Wednesday 9 April 2014

சீதை  வளர்த்த  கிளி

அயோத்தி  மாநகரில்  சீதா பிராட்டி  அழகிய  கிளி  ஒன்றை  வளர்த்து  வந்தார் . அக்கிளியிடம்  பிராட்டிக்கு  மிக்க  அன்பு உண்டு . அந்த  கிளிக்கு  பெயர்  ஒன்று   சூட்ட வேண்டும்  என்று  ஆவல் கொண்டாள்  மிதிலைச்  செல்வி. 

எக்காரியத்தைச் செய்தாலும்,  மருந்தனைய  நாயகனின்  ஆலோசனையைக்  கேட்டே  செய்வாள்,  சீதை.  எனவே  கிளியின்  பெயர்  பற்றிய  குழப்பத்தை  இராமபிரானிடம்  கூறினாள்.  

"  சுவாமி,  நான்  ஆசையுடன்  வளர்க்கும்  இந்த கிளிக்கு  பெயர்  ஒன்று  சூட்ட  விரும்புகின்றேன் . எந்த  பெயர்  வைப்பது  என்பதில்தான்  எனக்கு  குழப்பம் "  என்றாள்  சீதா பிராட்டி.

ஐயன்  புன்னகைத்து , "  சீதா,  இதிலென்ன  குழப்பம் ?  என் தாயாகிய  கைகேயியின்  பெயரையே  சூட்டிவிடு   "  என  திருவாய்  மலர்கிறார்.  

சீதா பிராட்டிக்கு  வியப்பாக இருந்தது,  
" தன்னைப் பெற்ற அன்னை கோசலையின்  பெயரைச்  சூட்டாமல், 
தந்தையின்  பெயரைச்  சூட்டாமல், 
தம்பியரின்  பெயரைச்  சூட்டாமல், 
சிற்றன்னையான  கைகேயியின்  பெயரைச்  சூட்டச் சொல்கிறாரே "  என்று.

"  சுவாமிக்கு, தன்  தாயைக் காட்டிலும் ,  சிற்றன்னை  கைகேயி  மேல் உள்ள  அன்பு தான்  எவ்வளவு  பெரிது  "  என்று  பூரிக்கிரார்  பிராட்டியார். 

நாயகன்  கூறியவாறே  கிளிக்கு  " கைகேயி "  என்ற  பெயரையும்  வைத்துவிட்டார்  பிராட்டியார்.  ஆனால்,  இதைப் பற்றி  நாயகனிடம்  எந்தக் கேள்வியும்  கேட்கவில்லை.

"  பெற்ற  அன்னையை விட, தாங்கள்,   தங்களின்  சிற்றன்னையிடம்  அதிக  அன்பு  பாராட்டுவதற்கு  காரணம் என்ன  "  

என்று  கேட்டுவிட்டால்,  இராமபிரான் தயங்கக் கூடும்  அல்லது  இந்த கேள்வி  அவருக்கு  தர்ம  சங்கடத்தை  ஏற்படுத்தும்  என்று  எண்ணி,  தன்  ஊகங்களை   அப்ப்டியே  மனதில்   அடக்கி வைத்துக்  கொண்டார் ,  பிராட்டியார்.  ஆனாலும்,   இந்தச்   சம்பவத்தை   மறக்கவேயில்லை.

கைகேயி  தசரதனிடம்  வரம் பெற்று ,  ராமனை  காட்டுக்கு  அனுப்பும்போது இந்த  சம்பவம்  மனதில்  நெருடுகிறது.   தன்  நாயகன்  விசேஷ  அன்பு செலுத்திய  கைகேயியே  அவரின்  வனவாசத்திற்கு  காரணமானார்  என்ற போது .....  பிராட்டி  சிந்திக்கிறார்.

பொறி தட்டினாற்போல  ஒரு  உண்மை  பளிச்சிடுகிறது.  ஆயினும்,  அதை  யாரிடமும்  வெளிப்படுத்தவில்லை,  பிராட்டியார்.

அதை  வெளிப்படுத்த  வேணடிய நேரமும்,  சூழ்நிலையம்  உருவாகிறது.

இராவணனால்  சிறையெடுக்கப்பட்டு,  அசோக வனத்தில்  தனித்திருக்கும்  சீதா  பிராட்டியார்.

ராம தூதன்  அனுமான்,  பிராட்டியாரைச் சந்தித்து  இராமன்  கூறிய  செய்திகளை கூறி ,  பின் பிராட்டியாரிடம்  விடை பெற,  பிராட்டியும்  இராமனுக்கு  தன்   நினைவாக  .சூடாமணியை  கொடுத்து,  தன் பங்காக  ஒரு  செய்தியையும்  சொல்லச் சொல்லுகிறாள். 

அந்த  செய்தி,  இராமன்  கிளிக்கு  பெயர் வைத்த  நிகழ்ச்சிதான்.

இதைக்  கேட்ட  அனுமனுக்கு  வியப்பு.  கூடவே  ஒரு  ஐயம். 

"  ஸ்ரீ ராமர், தன்  சிற்றன்னை  மேலிருந்த  அன்பு  அனைவரும்  அறிந்ததே !  அப்படியிருக்க,  ஓர் கிளிக்கு  பெயர்  சூட்டுவதன்மூலம்  தன் அன்பை  இராமபிரான்  வெளிப்படுத்துவாரா ? "  என்று. 

"  நிச்சயம்  இருக்காது,  இதற்கு  வேறு  ஏதோ  ஒரு  காரணம்  இருக்க வேண்டும்  "  என்ற  எண்ணம்  மனதில்  தோன்ற,  சீதா பிராட்டியை  நோக்குகிறார்,  அனுமன்.

சீதா பிராட்டியோ,  பொருள்  நிறைந்த  பார்வையுடன்  அனுமனைப் பார்த்து  புன்னகைக்கிறார்.

அந்த  புன்னகையைப்  பார்த்தவுடன் ,  அந்த  உண்மை  பளிச்சிடுகிறது  அனுமனுக்கு.

"  கிளி  எப்போதும்  தானே  எதையும்  சொல்வதில்லை.
    பிறர்  சொல்லிக்கொடுத்ததையே  திருப்பிச் சொல்லும்  குணம்  கிளிக்கு. 
    கூனி  சொல்லிக் கொடுத்ததையே  தசரதனிடம்  சொல்லி,  இராமன்                காட்டிற்கு  செல்ல வேண்டும்  என்று  வரம்  வாங்கியிருக்கிறாள்,                      கைகேயி .
   இதை  முன்பே  உணர்ந்திருந்ததால்தான்,  கிளிக்கு  கைகேயியின்                    பெயரைச்  சூட்டியிருக்கிறார்,  அண்ணல்  இராம பிரான் "

இந்த  உண்மையை  உணர்ந்தவுடன்,  அனுமனின்  மனது  "  ராம்,  ராம்  " 
என்று  கோஷமிட,  அவன் முகத்திலும்  ஒரு  சிறு  புன்னகை !


   











ரான் 







No comments:

Post a Comment