Saturday, 14 June 2014


" முன்னெச்சரிக்கை முகுந்தன் ! "   ( VGK 20  )

எந்த  வேலையை செய்தாலும்  அதற்கு  முன் எச்சரிக்கை தேவைதான்.  இதில்  தவறுவதால் ஏற்படும்  சங்கடங்கள்  எல்லோர்  வாழ்க்கையிலும்  ஏதாவது  இருக்கும் . இதில்  கிடைக்கும் அனுபவங்கள்  சிலருக்கு  வேடிக்கையாக இருக்கும் , சிலருக்கு வேதனையாக இருக்கும்.  இதைத்தான்  உணர்த்தியிருக்கிறார கதாசிரியர், தன்னுடைய " முன்னெச்சரிக்கை  முகுந்தன் " என்ற கதையில். 

அதற்கான இணைப்பு:-  


என்னுடைய  விமர்சனம்  இரண்டாம்  பரிசை  வென்றிருக்கிறது !
என்  எழுத்தினை  தேர்வு செய்து, பரிசுக்கு  உரியதாக்கிய  திரு . நடுவர்  அவர்களுக்கும், 
கதாசிரியர்  திரு. VGK   அவர்களுக்கும்  என் மனமார்ந்த நன்றிகள் !


என் எழுத்துக்கள் !


கதாநாயகனுக்கு  ஐம்பது வயது ! சில வியாதிகளுடன்,  ஞாபக மறதியும்  வேறு ! ஞாபக மறதியினால் வரும்  தொல்லைகளைப் போக்க , கதா நாயகன்  கையாண்ட  யுக்திதான்       " செக் லிஸ்ட் " .  

அலுவலகத்திற்கு  செல்லும்  அவசரத்தில், மறந்து போகும்  விஷயங்கள் பல ! பர்சை  மறப்பது , அலுவலக / மேஜை ட்ராயரின்  சாவியை மறப்பது, சில முக்கியமான பைல்களை  வீட்டிலேயே  வைத்து விட்டு வருவது  அல்லது அதற்கு பதிலாக  வேறு  எதையாவது  எடுத்துக் கொண்டு  வருவது  போன்ற  நிகழ்ச்சிகள்  சர்வ சாதாரணம். இதைத் தவிர்ப்பதற்காக ,  கதாசிரியர்  தன் கதா நாயகன்  மூலமாக  நமக்கு கொடுத்திருக்கும்  அறிவுரைதான் " செக் லிஸ்ட் " .  தான் சொல்ல நினைப்பதை  நேரடியாக  சொல்லாமல் ,  ( நகைச் ) சுவையாக , கதா நாயகனின்  செயல்களாக  விவரித்திருக்கிறார் . 

இந்த  செக் லிஸ்டில் கதாசிரியர்  பட்டியலிட்டு  இருப்பது :

அலுவலக அடையாள அட்டை, 
வீட்டு விலாசம் + தொலைபேசி எண்களுடன் கூடிய விசிடிங் கார்டு, 
பஸ் சார்ஜுக்கு வேண்டிய சரியான சில்லரைகளுடன் கூடிய மணிபர்ஸ், 
அதில் ஒரு தனி அறையில் ரிஸர்வ் கேஷ் ஆக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு, மூக்குக்கண்ணாடி + அதற்கான கூடு, 
மூன்று வேளைகளுக்கான மருந்து மாத்திரைகள், 
டிபன் பாக்ஸ், 
வெற்றிலை பாக்குப்பெட்டி சுண்ணாம்பு டப்பியுடன், 
பல் குத்தும் குச்சிகள், 
காது குடையும் பஞ்சுக்குச்சிகள், 
கைக்கடிகாரம், 
பேனா, சின்ன பாக்கெட் நோட்டு, 
ஆபீஸ் ஃபைல்கள், 
செல்போன், சார்ஜர், 
ஆபீஸ் டிராயர் சாவி, 
குடை, 
பஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள் அல்லது செய்தித்தாள், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட், கர்சீஃப், 
துணிப்பை - ஆபீஸ் முடிந்து திரும்புகையில் காய்கறி  வாங்க ,
இடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு, 
வேஷ்டி, துண்டு, 
செருப்புகள் . 

இந்த  பட்டியலில் , எதை தவறு என்று சுட்டிக் காட்ட முடியும் ?  அல்லது  தேவையற்றது என்று சொல்ல முடியும் ?  

வேஷ்டியும், துண்டும் , அரைஞாண்   கயிறும் சிரிப்பை  உண்டாக்கலாம் ! 

ஆண்களுக்கே  வரக்கூடிய  " குடல் இறக்கம் " என்ற நோயை எளிதில் தடுக்கக் கூடிய வழி இந்த அரைஞாண்  கயிற்றை  உபயோகிப்பதுதான் . இதை  அறிந்ததால்தான், கதாசிரியர் இதை  நாயகனின் செயலாக  விவரித்திருக்கிறார். 

வேஷ்டியும், துண்டும் பட்டியலில்  இடம் பெற்றதற்கு காரணம்,  நாயகனின்  சோகமான அனுபவம். "  அது நடந்து முடிந்த கதை, இப்போதுதான்  ஆடையெல்லாம்  சீராக  இருக்கிறதே, இந்த  வீண் சுமை எதற்கு ? " என்ற வாசகர்களின் கேள்விக்கு , நாயகனின் முன்னெச்சரிக்கைதான்  காரணம் என்பதுதான்  பதில். இந்த வேஷ்டியும் , துண்டும் இதுவரை  உபயோகப்படவில்லை,  ஆனால்  இதற்கு மேல் , கதாநாயகனுக்கோ அல்லது வேறு யாருக்கோ , சமயத்தில் சஞ்சீவியாக  உபயோகப்படலாம் அல்லவா ?

சனிகிழமை என்பதால்,  அரை நாள் மட்டும் ஆபீசில்  தலையைக் காட்டிவிட்டு  வீட்டுக் வந்த  கதாநாயகன் , மறு நாள்  சென்னை செல்ல வேண்டும் , தன் மகனுக்கு  பெண்         பார்ப்பதற்காக !  சாதரணமாகவே  முன் எச்சரிக்கையுடன்  சும்மா இருப்பாரா? 

மறுநாள்  சென்னை செல்ல தேவையானதை  எல்லாம்  " செக் லிஸ்ட் " போட்டு  சரி  பார்த்து வைத்து விட்டு, ஓட்டலில் இருந்து வந்த உணவையும் உண்டு விட்டு  உறங்க  ஆரம்பிக்கிறார். அப்போது  அவருடைய  எண்ணமெல்லாம், மறு நாள்  காலை,  6.30க்கு புறப்படும்  பல்லவன் எக்ஸ்பிரஸ்ஸை  தவற விடக்கூடாது  என்பது தான் ! 

உறங்கிக்  கொண்டிருந்த  அவரை  எழுப்பியது, மழை !  கடிகாரத்தைப்  பார்த்தார் . மணி  5.30.   

அவர் எண்ணமெல்லாம், 6.39க்குள்  ரயிலைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் !  போர்க்கால நடவடிக்கை போல , எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, புறப்பட்டு விட்டார், ரயில் நிலையத்திற்கு ! 

கொட்டுகின்ற  மழையில்,  மரத்தில் இருக்கும்  கிளி பொம்மையை  குறி வைத்த  விஜயனைப் போல் , வேறு எதைப்பற்றியும்  யோசிக்காமல், கவலைப்படாமல்,  6.30க்கு  திருச்சியில் இருந்து புறப்படும் " பல்லவனை " பிடிப்பதற்காக, ஸ்ரீரங்கம்  இரயில்  நிலையத்துக்கும்  வந்து விடுகிறார், கதா நாயகன் ! 

இரயில்  நிலையத்தில்தான் தெரிகிறது, அவர்  ஞாயிறு  காலை 6.30க்கு  புறப்படும்  பல்லவன் எக்ஸ்பிரசுக்கு அவர் சனிக்கிழமை மாலை  6.30 க்கே  வந்திருப்பது !  அவரைப் பார்த்து எள்ளி நகையாடுவது, பிளாட்பாரத்தில் இருக்கும்  கடிகாரமும், வாசகர்களும் தான் !

இதற்கு காரணம், "  எவ்வளவு  முன் எச்சரிக்கையுடன்  இருந்தாலும், கடைசியில் கோட்டை  விட்டு விட்டாயே,  முன்னெச்சரிக்கை  முகுந்தா ,  வீட்டை விட்டு  புறப்படும் முன் , இன்று  என்ன  கிழமை என்று  பார்த்துவிட்டு  புறப்படக்கூடாதா ? "  என்ற எண்ணம்தான் ! 

ஆனால்.  கதா நாயகனின் தன்னம்பிக்கை  என்னை பிரமிக்க வைக்கிறது .    

" எல்லாவற்றையும்  சரி பார்த்துவிட்டேன், நான் செய்வது சரியே " என்ற கதா நாயகனின் எண்ணமும், தீர்மானமும் கதாநாயகனை பாராட்ட வைக்கிறது .

சிறு  தவறு  நடந்து விட்டது !  அதற்கு காரணம்,  அதிதமான  முன்னெச்சரிக்கையா ? அல்லது , அந்த பாழாய் போன  ஞாபக மறதியா ? இதற்கு  ஆறுதலாக  கதா நாயகன் , தனக்குத்தானே கூறிக் கொண்ட சமாதானம், " அன்றைய ராசி பலனில், அவருடைய ராசிக்கு குறிப்பிடப் பட்டிருந்த  ' வீண்  செலவும், வீண் அலைச்சலும் " .   

எனக்கு  நம்பிக்கை இருக்கிறது, அடுத்த முறை  கதா நாயகன் இந்த தவறை செய்ய மாட்டார்  என்று ! ஏனென்றால்,  " இன்றைய தேதியையும் , கிழமையையும் சரி பார்த்துக் கொள் "  என்ற வாசகம் அவருடைய  " செக் லிஸ்டில் "  சேர்ந்துவிடும் !!

o-o-o-o-o-o-o-o





















































என்று சகல சாமான்களையும் லிஸ்ட் போட்டு, வீட்டினுள் ஒரு பெரிய கரும்பலகையில் எழுதி, கண்ணில் படும்படியாக தொங்க விட்டிருப்பார். ஏழு மணிக்கு பஸ் பிடிக்க ஆறரை மணிக்கே ரெடியாகி லிஸ்டில் உள்ளபடி எல்லா சாமான்களையும் தினமும் ஒரு முறை சரிபார்த்துக்கொள்வார். பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்பது உள்பட


1 comment:

  1. பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete