் கொண்டு எங்களால் 
அமிர்தம் கடைய முடியாது. 
எனவே தாங்கள் தான் எங்களைக் 
காத்தருளவேண்டும் என வேண்டினர். 
சிவபெருமான் தம் பிராட்டி 
உமாதேவியை அழைத்தார்.

அம்பிகையே! பாற்கடலைக் கடைய 
ஆலகால விஷம் தடையாக உள்ளது. 
தேவேந்திரனும் நம்மிடம் சரணடைந்து 
விட்டான். ஆகவே நான் இப்பொழுதே 
சென்று அதை உட்கொள்ளப் போகிறேன். 
அதனால் அனைவரும் நன்மை 
பெறட்டும் என்றார். அம்பிகையும் 
அதற்கு ஆமோதித்தாள். அக்கணமே 
பாற்கடலை அடைந்து விஷத்தைப் 
பருகினார் சிவபெருமான். 
உடனே உமாதேவி, ஆலகாலமே! 
பெருமானுடைய கண்டத்தளவிலேயே 
நில் என்று கூறியபடி பெருமானுடைய 
கழுத்தை அழுத்திப் பிடிக்க விஷம் 
அவர் கழுத்திலேயே நின்றது. 

பின்னர் தேவர்கள் அனைவரும் 
சிவபெருமானை நீலகண்டன் 
எனப் போற்றி துதித்தனர்.
தேவர்களும், அசுரர்களும் 
மீண்டும் பாற்கடலைக் 
கடைந்தார்கள். அதிலிருந்து 
காமதேனு, வெள்ளைக் குதிரை, 
சிவப்பு மணி, ஐராவதம், 
பாரிஜாத மரம் போன்ற எண்ணற்ற 
பொருள்கள் வெளிவந்து 
தேவலோகத்தை அடைந்தன. 
மேலும் அதிலிருந்து வெளிவந்த 
திருமகளாகிய லட்சுமி தேவி, 
ஸ்ரீஹரியை அடைந்தாள். அதற்கு 
அடுத்தாற்போல் அனைவரும் 
எதிர்பார்த்துக் கொண்டிருந்த 
ஸ்ரீஹரியின் அம்சமான தன்வந்திரி 
பகவான் அமிர்தம் ததும்பும் தங்க 
கலசத்துடன் வெளிவந்தார். 
இதைக் கண்ட அசுரர்கள் அந்த 
அமிர்த கலசத்தைப் பறித்துக் 
கொண்டு மின்னலென ஓடி மறைந்தனர்.

தேவர்கள் அனைவரும் தாங்கள் 
பட்ட கஷ்டங்கள் எல்லாம் 
வீணாகி விட்டதே என்று 
வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். 
இதற்கிடையில் சற்றே தூரத்தில் 
அசுரர்கள் தங்களுக்குள் 
போட்டி போட்டுக் கொண்டு 
கலவரத்தில் ஈடுபட்டனர். 

அச்சமயம் ஸ்ரீஹரி ஆடவரின் 
சிந்தையை இழக்கச் செய்யும் 
சீரிய அழகுடைய பெண் வடிவில் 
ஜெகன் மோகினியாக அவர்கள் 
முன் தோன்றினார். அதுவரை 
தங்களுக்குள் சண்டையிட்டுக் 
கொண்டிருந்த அசுரர்கள் 
வாயடைத்து நின்றனர். இவ்வளவு 
அழகுடைய பெண்ணை 
தாங்கள் கண்டதே இல்லை, 
பிரம்மன் தங்களுக்காகவே 
இவளை படைத்திருக்கிறான் 
என்று வியந்தனர். அழகியே! 
அனைவருக்கும் சொந்தமான 
ஒரு பொருளுக்கு நாங்கள் 
சுயநலத்தால் சண்டைப் போட்டுக் 
கொள்கிறோம். கஸ்யபர் 
மைந்தர்களான எங்களுக்கு 
பாரபட்சமின்றி சமஅளவில் 
பங்கிட்டுத் தா என்றனர். 

கஸ்யபர் புத்திரர்களே! 
நீங்களோ பக்திமான்கள். 
ஓயாத ஆசையுடன் திரியும் 
ஓநாய் கூடப் பெண் அன்பிற்கு 
ஆளாகாது என்கிற உலகத்தில் 
புதிதாக வந்த என்னை 
எவ்வாறு நம்பினீர்கள், என வினவினாள். 

இவ்வாறு அவள் வினவியது 
மேலும் அவள் மேல் நம்பிக்கையை 
உண்டாக்கியது.

அமுதகலசத்தை மோகினியிடம் 
அசுரர்கள் ஒப்படைத்தனர்.  
நான் தான் பங்கிடுவேன். 
நான் எது செய்தாலும் 
எப்படி செய்தாலும் நீங்கள் 
ஏற்றுக்கொள்ள வேண்டும். 
என்ன சொல்கிறீர்கள்? என்று 
மோகினி கேட்க, அத்தனை 
அசுரர்களும் ஒப்புக் கொண்டனர். 
அன்று உண்ணா நோன்பு நோற்று 
புனித நீராடினர். ஹோமங்கள் 
நடத்தி தானங்கள் செய்தனர். 

ஸ்ரீஹரியாகிய மோகினி 
தேவர்களை ஒரு பந்தியாகவும், 
அசுரர்களை ஒரு பந்தியாகவும் 
அமர்த்தினாள். அனைவரும் 
தர்ப்பாசனத்தில் அமர்ந்திருந்தனர். 
அசுரர்கள் கிழக்கு முகமாகவும், 
தேவர்கள் மேற்கு முகமாகவும் 
அமர்ந்து அமுதத்தை அருந்த 
தயாரானார்கள். அசுரர்கள் 
அனைவரும் மோகினியின் 
அழகில் மயங்கி இருந்தனர். 
அசுரர்களுக்கு அமிர்தம் தருவது, 
பாம்பிற்கு பால் வார்ப்பது போல் 
என்றெண்ணிய மோகினி 
தேவர்களுக்கு மட்டும் 
அமிர்தம் கிடைக்கும்படி 
செய்து கொண்டிருந்தாள். 
அசுரர்கள் அனைவரும் 
மயக்கத்தில் இருந்ததால் 
அவர்களுக்கு இந்த சூழ்ச்சி 
தெரியவில்லை.

ஆனால் அசுரர்களில் ராகு 
என்பவன் மட்டும் இந்த சூழ்ச்சியை 
தெரிந்து கொண்டான். தேவர்கள் 
போல் உருமாறி சூரியனுக்கும், 
சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்து 
கொண்டு அமிர்தத்தை அருந்தி 
விட்டான். இந்த விஷயத்தை 
அறிந்த மகாவிஷ்ணு தனது 
சுதர்சனத்தால் ராகுவின் 
தலையை வெட்டி எறிந்தார். 
அமுது உண்டதால் தலையும் 
அழியவில்லை, உடலும் 
அழியவில்லை. இதைப் பார்த்த 
பிரம்மன் துண்டிக்கப்பட்ட 
தலையோடு ஒரு சர்ப்ப உடலை 
பொருத்தினார்.  துண்டிக்கப்பட்ட 
உடலோடு ஒரு பாம்பின் 
தலையைப் பொருத்தி இணைத்தார். 
அவை இரண்டும் ராகு, கேது 
என்ற பெயருடன் கிரக பதவி 
பெற்றனர். பின்பு தேவர்களுக்கும், 
அசுரர்களுக்கும் கடுமையான 
போர் நடந்தது. அமுத பானம் 
உண்ட தேவர்களை அசுரர்களால் 
அழிக்கமுடியவில்லை. தேவர்கள் 
அசுரர்களை பாதாள 
லோகத்திற்குத் துரத்தினார்கள்.

இந்த கூர்மஅவதார மூர்த்தியைப் 
பிரார்த்தனை செய்பவர்களுக்கும், 
அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு 
சிந்தித்து அவரைத் தியானம் 
செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும், 
தீர்க்க ஆயுளும் உண்டாகும்.


ஹரி ஓம்!!!

Monday, 20 April 2020

மச்சாவதாரம்

மச்சாவதாரம்



உலகத்தில் தருமம் அழிந்து 
அதர்மம் ஓங்குகிற சமயம் நான் 
உலகத்தில் அவதாரம் 
எடுக்கின்றேன் என்று 
கிருஷ்ண பரமாத்மா கீதையில் 
சொல்கிறார். 

வைகுண்டத்தை இருப்பிடமாகக் 
கொண்டிருக்கும் பரம்பொருள் 
திருமால். பூலோகத்தைக் 
காப்பதற்காக பல சமயங்களில் 
பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். 

அவருடைய அவதாரங்களைச் 
சிறப்பாக தசாவதாரம் என்று 
குறிப்டுவர். பெருமாள் எடுத்த 
பத்து அவதாரங்களைப் பற்றி 
சுகர், பரீட்சித்து மகாராஜனுக்கு 
உபதேசம் செய்தார். சுகரைப் 
பார்த்து பரீட்சித்து மகராஜா 
ஒரு கேள்வி கேட்டார். 

ஹே! ரிஷிவேந்தே! எதற்காக 
ஹரிபகவான் ஒரு சாதாரண 
கர்மவசியனான புருஷனைப் 
போல, உலகத்தாரால் 
நிந்திக்கப்படக் கூடியதாகவும், 
தாமசப் பிரகிருதியாகவும், 
சகிக்கக் கூடாததாகவும் 
இருக்கிற மச்சரூபம் தாங்கி 
அவதாரம் செய்தார் ?. 

அதற்கு சுகபிரம்மர் 

" மகாவிஷ்ணு எடுத்த முதல் 
அவதாரம் இது. மச்சாவதாரத்தை 
மத்ஸ்யாவதாரம் என்றும் 
கூறுவார்கள். இந்த அவதாரம் 
வேதங்களை அபகரித்துக் 
கொண்டு போய் கடலில் 
ஒளித்து வைத்திருந்த 
சோமுகாசுரனைக் கொன்றது. 
வேதங்களை மீட்டது. 
இந்த அவதாரத்திலேயே 
மகாப் பிரளயம் வர ஏழாவது 
மனுவும், சப்த ரிஷிகளும் 
மீன் உருக்கொண்டு தம் உயிர் 
பிழைத்திருக்க, மற்ற எல்லா 
உலகங்களும் அழிந்து ஒழிந்தன. 
பொங்கிப் பெருகும் கடலில் 
மூன்று உலகங்களும் மூழ்கின. 
ஹயக்கிரீவன் என்ற அசுரன் 
அங்கே வந்தான். அவனுக்கு 
கழுத்திற்கு மேல் குதிரை உருவம். 
அதனால் அப்பெயர் அவனுக்கு வந்தது.

பிரம்மா சோர்ந்து தூங்கும் 
போது அவர் வாயிலிருந்து 
வேதங்கள் தாமே வெளிவந்து 
கொண்டிருந்தன. இதைப் பார்த்த
 ஹயக்ரீவன் தனது யோக 
சித்தியினால் அந்த வேதங்களைத் 
திருடிக் கொண்டு போய் விட்டான். 
பிறகு அதை ஒளித்து மறைத்து 
விட்டான். வேதங்கள் இருந்தாலன்றிப் 
பிரும்ம சிருஷ்டி இயங்காது. 
உலகத்தில் அறம் ஒழுங்காக 
நிறைவேற வேதத்தின் துணை 
அவசியம்.  எனவே ஹயக்ரீவனால் 
திருடி மறைக்கப்பட்ட வேதங்களை 
மீட்பதற்காக பரந்தாமன் 
மீனாக அவதரித்தான். 
ஸ்ரீமந் நாராயணன் எடுத்த 
மச்சாவதாரத்தில் சத்யவிரதன் 
என்ற பெயருடைய ராஜரிஷி
 இருந்தான். அவன் நாராயணன் 
மீது அளவிலா பக்தி கொண்டவன்.

அந்த ஹரிபக்தன் வேறு உணவு 
எதுவும் அருந்தாமல் தண்ணீரை 
மட்டும் உட்கொண்டு ஒரு 
நோன்பு நோற்று வந்தான். 
இப்போது நடக்கும் கல்பத்தில் 
மனுவாக விளங்கும் விவஸ்வரன்
 இவனே. அந்தக் காலத்தில் அவன் 
திராவிடத் திருநாட்டின் 
தேசாதிபதியாக இருந்தான். 
அவன் ஒருநாள் கிருதமாலா 
என்ற ஆற்றங்கரையில் அமர்ந்து 
தன் மூதாதையர்களுக்குத் 
தண்ணீர் இறைத்து அர்க்கியம்
 கொடுத்துக் கொண்டு இருந்தான். 
அர்க்கியம் செய்யும் பொழுது 
இரு கைகளிலும் தண்ணீரை 
எடுத்தான். அங்கே கைக்குள் 
தேங்கிய நீரில் ஒரு குஞ்சு மீன் 
அழகுற நீந்திக் கிடப்பதைப் 
பார்த்தான். பேரழகுமிக்க அந்த 
மீன் பேசியது: ஹே ராஜனே 
என்னை மீண்டும் தண்ணீரில் 
தள்ளிவிடாதீர்கள். குட்டி மீனான 
என்னைப் பெரிய மீன்கள் 
விழுங்கி விடும். அச்சம் 
என்னை பிடுங்கித் தின்கின்றது, 
என்றது.

இதைக் கேட்டு அகமகிழ்ந்து 
அந்த மச்சத்தின் வேண்டுகோளை 
நிறைவேற்ற நினைத்தான். 
ஆற்றுக்குத் தன்னுடன் எடுத்து 
வந்த கமண்டலத்திற்குள் 
மீனைப் போட்டான். அதைத் 
தன் வழிபாட்டு ஆஸ்ரமத்திற்கு 
எடுத்துப் போனான். அன்று 
இரவே அந்த மச்சம் கிடுகிடுவென்று 
வளர்ந்து கமண்டலம் முழுவதும் 
பரவியது. அரசே இந்த இடம் எனக்கு 
வசிக்கப் போதாது என்றது மச்சம். 
சத்தியவிரதன் மீனைக் 
கமண்டலத்தில் இருந்து 
எடுத்து நீர் நிறைந்த வேறு 
ஒரு பாத்திரத்தில் போட்டான். 
இந்தப் பாத்திரமும் எனக்கு 
வசிக்கப் போதவில்லையே என்று 
திரும்பவும் கெஞ்சியது. மன்னவன் 
உடனே மீனை அங்கிருந்து எடுத்து 
ஒரு குளத்தில் விட்டான். அது வெகு 
சீக்கிரமாக வளர்ந்து அந்தக் 
குளத்தை நீக்கமற அடைத்து நின்றது. 
அடுத்து அந்த மீனை ஆழமானதும்
 விரிந்து பரந்ததுமான மடுக்களிலும், 
ஏரிகளிலும் போட்டான்.

அங்கும் அது பெரிதாக வளர்ந்து 
தனக்கு வாழ இடம் போதவில்லை 
என்று சொல்லியது. கடைசியாக 
அதை சமுத்திரத்தில் கொண்டு 
போடும் போது அந்த மச்சம் சொன்னது: 
ராஜரிஷியே! இந்தப் பெரிய கடலில் 
திமிங்கலம் போன்ற பெரிய 
ஜந்துக்களின் நடமாட்டம் இருக்கிறது. 
ஆகவே என்னை நீ இங்கே விட்டு 
விட்டுப் போய் விடாதே என்று அலறியது.
 உடனே சத்யவிரதன் அந்த மீனைக் 
கரம் கூப்பித் தொழுது, பரம்பொருளே! 
ஒரு சாதாரண மீனாகத் தாங்கள் 
என்னிடம் வந்து மயங்க வைக்கிற 
மாயம் எனக்கு என்ன என்று 
தெரிந்து கொள்ள முடியவில்லையே? 
இப்படி தேவரீர் என்னை விடாமல் 
பிடித்து வைத்துக் கொண்டிருப்பதன் 
காரணம் என்ன? நீர் வளர வளர நிச்சயம்
 ஸ்ரீ ஹரியேதான் தாங்கள் என்பதை 
உணர்ந்து கொண்டேன். ஆகவே 
பெருமானாகிய தாங்கள் இந்த 
உருவத்தோடு இங்கு வந்த 
காரணத்தைத் தங்கள் 
தொண்டனாகிய எனக்குத் 
தெரிவிக்கும்படி பிரார்த்திக்கிறேன் 
என மச்சாவதார மூர்த்தியை 
வீழ்ந்து வணங்கிக் கேட்டான்.

மச்சம் பதில் சொல்லியது: 
ராஜரிஷியே! இன்று முதல் 
ஏழாம் நாள் அன்று இந்த பூமியும், 
விண்ணும், அதற்கிடைப்பட்ட 
வெளியும், பொங்கி எழுந்து வரும் 
கடலுக்கு இரையாகப் போகிறது. 
உலகங்கள் அழியும் நாள் வந்து 
விட்டது. அஞ்சாதே! நான் உனக்கு 
ஒரு பெரிய தோணியை அனுப்பி 
வைக்கின்றேன். நீ அந்தத் தோணியில் 
சமஸ்த ஒளஷதிகளையும் (மூலிகைகள்) 
பற்பல வித்துகளையும் 
ஏற்றிக்கொண்டு சப்த ரிஷிகளுடன் 
சர்வபலம் கொண்டவனாக அந்தகாரமான 
சமுத்திரத்தில் மகா தீரனாக சஞ்சரிக்கப் 
போகிறாய். வாயுவால் 
அலைக்கழிக்கப்பட இருக்கும் 
அந்தத் தோணி கவிழ்ந்து விடாமல் 
எனது கொம்பில் சேர்த்த கட்டிவிடு. 
அப்படிக் கட்டினால் நான் 
பிரம்மதேவனுடைய இராப்பொழுது 
தீரும்வரை அந்த ஓடத்தோடு 
சஞ்சரித்துக் கொண்டு இருப்பேன். 
அப்போது சப்தரிஷிகளும் ஒளிமயமாக 
இருந்து உனக்கு வழிகாட்டுவார்கள். 
என் உடல் அப்போது திமிங்கலம் 
போலக் காணப்படும். அந்தப் படகை 
என் கொம்பில் கட்டச் சொன்னேன் 
அல்லவா? அப்படிக் கட்டுவதற்கு உரிய 
கயிறு வாசுகி என்ற பாம்பு என்பதை 
மறந்துவிடாதே. அந்த பாம்பை 
எனது சிதளில் கட்டிவிடு. அதற்கப்புறம் 
நீ எனது பெருமையைத் தெரிந்து 
கொள்வாய். உனக்கு சர்வமங்களமும் 
உண்டாகட்டும் என்றார். 

தர்ப்பாசனத்தில் இருந்தபடி 
சத்தியவிரதன், உலகை 
அழிக்கப்போகும் பிரளயத்தை 
எதிர்நோக்கிக் கொண்டு 
இருந்தான். ஏழாம் நாள், 
ஆகாயம் அந்தகாரத்தில் மூழ்கியது. 
பெருமழை பெய்த வண்ணம் இருந்தது. 
கடல் கரைபுரண்டு வந்தது. 
பூமி இருக்கும் அடையாளமே 
தெரியவில்லை. எங்கும் ஒரே 
தண்ணீர்க்காடு. அந்தப் 
பொங்கும் நீர்ச்சுழிகளின் ஊடே 
பரந்தாமன் தங்கத் திமிங்கலத் 
தோற்றத்துடன் காணப்பட்டார். 
தகத்தகாயமாக ஜ்வலித்த அவர் 
உடம்பில் கொம்பு  போல் ஒன்று 
நீண்டு இருந்தது.

சத்யவிரதன் அப்போது 
சப்தரிஷிகளுடன் மூலிகை 
விதைகள் சகிதம் ஏறி இருந்த 
ஓடத்தை பகவான் கூறியபடி 
அவரைத் தியானம் செய்தபடியே, 
தங்கத் திமிங்கிலக் கொம்பில் 
கட்டினான். அந்த அபூர்வ மச்சம் 
இவர்கள் ஏறிய படகைப் பற்றி 
இழுத்துக் கொண்டு வெள்ளத்தின் 
மத்தியில் பயமோ, அபாயமோ 
இன்றி அலைந்து கொண்டு இருந்தது. 
அந்த சமயம் பரந்தாமன் ராஜரிஷி 
சத்தியவிரதனுக்கு மச்சாவதார 
புராணத்தை உபதேசம் செய்தார். 
பிரம்மதேசன் நித்திரை காலம் 
முடிந்தது. உலகத்தை கவ்வி 
இருந்த அந்தகாரம் விலகி 
ஊடே ஊடே ஒளிப் படலங்கள் 
விரிசலிட்டன. ஓயாது பெய்த 
மழையும் நின்றது. 
பல்கிய, உலகில் பொங்கிப் 
பெருகிய தண்ணீர் வடிய ஆரம்பித்தது.

மச்சமூர்த்தி ஓடத்தைக் 
கரை சேர்த்தார். சத்திய விரதன் 
அந்நேரம் பிரம்மனைக் குறித்து 
பிரார்த்தனை செய்தான். 
நித்திரையிலிருந்து மீண்ட 
பிரம்மதேவன் அவன் முன்பு 
பிரத்யட்சம் ஆனார். மீண்டும் 
அவர் தம் சிருஷ்டியைத் தொடங்க 
நினைத்தபோது தான் வேதங்கள் 
மறைந்த விபரம் அவருக்குத் தெரிந்தது. 
பிரம்மதேவர் ஸ்ரீ ஹரியை நோக்கி 
தியானம் செய்தார். அதுசமயம் 
மச்சமூர்த்தியாக இருந்த பகவான் 
வேதங்களை ஹயக்கிரீவன் 
ஒளித்து வைத்திருப்பதை 
அறிந்து வெள்ளத்திற்குள் 
புகுந்து போனார். ஹயக்கிரீவனை 
வெள்ளத்தில் கண்டு அவனுடன் 
போர் புரிந்தார். வேதங்களை 
மீண்டும் பிரம்மதேவரிடம் கொடுத்தார். 
மறுபடியும் சிருஷ்டியைத் 
தொடங்கும்படி சொன்னார். 
இப்படியாகப்பட்ட கல்பத்தில் 
சத்தியவிரதன் வைவசதமனு 
என்ற பெயருடன் ராஜ்ய பரிபாலனம் 
செய்து வரலானான்.

இந்த மச்சாவதார 
மூர்த்தியைப் பிரார்த்தனை 
செய்பவர்களுக்கும், அவர் 
சரித்திரத்தைப் பயபக்தியோடு 
சிந்தித்து அவரைத் தியானம் 
செய்பவர்களுக்கும் சகல 
சம்பத்தும் ஞான யோகமும் 
உண்டாகும்.

Sunday, 19 April 2020

" அட்சய "

" அட்சய "

' அட்சய " என்றல் வளர்தல்.

மஹா பாரதத்தில் , தன் மானத்திற்காக
போராடிய திரௌபதி, கண்ணனைச்
சரணடைய, அங்கு வந்த கண்ணன்
" அட்சய " என்றாராம்.

திரௌபதியின் துகில் வளர்ந்தது.

யார் எப்போது எதைக் கேட்டாலும்,
இல்லை என்று சொல்லாமல் கொடுத்தான்.
செல்வம் வளந்தது.

மஹாபாரதத்தில், மிக மிக சூக்ஷமமான
நிகழ்ச்சிகள் இவ்விரண்டும்.

கர்ணன் செல்வத்தை
தானமாகக் கொடுத்தான்

திரௌபதி ஒருமுறை
வஸ்திர தானம் செய்திருந்தாள்.

இவ்விருவரின் செயல்கள்,
பிரதி பலன் எதிர்பார்க்காமல்
செய்யப்பட்டவை.

விதைத்தால்தான், விதைத்தது முளைக்கும்.
கர்ணனும், திரௌபதியும் பிரதிபலன் பாராமல்
செய்தது, பல மடங்காகப் பெருகியது !

கொடுத்தது வளர்ந்தது..... !


காசு கொடுத்து வாங்கியது வளருமா ?

கொடிக் கவி

கொடிக் கவி


தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவரில் ஒருவர் ஆன உமாபதி சிவாசாரியார் அவர்கள், நாயன்மார்களுக்குப் பின்னர் வந்த சைவ சித்தாந்தத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமானவராய்க் கருதப் படுகின்றார். 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த இவர், தில்லை வாழ் அந்தணர் அல்லாத ஒருவரைத் தம் குருவாய்க் கொண்டார்.

மறைஞான சம்மந்தர் என்னும் இவரின் குருவிடம் சைவ நூல்களைப் பயின்ற இவர், இயற்றிய பல நூல்களுள் “உண்மை நெறி விளக்கம், வினா-வெண்பா, கொடிக்கவி” ஆகியன மிக மிக முக்கியமானவை. “கோயிற்புராணம்” என்ற பெயரில் சிதம்பரத்தின் தல வரலாற்றையும் எழுதி இருக்கின்றார் இவர். சேக்கிழாரின் வரலாற்றையும் “சேக்கிழார் புராணம்” என்ற பெயரில் இவர் எழுதி இருக்கின்றார். தமிழைப் போலவே வடமொழியிலும் புலமை பெற்றிருந்த இவர், “பெளஷ்கர ஆகமம்” என்னும் நூலுக்கு பாஷ்யமும் எழுதி இருக்கின்றார்.
தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரைக் குருவாய்க் கொள்ளாத காரணத்தால் மற்ற தீட்சிதர்கள் இவரைக் கோயிலில் பூஜை, வழிபாட்டுக்கு அனுமதிக்கவில்லை. ஆகவே இவர் சிதம்பரத்துக்கு வெளியே வாழ்ந்து வந்தார். ஒரு முறை கோயிலின் உற்சவத்தில் கொடியேற்றும் உரிமை இவருடையதாய் இருந்த போதிலும் இவரை விடுத்து இன்னொரு தீட்சிதருக்கு அந்த உரிமை அளிக்கப் பட்டது, ஆனால் கொடி மேலே ஏறவே இல்லை. பின்னர் உமாபதி சிவாசாரியாரின் பக்தியின் பெருமையை உணர்ந்த மற்ற சில தீட்சிதர்களால் அவர் வரவழைக்கப் பட்டார். உமாபதி சிவாசாரியார் ஒவ்வொரு பாடலாகப் பாடப் பாடக் கொடியும் மேலே ஏறி, ஐந்தாவது பாடலில் முழுதும் மேலே ஏறியதாம்.

இவ்வாறு இறைவன் தன் அடியார்க்குச் செய்த அருளையும் இங்கு நினைவு கூருவோம்.
1
ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று                                                     மேலிடிலொன்று
ஒளிக்கு மெனினும் இருளட ராது உள்ளுயிர்க்                                                குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கும் உயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே
2
பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே – தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.
3
வாக்காலு மிக்க மனத்தாலும் எக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை – நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே
குறிக்கும் அருள் நல்கக் கொடி.
4
அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும்                                           நாலெழுத்தும்
பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும்                                                   நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா எழுத்தினையுங்
கூசாமற் காட்டாக் கொடி.
5
அந்த மலமறுத்து இங்கு ஆன்மாவைக் காட்டியதற்கு
அந்த அறிவை அறிவித்து  அங்கு இந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்று 
கூறாமல் கூறக் கொடி.


ஹரி ஓம் !!

Thursday, 1 January 2015


அல்லல்  போம் !
வல் வினை  போம் !
அன்னை  வயிற்றில்  பிறந்த 
தொல்லை போம் !
போகாத்  துயரம் போம் !
நல்ல குணம்  அதிகமாம் :
அருணைக் கோபுரத்துள் 
வீற்றிருக்கும் 
செல்வக் கணபதியை 
கை தொழுதக் கால் !


அருணை  எனப்படும்  திருவண்ணாமலை
கோபுர வாசலில்  வீற்றிருக்கும் ,
செல்வக் கணபதியை ,
கை தொழுது  கும்பிட்டால் ,

அல்லல் போம் .! ....

எல்லா விதமான  தடங்கல்களும்,
தொல்லைகளும்  போகும் !

வல்  வினை போம் !...... 

என்ன செய்தாலும் , பின் தொடர்ந்து
 பயனைத் தரும் , நாம் செய்த  தீய வினைகளும்
அழிந்து போகும் !

அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் !

அடுத்தடுத்து  பிறவிகள் எடுக்க காரணமான ,
முன் வினைகளின்  தொல்லையும் தீர்ந்து போகும் !

போகாத் துயரம் போம் !

என்றும் நீங்காமல்  மனதில் நிற்கும்
துயர நினைவுகள் எல்லாம்
தெளிந்து போகும் !


அது மட்டுமா?

நல்ல குணம்  அதிகமாம் !

நல்ல குணங்கள்  நம்மில் மேன்மேலும்  பெருகும் !


இந்த நாள் இனிய நாள் !
அனைவருக்கும்  இனிய
புத்தாண்டு  வாழ்த்துக்கள் !