Sunday, 1 June 2014



துளியில்  ஒரு கடல் ---  


விமர்சனப் போட்டிக்காக    திரூ. வை. கோபாலகிருஷ்ணன் 
அவர்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட  கதை ,
அவர்  எழுதிய  
 "ஏமாற்றாதே ! ஏமாறாதே !! "    (  VGK 18  )
என்ற  சிறுகதை.

அதற்கான  இணைப்பு : 



கதையின்  தலைப்பிலேயே,  கதையின்  கருத்தைச்  சொல்லிவிட்டார் , ஆசிரியர்.  பிறரை   ஏமாற்ற நினைத்து ,  நீ  ஏமாந்து போகாதே !  என்றதொரு கருத்தினை  ஒரு  சாதாரண , அன்றாடம்  நடக்கும்  ஒரு  நிகழ்ச்சியின்  வாயிலாக  வெளிப்படுத்தியுள்ளார்.  கதையின்  ஊடே , சராசரி  மனிதர்களின்  எண்ணத்தையும் , நிலைப்பாட்டையும்   தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார் ,  கதாசிரியர். 

கதையின்  கடைசி வரியை  , வாழ்க்கையின்  யதார்த்தத்தை , விதியின் விளையாட்டை ,  துர் ஆசைகளின்  துரிதமான  முடிவுரையைக்  குறிப்பதாக " தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார் " என்று எழுதியிருக்கிறார். 

இக்கதையில், கதா நாயகனின்  செயல்பாட்டை, மன நிலையை  பல  வித்தகர்கள்,  வித விதமாக  விமர்சித்து  விடுவார்கள் ! 

ஒரு  வயோதிக, அன்றாட வாழ்வாதரத்திற்காக  உழைக்கும்  பெண்மணியிடம் ,  தேங்காய்  வாங்குவதற்காக  பேரம்  பேசுவது  தவறல்ல,  ஆனால்,  அவளை  ஏமாற்றி  ஒரு தேங்காயை  திருடுவது  என்பது,  ஒரு பண்பான , நாகரீகமான , நல்ல நிலையில் , நல்ல உத்தியோகத்தில் இருக்கும் , மனிதனின்  செயலல்ல  என்பதைச்  சுட்டிக் காட்டவே,  திருடிய தேங்காயை  அழுகலாக்கி, செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக  கதையை  முடித்திருக்கிறார்,  கதாசிரியர். 

" செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைக்கும் "  என்ற வரியை  , ஒரு  சாதாரணமான வரியாகக்  கருத முடியவில்லை,  என்னால். 

" கடமையைச் செய் !  பலனை  நான்  தருகிறேன் ! "  என்று,   கண்ணனின் வாக்காக, கீதை கூறுவதின்  மறு மொழியல்லவா, இக்கதையின்  கடைசி   வரி ! 

" செய்த  தவறுக்கு  சரியான  தண்டனை  உண்டு " .  இக்கருத்தைச் சொல்லாத  புராணங்கள் உண்டா ?  அல்லது கதைகள்தான்  உண்டா ? 

இந்த ஒரு சிறிய வரிக்குள்  ஒளிந்திருக்கும்  கதைகள் எத்தனை, அறிவுரைகள் தாம்  எத்தனை , எத்தனை .. ?

எனக்குத் தோன்றிய சில  கதைகளைப் பட்டியலிட்டு,  விமர்சனத்தை  எழுதியிருக்கிறேன் !

அந்த விமர்சனம்..... இதோ !

O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O


கதையின்  தலைப்பிலேயே,  கதையின்  கருத்தைச்  சொல்லிவிட்டார் , ஆசிரியர்.  பிறரை   ஏமாற்ற நினைத்து ,  நீ  ஏமாந்து போகாதே !  என்றதொரு கருத்தினை  ஒரு  சாதாரண , அன்றாடம்  நடக்கும்  ஒரு  நிகழ்ச்சியின்  வாயிலாக  வெளிப்படுத்தியுள்ளார்.  கதையின்  ஊடே , சராசரி  மனிதர்களின்  எண்ணத்தையும் , நிலைப்பாட்டையும்   தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார் ,  கதாசிரியர். 


வண்டியில்  பெட்ரோலை  நிரப்பிக் கொண்டு,  ஒரு  பெரிய  செருப்புக் கடைக்கோ,  ஜவுளிக்கடைக்கோ, அல்லது  நகைக்கடைக்கோ சென்று  எதையும்  பேரம்  பேசாமல்,  பேச முடியாமல் ,  கேட்கும்  காசைக் கொடுத்து விட்டு  வரும்  மனிதர்கள்,  ஏழு ரூபாய்க்கு  வாங்கும்  தேங்காய்க்கு ,  அதுவும்  ஒரு  தள்ளாத,  வயது முதிந்த  கிழவியிடமோ  ,  அல்லது,  அன்றாட வாழ்வாதாரத்திற்காக  உழைக்கும்  சிறு வியாபாரிகளிடமோ,  பேரம்  பேசும்  அல்பத்தனத்தை  எள்ளி  நகையாடியிருக்கிறார் ,  கதாசிரியர்.  

இக்கதையின்  நாயகன் ,  பதினைந்து  வருடங்களுக்கு  முன்னாள்  நிறைவேற்ற  வேண்டிய  வேண்டுதலுக்காக , ஒரு கிழவியிடம்  பன்னிரண்டு  தேங்காய்களை  பேரம் பேசி ,  பதிமூன்று  காய்களை  எடுத்துக் கொண்டு,  பன்னிரண்டு காய்களுக்கு  மட்டும் கணக்குப்   போட்டு, காசைக்  கொடுக்கும்  போது   அதிலும்  விலையைக் குறைத்த ,
சாமர்த்தியமான  சந்தர்ப்பவாதி !  

அப்போதும்  ஒரு  ஆதங்கம் , அவனுக்கு !  பதினைந்து  வருடங்களுக்கு  முன்னரே ,  இந்த  பிரார்த்தனையை நிறைவேற்றி இருந்தால்,  இந்த  செலவு  மிகவும்  குறைந்திருக்குமே  என்று !  



" தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார் "   என்ற  கடைசி  வரியுடன்  கதையை  முடித்திருக்கிறார்,  ஆசிரியர் . கதாசிரியரின் இந்த  கருத்துக்கு,   மாற்றோ  அல்லது  எதிர்  வாதமோ இருக்கவே  முடியாது !   

மற்றவர்களை  ஏமாற்றி  வெற்றி  பெற வேண்டும்  என்ற  எண்ணம்  படைத்தவர்களுக்கெல்லம்  கிடைத்த  பரிசு,   தண்டனையே ! பல  இடங்களில்  மரணமே  பரிசாக  வழங்கப்பட்டிருக்கிறது, புராணங்களிலும்,  கதைகளிலும் !  என் அறிவுக்கு எட்டிய  சிலவற்றைப் பட்டியலிடுகின்றேன் !

தேவர்களின் புகழையும் , செல்வத்தையும்  காப்பதற்காக ,  விசித்திர வசு 
என்ற  அசுர குருவை  குருவாகக் கொண்டு  ஒரு  யாகத்தை, பிரமனின்  ஆணைப்படி  தொடங்குகிறான் , இந்திரன்.  ஆனால்,  குருவாக  அமர்ந்திருக்கும்  அசுர  குரு , இந்திரனை ஏமாற்றி,  அசுரர்களுக்கு  ஏதுவான  மந்திரங்களைச் சொல்ல,  விபரீதமான  விளைவுகள்  ஏற்படுகிறது.  இந்திரனை  ஏமாற்றிய,  விசித்திர  வசுவுக்கு  கிடைத்த  தண்டணை ,  இந்திரனின்  வஜ்ராயுதத்தால்  மரணம்.

இராமாயணத்தில்,  இராவணனுக்கு  உதவுவதற்காக,  பொன்மானாக  வேடமிட்டு,  இராமனையும், சீதையையும் ஏமாற்றிய  மாரீசனுக்கு கிடைத்த பரிசு,  ராம பாணத்தால்  மரணம்.

அதே  இராமாயணத்தில்,  எதிரிகளை  வெல்ல வேண்டும்  என்ற  எண்ணத்தில்,  எதிரிகளின்  பலத்தில்  சரிபாதியை  கவர்ந்துவிடும்  வல்லமை படைத்த  ஒரு மாலையை அணிந்து கொண்டு ,  எதிரிகளை  ஏமாற்றி, தந்திரமாக  அவர்களை  பலமிழக்கச் செய்து,  பல  வெற்றிகளை  தனதாக்கிக் கொண்ட  வாலிக்கு  கிடைத்த பரிசு,  ராம பாணத்தால் மரணம். 

மகா  பாரதத்தில்,  தான்  ஒரு  அந்தணன் என்று  பொய் உரைத்து,  பரசுராமரை  ஏமாற்றி ,  வித்தை கற்றுக் கொண்ட  கர்ணனுக்கு  கிடைத்த பரிசு,  "  கற்றுக் கொண்ட  வித்தை,  தக்க சமயத்தில்  பயன்படாது  போகட்டும் "  என்ற  சாபமும்,  அதன் விளைவாக  அவன்  மரணமும் .

இங்கு,  மகா பாரத  நிகழ்வுகளை  மட்டும்  கருத்தில் கொள்கிறேன், என் துணைக்கு ! 

அன்று ,  பரசுராமரை   ஏமாற்றி, கற்றுக் கொண்ட  போர் வித்தைகளும் ,
தந்திரங்களும்  கர்ணனுக்கு  பயன் பட்டது,  பல நாட்டு  மன்னர்களை  வெற்றி கொள்ள !  அப்படி  கர்ணனிடம்  தோற்றுப் போன  மன்னர்கள்தாம் 
துரியோதனனுக்கு  துணையாய் இருந்தனர்,  மகா பாரதப் போரில் .

இன்று,  கதா நாயகன்  பையிலிருக்கும்  பதிமூன்று  தேங்காய்களில் ,
பன்னிரண்டு  காசு கொடுத்து  வாங்கியது,  மற்றொன்று   ஏமாற்றியது !
உச்சிப் பிள்ளையார்,  அடிவாரத்திலிருக்கும் கீழ்  பிள்ளையார்,  சுற்றியிருக்கும் வீதிகளில் உள்ள  பிள்ளையார்கள்  பத்து  என  மொத்தம்  பன்னிரண்டு  தேங்காய்களை பையிலிருந்து  எடுத்து  சிதறு காய்களாக  உடைத்திருக்கிறார்,  கதா நாயகன் .    அனைத்துக் காய்களும் மிகவும் அருமையாகவும், பளீரென்று வெளுப்பாகவும், நல்ல முற்றிய காய்களாகவும், தூள்தூளாக உடைந்து சிதறியிருக்கிறது.   வேலை  கிடைக்க வேண்டும்  என்ற  எண்ணத்தில்  பதினைந்து  வருடங்களுக்கு முன்னால்  நேர்ந்து கொண்டது , இன்று நிறைவேறியது,  வேலை  கிடைத்த பின்  சம்பாத்தித்த  பணத்தைக் கொண்டு வாங்கிய  தேங்காய்களால்.  அவர்  காசு கொடுத்து வாங்கிய  பன்னிரண்டு  தேங்காய்களும்  பயன்பட்டு விட்டது,  பிரார்த்தனையை  நிறைவேற்ற !

அன்று,  விஜயனை  வெற்றி கொள்வதற்காக  கர்ணன், பரசுராமரை  ஏமாற்றி     கற்ற வித்தை ,  பிரமாஸ்திரம்.  அது அவனுக்கு  உதவவில்லை,  விஜயனுடன்  போரிடும்போது ! 

இன்று,  நேர்த்திகடனை  செலுத்திவிட்டு,  தேங்காய்க்காரியிடம்  ஏமாற்றிய  ஒரு தேங்காயுடன்  வீடு  திரும்புகிறார்,  கதா நாயகன் .  உடைத்துப் பார்த்தால் , அந்த   தேங்காய்   அழுகல்.  பதிமூன்று தேங்காய்களில் , எது அழுகல் என்று  எடுத்தவருக்கும் தெரியாது,  விற்றவளுக்கும் தெரியாது. ஆனால் ,  ஒரே  பையிலிருந்த  13 காய்களில்,  12 நல்ல காய்கள் மட்டும்  சேர வேண்டிய  இடத்தை  சேர்ந்துவிட்டது.  ஏமாற்றிய  ஒன்று மட்டும் , ஏமாற்றியவருக்கு  பயன்படவில்லை ! 


இதை  விந்தை  என்பதா ?  விதி  என்பதா...  ?

எதுவாயிருந்தாலும்,  செய்த தவறுக்கு சரியான தண்டனை என்பதுதான்  தீர்வு. 

கதையின்     தலைப்பு  " ஏமாற்றாதே , ஏமாற்றாதே ,  ஏமாறாதே,  ஏமாறாதே ! "  என்ற  M . G . R . இன்  படப் பாடலை  நினைவுறுத்துகிறது.   அதுமட்டுமல்ல ,

ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு 
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு 
பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு 
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு 
இன்றோடு போகட்டும் திருந்தி விடு 
இன்றோடு போகட்டும் திருந்தி விடு 
உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு

என்ற  மற்ற   வரிகளையும்  முணுமுணுக்க  வைக்கிறது. 

இன்றைய சமுதாயத்திற்கு நல்லதொரு  கருத்தினையும், படிப்பினையையும் ஊட்டக் கூடிய  ஒரு சிறந்த   கதையைப் படைத்த கதாசிரியருக்கு, ஆயிரம்  நன்றிகள்,  அனந்த கோடி நமஸ்காரங்கள் !!


O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O






   























 

























No comments:

Post a Comment