Thursday 30 April 2020

பலராமன் அவதாரம்

பலராமன் அவதாரம்






பெருமாளின் அவதாரங்களில் 
இது 8வது அவதாரமாகும்: 

கோகுலத்தில் விஷ்ணுவின் 
அம்சமாக வசுதேவருக்குப் 
பிறந்த பிள்ளை பலராமன். 
பெருமாள் வெண்ணிறத்தில் 
தோன்றிய அவதாரம் இது. 
ராமாவதாரத்தில் தம்பியாக 
இருந்த லட்சுமணனை தனக்கு 
அண்ணனாக விஷ்ணு 
ஏற்றதாகக் கூறுவர்.

அசுரர்களே அரசுபரிபாலனம் 

செய்தனர் என்றாலும் அவர்களை 
விட்டு ஆணவம் குறையவில்லை. 
அதனால் அவர்களுடைய பாரம் 
பூமிதேவியை வருந்திற்று. அவள் 
தன் குறையைப் பிரம்ம தேவனிடம் 
முறையிட்டாள். பிரம்மா 
பாற்கடலுக்குப் போய் புருஷக்தம் 
என்ற மந்திரத்தால் தேவர்களுடன் 
கூடிப் பரந்தாமனைத் துதித்தார். 
அப்போது ஓர் அசரீரி வாக்கு 
அவர்களுக்கு கேட்டது. 

பிரம்மதேவனே! தேவர்களே! 
பூமியின் துயரத்தை நான் 
அறிகிறேன். தேவர்கள் 
யதுகுலத்தில் பிறக்கட்டும். 
தேவமாதரும் கோபியராக 
அங்கு ஜனனம் செய்யட்டும். 
நீங்கள் யது குலத்தில் பிறந்து 
என் வரவுக்காகக் காத்திருங்கள்! 
என்று கட்டளை பிறந்தது. அதன் 
பின் தன் லோகத்திற்கு அவர்கள் 
போயினர். சூரசேனன் என்ற அசுரன் 
மதுரையை ஆண்டு வந்தான். 

மத்ரா என்றும் மதுரையைக் 

கூறுவார்கள். சூரசேனனுக்கு 
ஒரு தம்பி. அவன் பெயர் 
உக்கிரசேனன். அவன் மகன் 
கம்ஸன். ராஜகுமாரியாகிய 
தேவகிக்கும், வசுதேவர் 
என்பவருக்கும் திருமணம் நடந்தது. 
திருமணம் ஆனதும் தம்பதியர் 
திருமண மண்டபத்தில் இருந்து 
ஊர்வலமாக வீடு திரும்ப ரதத்தில் 
ஏறினார்கள். அந்த ரதத்தை 
ஓட்டுவதற்கு தேவகியின் சிற்றப்பா
 மகனும் அண்ணனுமாகிய கம்ஸன் 
குதிரைகளின் கடிவாளத்தைக் 
கையில் பிடித்தான். ஊர்வலம் சீரும் 
சிறப்புமாக மங்கள வாத்தியங்கள் 
முழங்க வந்து கொண்டு இருந்தது. 
அப்போது கம்ஸனுக்கு ஓர் அசரீரி கேட்டது. 

மதியற்றவனே! கம்ஸா, கேள்! 
உன் தங்கை தேவகிக்கு நீ 
ரதசாரதியாக இப்போது இருக்கிறாய். 
அந்த ராஜகுமாரியின் எட்டாவது 
குழந்தை உன் உயிரை வாங்கப் 
போகிறது என்று அசரீரி சொல்லியது. 

அப்போதே கம்ஸன் தேவகியைக் 
கொன்று விட்டால் தன் மரணப் 
பிரச்சனையே இல்லாமல் 
போய்விடும் என்று வாளை 
உருவி அவளைக் கொல்லப் 
போனான். அப்போது தேவகியை 
மணந்த வசுதேவன் கம்சனிடம் 
நல்ல வார்த்தை சொல்லி, நீ என் 
மனைவியாகிய புதுமணப் பெண்ணை, 
மணக்கோலம் கலையாது இருக்கும் 
கன்னியைக் கொல்லும் பாவம் 
மிகவும் கொடியது. மேலும் அசரீரி 
இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளால் 
தானே உனக்கு மரணம் வரும் 
எனச் சொல்லியது? நான் இவளுக்குப் 
பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் 
கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை 
உன் இஷ்டப்படி வதம் செய்வதானால் 
செய்து கொள! என்று தன் மனைவிக்கு
 வந்த ஆபத்தை நீக்கி கொண்டார். 
சிசுக்கள் பிறந்தவுடன் இதைப்பற்றி 
முடிவு செய்து கொள்வோம் என்று 
வசுதேவர் தீர்மானித்து அப்படிச் 
சொன்னார். அதனால் சினம் தணிந்த 
கம்ஸன் தேவகியை விட்டுவிட்டான்.

ஒருநாள் நாரதர் கம்சனை சந்தித்து, 

ஆயர்பாடியில் தேவர்கள் 
அவதரித்திருக்கிறார்கள். 
அவர்களுடைய தலைவன் 
நந்தனும், யாதவரும் உனக்குப் 
பகைவர் என்று சொல்லி புவியின் 
பாரம்தீர பிரம்மாவால் செய்த 
ஏற்பாட்டையும் எடுத்துச் சொன்னார். 

உடனே கம்ஸன் தந்திரமாக 
வசுதேவரையும், தேவகியையும் 
சிறையிட்டான். அவர்களுடன் 
தன் தந்தை உக்கிரசேனனையும் 
சிறையில் அடைத்து ராஜ்ஜியத்தையும் 
தான் ஏற்றுக் கொண்டாள். 
தன் அசுர நண்பர்களுடன் சேர்ந்து 
யதுகுலத்தாரை அழிப்பதிலேயே 
குறியாக இருந்தான். அதனால் 
யதுக்கள் பயந்து வேற பல 
நாடுகளில் போய் தங்கினார்கள். 

தேவகிக்குப் பிறந்த ஆறு 
குழந்தைகளையும் கொன்றான். 
ஏழாவது சிசுவை தேவகி 
கருத்தரித்தாள். அந்தக் கருவில் 
ஆதிசேஷனே உருவானான். 
அச்சமயம் மகாவிஷ்ணு தனது 
யோக மாயை மூலம் ஓர் ஏற்பாடு 
செய்தார். அவர் தேவியை வரவழைத்து, 

தேவி! வசுதேவருக்கு ரோகிணி 
என்ற வேறு ஒரு மனைவி உண்டு. 
அவளை அவர் ஆயர்பாடியில் 
ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறார். 
மதுராபுரியில் சிறையில் வாடும் 
தேவகியின் வயிற்றில் ஆதிசேஷன் 
கருக்கொண்டிருக்கிறான். நீ அந்தக் 
குழந்தையை ரோகிணியின் 
கர்ப்பத்திற்கு மாற்றி விடு. 
அத்துடன் நீ நந்தகோபன் மனைவி 
யசோதையிடம் பெண்ணாகப் 
பிறக்க வேண்டும். நான் தேவகியின் 
வயிற்றில் திருஅவதாரம் செய்யப் 
போகிறேன். இதனால் சகல மனோ 
பீஷ்டங்களையும் அளிப்பதற்குக் 
காரணமானவளாக ஈஸ்வரியாக காளி, 
வைஷ்ணவி என்றும் பின்னர் மக்கள் 
உன்னை வழிபடுவார்கள் என்றார். 

பரந்தாமன் கட்டளைப்படி மாயாதேவி 
தேவகியின் கர்ப்பத்திலிருந்து 
குழந்தையை ரோகிணி கர்ப்பத்திற்கு 
மாற்றினாள். தேவகியின் கர்ப்பம் 
அவள் சிறையில் வாடும் வேதனையிலும் 
கம்ஸன் தரும் தொல்லைகளாலும் 
சிதைந்து போயிற்று என அனைவரும் 
கம்சனை ஏசினார்கள்.

இச்சமயம் ரோகிணியின் மைந்தனாக 

ஆதிசேஷன் பிறந்தான். அவனுக்கு 
யதுகுல குருவாகிய கர்கர் மிகவும் 
ரகசியமாகப் பசுமடத்தில் சடங்குகளை 
செய்து ராமன் என்று பெயரிட்டார். 
ராமன் என்றால் சமிக்கச் செய்வான். 
தவிர இவன் நல்ல பலசாலியாக 
இருப்பான் என்பதால் இவனை 
பலராமன் எனப் பெயரிட்டு அழைப்போம் 
என்றார் கர்கர். 

நரகாசுர வதத்தைக் கிருஷ்ணன் 
செய்த நாளைத்தான் நாம் 
தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் 
என்று ஒரு சிலர் சொல்வதுண்டு. 
அந்த நரகாசுரனுக்கு துவிவிதன் 
என்ற ஒரு வானரத்தலைவன் இருந்தான். 
அவனுக்கு மயிந்தன் என்ற சகோதரன் 
உண்டு. கிருஷ்ணன் நரகாசுரனைக் 
கொன்றதைக் கண்டு வானரத் தலைவன் 
கடும் கோபம் கொண்டான். அவன் தான் 
எப்படியும் கிருஷ்ணனைக் கொன்று 
விடுவதாகச் சொல்லி பல 
அட்டகாசங்களைச் செய்தான். 

அந்த வைராக்கியத்தில் நேரே 

கோவர்த்தனகிரியை அடைந்தான். 
அங்கே தவம் செய்து கொண்டு 
இருந்த மகரிஷிகளை அவன் 
அடித்தும் உதைத்தும் இம்சை 
செய்தான். அந்த நேரத்தில் 
ரைவத மலையில் பலராமன் 
கோபியர்களுடன் ஆனந்தமாக 
இருந்தான். அதைப் பார்த்த வானரத் 
தலைவன், பலராமன் மீது பாய்ந்தான். 

அவன் அணிந்திருந்த பட்டு பீதாம்பரத்தைப்
 பற்றி இழுத்துக் கிழித்தான். சுக்கல் 
சுக்கலாகக் கிழித்து தூர எறிந்தான். 
மரத்தை வேரோடு பிடுங்கி பலராமனுடன் 
இருந்த கோபியரை அடித்து விரட்டினான். 
இதைப் பார்த்ததும் பலராமனுக்குக் 
கோபம் வந்தது. உடனே வானரனைக்
 கட்டிப் பிடித்தான். அச்சமயம் அவன் 
பலராமனை முஷ்டிகளால் குத்தித் 
தள்ளித் துன்புறுத்தினான். ஆனால் 
பலராமனோ அவனைப் பிடித்து 
கைமுஷ்டியால் அவன் தலையில் 
ஒரு குட்டு குட்டினான். அந்த க்ஷணத்திலேயே 
அவன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் 
ஒழுக அந்த இடத்திலேயே இறந்தான். 
இதே போல கோவர்த்தன கிரியில் 
பலராமன் கண்ணனுடன் மாடு 
மேய்த்து வந்தான். அப்போது ஸ்ரீதாமன் 
என்ற சிறுவன் வேகமாக பலராமன், 
கண்ணனிடம் ஓடி வந்தான்.

பலராமா! கண்ணா! இந்த மலைச்சாரலைக் 

கடந்து நாம் மலைக்காட்டிற்குள் 
போனால் அங்கே அநேக 
பனைமரங்களைக் காணலாம். 
அந்த பனைமரத்தின் அடியில் 
பழங்கள் உதிர்ந்து கிடப்பதைப் 
பார்க்க முடியும். ஆனால் அங்கே 
நாம் போக முடியாது. காரணம் 
தேனுகன் என்ற அரக்கன் அந்த 
வனத்தைக் காத்து வருகிறான். 
அவன் கழுதை வேடம் போட்டுத் 
திரிகிறான். அவனைச் 
சேர்ந்தவர்களும் அது மாதிரியே 
அவனுடன் காட்டைச் சுற்றி 
வருகிறார்கள். 

அவனுக்கு மனித மாமிசம் என்றால் 

மிகப் பிரியம். அவன் பக்கத்தில் 
போனவர்களை அடித்துக் கொன்று 
தின்றுவிடுவான். எனினும் அவன் 
வசிக்கும் பனைக்கூட்டத்தின் மத்தியில் 
சிந்தி சிதறிக் கிடக்கும் பழங்களின் 
வாசனை தான் இது. கண்ணா! அந்த 
பழங்களை எப்படியாவது எடுத்து 
வந்து எங்களுக்கு கொடுப்பாயா?
 என்று ஸ்ரீதாமன் கேட்டான். இதைக் 
கேட்ட பலராமனும் கண்ணனும் 
சிரித்தார்கள். 

வாருங்கள்! நாம் எல்லோரும் 
பனங்காட்டிற்குச் செல்லலாம் 
என்று கண்ணன் சொல்லவே 
கோகுலச் சிறுவர்களும், பலராமனும் 
அவனுடன் சேர்ந்து அங்கே போனார்கள். 
இவர்கள் பேசியதைக் கேட்ட தேனுகன் 
வேகமாக ஓடிவந்து பலராமனைத் 
தாக்க ஆரம்பித்தான். கழுதையாகிய 
அவன் தன் பின்னங்கால்களால் 
பலராமனை உதைத்தான். 
பலராமனோ கழுதையின் காலைப் 
பிடித்து இழுத்து அப்படியே உயரே 
தூக்கி சுழற்றினான்.  இப்படி பலமுறை 
சுற்றிச் சுழல விட்டு அவன் சடலத்தை 
பனைமரத்தின் மீது வீசினான். அந்த 
மரம் அல்லாது அடுத்து இருந்த 
மரங்களும் அவனோடு பூமியில் சரிந்தன. 
இவ்வாறு பலராமனும், கிருஷ்ணனும் 
அரக்கர் கூட்டத்தை அழித்து ஒழித்தனர்.

ஒரு சமயம் பலராமனும் கண்ணனும் 

தட்டாமாலை சுற்றி விளையாடினார்கள். 
எல்லாரையும் ஆடச் செய்து கண்ணன் 
பாடுவான். எல்லாரும் வில்வப்பழம் 
பறித்துப் பந்தாடுவார்கள். இவ்வாறு 
அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் 
போது பிரலம்பன் என்ற ஓர் அரக்கன், 
கோகுலச் சிறுவனைப் போல் உருமாறி 
அவர்களுடன் விளையாட வந்தான். 
இவனுடைய சூழ்ச்சியைக் கண்ணன் 
தெரிந்தும் தெரியாதது போல நடந்து 
கொண்டான். கண்ணன் தன் சகாக்களை 
அழைத்துச் சொன்னான். நண்பர்களே! 
நாம் இப்போது இரண்டு கட்சிகளாகப் 
பிரிவோம். ஒரு கட்சிக்குப் பலராமன் 
தலைவன், மற்றொரு கட்சிக்கு நான் 
தலைவன். ஒரு பந்தயம் கட்டி 
விளையாடுவோம். யார் 
ஜெயிக்கிறார்களோ அவனைத் 
தோல்வி அடைந்தவன் தூக்கி சுமக்க 
வேண்டும் என்றான். எல்லாரும் 
ஆமோதித்து ஓர் ஆலமரத்தில் 
ஓடிப் பிடித்த விளையாடினர். 

ஓடி விளையாடிய ஓட்டப் பந்தயத்தில் 

பிரலம்பன் பலராமனிடம் தோற்றான். 
ஆகவே அவன் பலராமனைத் தூக்கி 
சுமந்து கொண்டு ஓடினான். அப்படி 
ஓடியவன், ஓர் எல்லைக்குள் வந்து 
அவனை இறக்கிவிட வேண்டியவன், 
பலராமனைக் கீழே இறக்காமல் 
ஓடிக்கொண்டே இருந்தான். 
ஆனால் ஓடஓட பலராமன் பாரம் 
அரக்கனாகிய பிரலம்பனுக்கு அதிகரித்துக் 
கொண்டே போனது. அரக்கன் சுமை 
தாங்க மாட்டாமல் பலராமனைத் 
தொப் என்று கீழே போட்டான். 
தன் சுயரூபம் எடுத்து ஆகாயம் 
வரை உயர்ந்து நின்றான். உடனே 
பலராமன் எகிறிக் குதித்து விண்ணுயரம் 
நின்ற அரக்கன் தலையில் நச் 
என்று ஓங்கி ஒரு குத்து விட்டான். 
அந்த இடத்திலேயே பிரலம்பன் 
மலையெனச் சாய்ந்தான். ஒரு நாள் 
இரவில் கண்ணனும், பலராமனும் 
ஆயர்பாடி பெண்களுடன் 
பிருந்தாவனத்தில் விளையாடிக் 
கொண்டு இருந்தார்கள். 

அந்நேரம் குபேரனுடைய சேவகன் 

சங்கசூடன் வந்தான். அவன் 
கோபிகளை வடதிசை நோக்கித் 
துரத்தினான். பலராமனை மங்கையரைக் 
காத்து நிற்கும்படி கண்ணன் சொல்லிவிட்டு, 
கண்ணன் சங்கசூடனைத் துரத்திச் 
சென்றான். அவனை வதம் செய்து 
அவன் கிரீடத்தில் அணிந்திருந்த 
ரத்தினத்தை எடுத்து கண்ணன் 
பலராமனுக்கு கொடுத்தான்.

மகாபாரதத்தில் பலராமன்: 


பலராமருடைய மனைவியின் 
பெயர் ரேவதி. ரைவத நாட்டை 
ஆண்டு வந்த அரசன் ரைவதன் 
என்பவருடைய மகள் இவள். 
பிரம்மதேவர் விருப்பப்படி பலராமருக்கு 
ரேவதியை மணம் செய்து வைத்தான். 
அவள் வயிற்றில் பிறந்தவள் வத்ஸலா. 
வத்ஸலாவை, துரியோதனன் தன் மகன் 
லெட்சணனுக்கு திருமணம் செய்து விட்டால், 
பலராமனும், அவரது தம்பி கிருஷ்ணரும் 
தங்கள் பக்கம் சேர்ந்து விடுவார்கள் 
என்றும், இதனால் பாண்டவர்களை 
போரில் எளிதில் வென்று ராஜ்யத்தை 
அவர்களிடம் கொடுக்காமல் தாமே 
வைத்துக்கொள்ளலாம் என்றும் 
துரியோதனன் நினைத்தான். 
ந்த திருமணம் பேசி முடிப்பதற்காக தன் மாமா
சகுனியை துவாரகைக்கு அனுப்பி 

வைத்தான் துரியோதனன். 

சகுனி துவராரகைக்கு வரும் 

வழியில் துர்சகுனங்கள் தோன்றின. 
அவைகளைப் பொருட்படுத்தாமல் 
அவன் பலராமனை சந்தித்தான். 
சாதுர்யமாக அவன் விஷயத்தை 
எடுத்துச் சொன்னான். பலராமனும் 
இது பற்றித் தன் மனைவி ரேவதியைக் 
கலந்து பதில் சொல்வதாகச் சொன்னான். 
அவள் அதற்கு சம்மதம் தெரிவித்தாள். 
ரேவதி சம்மதம் தந்ததும் பலராமன் 
தன் தம்பி கிருஷ்ணனைக் கலந்தான். 
அத்துடன், வத்ஸலாவை லெட்சணன் 
திருமணம் செய்து கொள்வதில் 
தனக்கும் தன் மனைவி ரேவதிக்கும் 
மிக திருப்தி என்றும் பலராமன் 
கிருஷ்ணனிடம் சொன்னான். 

அப்போது கிருஷ்ணன், அண்ணா! 
தர்மத்தைப் பரிபாலிக்க சிம்மாசனமும் 
செங்கோலும் கொண்ட நாமே தர்மத்தைப் 
பரிபாலிக்காமல் கைவிட்டால் 
தர்மம் எப்படித் தழைத்து ஓங்கும்?  
நான் ஒரு நிகழ்ச்சியை உன் ஞாபகத்திற்குக் 
கொண்டு வர வேண்டியவனாக இருக்கிறேன். 
முன்பு ஒருநாள் நம் தங்கை சுபத்திராதேவி
 தன் புதல்வன் அபிமன்யூவை அழைத்துக் 
கொண்டு வந்திருந்தாள். 

நாம் எல்லோரும் அன்று அந்தி 

சாய்கிற நேரத்தில் பூங்காவனத்தைச் 
சுற்றி வந்தோம். அப்போது அபிமன்யூவும் 
வத்ஸலாவும் சதிபதிகளாக விளையாடிக் 
கொண்டு இருந்தார்கள். இதைக் கண்ட 
சுபத்திரை அவர்கள் விளையாட்டின் 
விந்தையை உன்னிடம் சுட்டிக் காட்டினாள். 
அப்போது நீ என்ன சொன்னாய்? 
உனக்கு ஞாபகம் இருக்கிறதா அண்ணா? 
என்று வாசுதேவன் கேட்டான். ஏதோ 
ஒன்றிரண்டு ஞாபத்திற்கு வருகிறது. 
இருந்தாலும் நான் என்ன சொன்னேன் 
என்பதை இப்போது நீதான் 
நினைவுபடுத்துவதில் என்ன தவறு? 
சும்மா சொல் என்றான் பலராமன். 

கிருஷ்ணன் தொடர்ந்து சொன்னான், 
அண்ணா! அருமைத் தங்காய் சுபத்திரை! 
இந்த இரண்டு பேரும் தம்பதிகளே 
இதில் என்ன சந்தேகம். மேலும் 
வத்ஸலையை அபிமன்யூவுக்குக் 
கொடுப்பதில் நாம் ஏதாவது குலம் 
கோத்திரம் விசாரிக்க வேண்டுமா என்ன? 
என்றைக்கு இருந்தாலும் வத்ஸலையை 
உன் மகன் அபிமன்யூவுக்குப் 
பாணிக்கிரகணம் செய்து கொடுப்பது 
சத்தியமே! என்று வாக்குக் கொடுத்தீர்கள். 
அந்த நேரம் நம்மிடையே நாரத முனிவரும் 
எழுந்தருளி இருந்தார். அப்போது அவர், 
பலராம சக்கரவர்த்தியே! நீர் இப்போது 
வாக்குக் கொடுத்து நிறைவேற்றுவது 
தான் சத்தியம் செய்வதற்கு அழகு என்றார். 
நீ உடனே, நான் ஒரு நாளும் வாக்கு 
மாறமாட்டேன் என்று கூறிவிட்டு 
இப்போது உன் சத்திய வாக்கைக் 
காற்றில் பறக்க விடலாமா? என 
கிருஷ்ணன் வினவினான்.

அதைக் கேட்ட பலராமன், கேசவா 

நான் சொல்லும் வேளையில் பாண்டவர்கள் 
இந்திரப் பிரஸ்தத்தில் பூபதிகளாக 
இருந்ததால் அவ்வண்ணம் சொன்னேன். 
இப்போதோ அவர்கள் தங்கள் ராஜ்யம், 
சொத்து, சுகம் இழந்து வனவாஸத்தில் 
அல்லவா இருக்கிறார்கள்? நமது 
சகோதரி மகன் அபிமன்யூவோ 
நம் சிற்றப்பா விதுரர் போஜனையில் 
வளர்ந்து வருகிறான். இந்த நிலையில் 
நம் மகள் வத்ஸலையை அவனுக்குக் 
கொடுக்க யார் சம்பதிப்பார்கள்? என்றான். 
உடனே கிருஷ்ணன் சொன்னான்: 
அண்ணா! இனி உங்கள் இஷ்டம். அண்ணியும் 
இதற்கு சம்பதிக்கிறாள் என்னும் போது 
நான் மேலும் வீண் விவாதம் செய்வதில் 
பயன் இல்லை. எல்லாம் பகவத் சங்கற்பம் 
போல் நடக்கும் என்பதை மறந்துவிடாதே! 
என்று பதில் சொல்லிவிட்டு வாசுதேவன் 
அந்தப்புரத்திற்குப் போய்விட்டான். 
சகுனியும் பலராமனும் கிருஷ்ணன் 
அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். 

சகுனியை மீண்டும் தன் அரண்மனைக்கு 

அழைத்துச் சென்று பலராமன் அவர் 
கையில் தன் சம்மதத்துடன் வத்ஸலா 
லெட்சணன் திருமணத்திற்கு லக்கினப் 
பத்திரிக்கையைக் கொடுத்து அனுப்பினான். 
அதைக் கைப்பற்றியதும் சகுனிக்கு ஏற்பட்ட 
சந்தோஷத்திற்கு அளவே இல்லை. 
அஸ்தினாபுரத்திற்குத் திரும்பி, நடந்த 
விவரங்களை துரியோதனிடம் சொன்னான் 
சகுனி. முகூர்த்த லக்னப் பத்திரிக்கையும் 
பார்த்து துரியோதனன் அதிக சந்தோஷம் 
கொண்டாடினான். உடனே தன் மனைவி 
பானுமதி, மகன் லெட்சணன், மாமா 
சகுனி மற்றும் உறவினர்களுடன் 
திருமணம் பேசி முடிப்பதற்காக பலராமன் 
இருப்பிடத்திற்கு சென்றான்.  செல்லும்
 வழியில் கிருஷ்ணரின் தங்கை சுபத்ரைக்கு 
இந்த விஷயத்தை ஒரு மடலில் எழுதி 
அனுப்பிவிட்டான். இதை கேள்விப்பட்ட 
சுபத்ரையும், அவளது மகன் அபிமன்யுவும் 
ஒரு தேரில் பலராமனை தேடி சென்றனர். 
செல்லும் வழியில் கடோத்கஜன் 
அபிமன்யுவை கொன்றான். இருந்தாலும் 
பராசக்தியின் கருணையால் கிடைத்த 
அமுத கலசத்தினால் அபிமன்யு உயிர் 
பெற்றான். பின்னர் கடோத்கஜன் பீமனின் 
மகன் என்பது தெரியவந்ததும், இருவரும் 
கிருஷ்ணனின் மாளிகைக்கு சென்றனர். 
அவர்களுடன் கடோத்கஜனின் இஷ்ட 
தேவதையான ஜாங்கிலியும் சென்றது.

வாசுதேவன் அவர்களை வரவேற்று 

மகிழ்ந்து ஆசி கூறினார். 
ஹே கடோத்கஜா! ஜாங்கிலி! 
நீங்கள் இரண்டு பேரும் என் அரிய 
பக்தர்கள். ஆகவே உங்கள் விருப்பப்படி 
அபிமன்யூ-வத்ஸலா திருமணம் 
நடைபெற்றுவிடும். எனினும் அதை 
நீங்கள் தான் முன்னின்று செய்ய வேண்டும். 
அதற்கு முன்பு ஒரு சில காரியங்களைச் 
செய்ய வேண்டும் என்றார். அவர்கள் 
தங்கள் கட்டளையை சிரம்மேல் 
தாங்கி செய்கிறோம்! என்று சொன்னார்கள். 
என் அண்ணா பலராமர் அந்தப்புரத்தில் 
ரேவதி தேவியின் அருகில் அருமைக் 
குழந்தை வத்ஸலா படுத்துக் கிடக்கிறாள். 
அவளை அங்கிருந்து எடுத்துக் கொண்டு 
சுபத்திரையிடம் சேர்த்து விடுங்கள். 
அண்ணா அரண்மனையில் 
அமைத்திருக்கும் திருமணப் பந்தலை 
உங்களைச் சேர்ந்த அரக்கர்களைக் 
கொண்டு அலாக்காகத் தூக்கி ரைவத 
மலைச்சாரலுக்கு கொண்டு வந்து 
நிறுத்தி விடுங்கள். 

அப்புறம் என் சங்கல்பத்திற்கு 

விரோதமாக வந்திருக்கும் 
துரியோதனாதியருக்கு உங்கள் இஷ்டம்
 போல் , அவர்கள் பாடம் கற்கும்படி, 
மானபங்கம் செய்து விடுங்கள். 
பின் தேவலோகத்திலிருந்து திருமண 
காரியங்களுக்குப் புரோகிதம், வேள்வி, 
மேள தாளங்கள் உள்பட அங்கு வரும்படி 
செய்கிறேன். அந்தத் தேவர் குழாம் வந்ததும் 
எனக்குத் தெரியப்படுத்துங்கள். நானும் 
ருக்மணி தேவியும் அங்கு வந்து யாகத்தை 
முடித்துக் கொடுக்கிறோம் என்றார். 

வாசுதேவர் கூறியபடி காரியங்களை 
நிறைவேற்றி விட முனைந்தனர்.
 துரியோதனன் அவன் பட்ட மகிஷி 
பானுமதி தங்கி இருக்கும் மாளிகைக்குச் 
சென்றார்கள். அங்கு உள்ள பானுமதியின் 
தாதியரைக் கண்டு, அவர்களைப் 
போல மாற்றருக் கொண்டு நேரே 
பலராமர் ரேவதி அந்தப்புரத்திற்குள் 
நுழைந்தனர். அங்கு அவளைத் தட்டி 
எழுப்பினார்கள். அம்மா எஜமானி! 
நாங்கள் கௌரவ பட்டத்தரசி 
பானுமதி தேவியின் தாதிகள். அ
ம்மா இதோ ஒரு சில நகைகளைக் 
கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். 
இதை பெண்ணுக்குப் போட்டுப் பார்க்க 
வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். 
ஆகவே வத்ஸலாவிற்கு இந்த நகைகளை 
அணிவித்து அவளை பானுமதி தங்கி 
இருக்கும் மாளிகைக்கு அழைத்துச் 
செல்கிறோம் என்று கூறினார்கள். 
ரேவதி அதற்கு அனுமதி கொடுத்தாள். 
உடனே வத்ஸலை அந்தப்புரம் சென்று 
வந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி, 
அவளை அங்கிருந்து ரைவத மலை 
அடிவாரத்திற்குக் கொண்டு போய்ச் 
சேர்த்தார்கள்.

தேவலோகம் சென்று யட்சர், 

தேவதேவியர், தெய்வ ரிஷிகளைத் 
திருமணம் நடக்க இருக்கும் இடத்திற்கு 
வரச் செய்து கல்யாண சாபக் கிரியத் 
திரவியத்திற்கும் தேவ துந்துபி 
முழக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு 
கிருஷ்ண பகவானிடம் தெரிவித்தார்கள். 
அவர் ருக்மணி தேவி சமேதராய் 
திருமணப் பந்தலுக்கு எழுந்தருளினார். 
அங்கே தன் தங்கை சுபத்திரா, 
மருமகன் அபிமன்யூ மற்றும் 
புதுப்பெண் வத்ஸலாவையும் கண்டு 
குசலம் விசாரித்தான் பகவான். 

பின்பு ஒரு சில நொடிகளில் 
வத்ஸலாவுக்கும் அபிமன்யூவுக்கும் 
விவாக சுபமுகூர்த்தம் நிறைவேறியது. 
உடனே பகவான் அங்கு தங்காமல் 
எதையும் தான் அறியாதர் போலத் 
தம் இருப்பிடம் சேர்ந்தார். பலராமன் 
தன் மகன் வத்ஸலையைக் காணாமல் 
தவித்து, கிருஷ்ணரின் அரண்மனைக்கு 
வந்து சேர்ந்தான். அதற்குப்பின் வத்ஸலா 
விவாகமான சேதியை நாரதர் மூலம் 
பகவான் பலராமருக்குத் தெரிவித்தார். 
அதனால் பலராமர் அகமகிழ்ந்து 
அபிமன்யூ வத்ஸலாவைத் தன் 
அரண்மனைக்குத் திருமண 
ஊர்வலமாக நாததுந்துபிகள் முழங்க 
வெகு விமரிசையாக அழைத்து வந்தான். 
இவ்வாறு பலராமன் மகள் வத்ஸலா 
திருமணம் இனிதே நிறைவேறியது. 
இந்த வத்ஸலா திருமணக் கதையை 
கேட்போர், படிப்போர் அனைவருக்கும் 
கிருஷ்ண பரமாத்மாவின் பூரண 
அனுக்கிரகமும் சர்வமங்களமும் கிடைக்கும்.

சாம்பன்-லட்சுமளை திருமணம்: 


துரியோதனனுக்கு லட்சுமளை 
என்ற ஒரு பெண் இருந்தாள். 
அவள் திருமணத்தை முன்னிட்டு 
அவன் சுயம்வரம் ஏற்படுத்தினான். 
சுயம்வரத்துக்கு வந்த சாம்பன் 
லட்சுமளையைத் தூக்கிச் சென்றான். 
இந்த சாம்பன் கிருஷ்ணனுக்கும் 
ஜாம்பவதிக்கும் பிறந்த புத்திரன். 
துரியோதனாதியரும் அவனைச் 
சேர்ந்தவர்களும் படையுடன் 
அவனைத் துரத்தி வந்தார்கள். 
பின் அவனுடன் யுத்தம் செய்தனர். 
சாம்பன் அனைவரையும் நன்கு தாக்கினான். 
எனினும் பீஷ்மரும் துரோணரும் 
கௌரவ சேனையில் இருந்ததால் 
அவனைச் சிறைப்படுத்தினார்கள். 
இதைக் கேள்விப்பட்டதும் பலராமன் 
உத்தரவோடு அஸ்தினாபுரம் வந்து 
துரியோதனனைச் சந்தித்தான். 
துரியோதனா! என்ன காரியம் 
செய்தாய்? தனி ஒருவனாக நின்று 
போராடிய சாம்பனை வீரர்களுடன் 
நீ சுற்றிவளைத்துச் சிறைபடுத்திவிட்டாயே? 
இது என்ன நியாயம்? உனக்கு நாங்கள் 
உறவினர் என்பது மறந்து போயிற்றா? 
நமக்குள் விரோதம் வேண்டாம் என்று 
நான் எத்தனையோ தடவை எடுத்து 
சொல்லியும் நீ பகைமை பாராட்டுகிறாய். 
ஆக நீ சாம்பனை விடுவித்து அவனுக்கு 
லட்சுமளையை விவாகம் செய்து கொடு!
 என்று பலராமன் சொன்னான். 
அவன் சொன்னைதைக் கொஞ்சமும் 
காதில் வாங்கிக் கொள்ளாமல் 
துரியோதனன் பலராமனையும் 
அவன் குலத்தையும் இழிவாகப் 
பேசினான். அதனால் பலராமனுக்குக் 
கோபம் வந்துவிட்டது. 

உங்களோடு சண்டை போட 

வேண்டும் என்ற அவசியமே இல்லை. 
இதோ பார் க்ஷண நேரத்தில் உங்களைக் 
கூண்டோடு துவம்சம் செய்கிறேன் பார்! 
என்று சொல்லித் தான். அடுத்த நொடிப் 
பொழுதில் அஸ்தினாபுரமே வேரோடு 
பெயர்ந்து கிளம்புவதுபோல் ஆட்டம் கண்டது. 
கங்கையில் நகரம் மூழ்கிப் போகும் எ
ன்ற பயம் தோன்றியது. உடனே 
துரியோதனன் பலராமன் காலில் 
விழுந்து தன்னை மன்னிக்கும்படி 
வேண்டினான். அத்துடன் லட்சுமளையை 
சாம்பனுக்கு மணம் முடித்துக் கொடுக்கவும் 
சம்மதித்தான். அவ்வாறு துரியோதனன் 
மன்னிப்புக் கேட்டு வழிக்கு வந்ததும் 
தன் கலப்பையை மீண்டும் தரையில் 
மோதி ஆட்டம் கண்டு நின்ற 
அஸ்தினாபுரத்தை முன் இருந்த நிலைக்கு 
பலராமன் நிலைப்படுத்தினான்.

பலராமன் தீர்த்த யாத்திரை: 


துவாரகையில் கிருஷ்ணனும் 
பலராமனும் இருந்த சமயம் 
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் 
இடையே இருந்த விரோதம் முற்றியது. 
இரு சாராரும் யுத்த சன்னத்தராக 
இருக்கிறார்கள் என்ற சேதி பலராமனுக்கு 
எட்டியது. 

 இருசாராரும் உறவினர்களே. 
ஆக அவர்கள் தம்மைப் போருக்கு 
உதவ கேட்கும் போது தாம் யாருக்கு 
உதவுவது என்ற தர்மசங்கடமாக 
சூழ்நிலையை எண்ணிப் பலராமன் 
தீர்த்த யாத்திரைக்கு கிளம்பினான். 
ஒவ்வொரு தலமும் தரிசித்து தீர்த்த 
யாத்திரையாக ஆங்காங்கே உள்ள 
பிராமணோத்தமர்களுக்கு பலராமன் 
தான தருமங்கள் செய்து கொண்டே 
வந்தான். நைமி சாரண்யத்திற்கு 
வந்தான். அங்கே எல்லா மகரிஷிகளும் 
சந்திரயாகம் செய்து கொண்டு இருந்தார்கள். 
அனைவரும் பலராமனைக் கண்டதும் 
அகமும் முகமும் மலர எழுந்து 
நின்று அவனை வரவேற்று நமஸ்காரம் 
செய்தனர். சூதர் மட்டும் எழுந்திருக்கவே 
இல்லை. இதைக் கண்டதும் 
பலராமனுக்குக் கோபம் வந்துவிட்டது. 

பதினெட்டுப் புராணங்களையும் 

மற்றவர்களுக்குத் தாம் தானே 
உபதேசம் செய்தோம் என்ற 
கர்வத்தால் இப்படி எழுந்திராது 
இருந்தார் என்பதைப் பலராமன் 
உணர்ந்தான். கையில் ஒரு 
தர்ப்பையை எடுத்தான். மந்திரித்து 
அஸ்திரமாகப் பிரயோகம் செய்தான். 
அது சூதருடைய தலையைத் துண்டாக்கிச் 
சென்றது. அதைப் பார்த்த மற்ற மகரிஷிகள்
 பலராமனைப் பெரிதும் வேண்டினார்கள்.
ஹே பிரபோ! சூதர் செய்த குற்றம் பெரிதே. 
இருந்தாலும் எங்களைக் 
கிருதார்த்தர்களாக்கப் பதினெட்டு 
புராணங்களையும் எங்களுக்கு 
ஓதுவித்தவர் சூதர் அல்லவா? 
அவரை நாங்கள் கௌரவித்து வந்தோம்.

இனியும் அவ்வாறு நாங்கள் நடந்து 

கொள்ள, தாங்கள் அவர் பிழை 
பொறுத்து அவரை உயிர் பெற்று 
எழச் செய்ய வேண்டும் என 
மன்றாடினார்கள். அதனால் சூதருக்கு 
இரங்கி அவரை உயிர்த்தெழச் செய்தான் 
பலராமன். அதன் பிறகு சூதர் தூங்கி 
எழுந்தது போல எழுந்து நின்று 
பலராமனை வணங்கினார். அங்கு 
அந்த முனிவர்களுக்கு பல்லவன் 
என்ற அரசன் மிகவும் தொல்லை 
கொடுத்து வந்தான். இந்தப் பல்லவன் 
அகஸ்தியரால் முன்பு சம்கரிக்கப்பட்ட 
இல்லவன் வாதாபி என்ற இரு அசுரர்களில் 
இல்லவனுடைய மகன் ஆவான். 
முனிவர்கள் வேண்டுகோளுக்கு 
இணங்க இவனையும் பலராமன் 
அழித்தான். 

நாடெங்கிலும் சென்று தீர்த்த யாத்திரை 

முடித்து குருஷேத்திர யுத்தம் 
முடிவடையும் நேரம் அங்கே 
பலராமன் வந்தான். பீமனுக்கும் 
துரியோதனனுக்கும் இடையே 
கடும்போர் நடந்து கொண்டிருந்தது. 
பீமனும் துரியோதனனை கதையைக் 
கொண்டு பலமாகத் தாக்கினான். 
அப்படியே துரியோதனனும் மிகவும் 
ஆக்ரோஷமாகச் சண்டை செய்து 
கொண்டு இருந்தான். பலராமன் இரண்டு
 பேரையும் பார்த்து சண்டையை நிறுத்தி 
சமாதானமாகப் போகவும் என 
வலியுறுத்தினான். யாரும் காதில் 
போட்டுக் கொள்ளவில்லை. 
இந்த நிலையில் துரியோதனன் 
தொடையில் பீமன் கதையால் ஒங்கி 
அறைந்தான். உடனே பலராமன் 
அலறினான்.பீமா! கதை கொண்டு 
பகைவனை அவனது தொடையில் 
தாக்குவது எந்த யுத்த தருமத்தைச் 
சேர்ந்தது? இந்த அநியாயத்தை என்னால் 
தாங்கிக் கொள்ள முடியாது என்று 
சொல்லி பீமனைத் தாக்க பலராமன் க
லப்பையைக் கையில் எடுத்தான். 

இதோ பீமா! என்னைத் தாக்கு 

என்று கத்தினான் பலராமன். 
உடனே கண்ணன், அண்ணா! 
என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்? 
தயவு செய்து கலப்பையைக் கீழே 
போடுங்கள். நீங்கள் தீர்த்தயாத்திரை 
போகும் முன்பு இங்கு நடந்த 
நிகழ்ச்சிகளை நீங்கள் தெரிந்திருக்க 
முடியாது. துரியோதனன் ஆரம்பம் 
முதல் இன்று வரை தர்மத்திற்கு 
விரோதமாகவே நடந்து கொண்டு
 இருக்கிறான். திரௌபதையை 
அரசவைக்கு நடுவே இழுத்து வரச்செய்து 
அவள் சேலையை அவிழ்த்து 
அவமானப்படுத்தினான். அது எந்த 
தர்ம நியாயத்தோடு சேர்ந்தது? 
நீங்கள் மட்டும் அந்த சபையில் 
அன்று இருந்திருந்தால் அப்போதே 
அவனை துவம்சம் செய்திருப்பீர்கள். 
அன்றைய தினம் தொடையிலே 
கைபோட்டுத் துரியோதனன் பேசியதால் 
அவனை அதே தொடையில் அடித்து 
அது முறிய அவனை பீமன் மாளச் 
செய்வான் என்று திரௌபதை 
சாபம் கொடுத்தாள். அந்த சாபத்திற்கு 
ஏற்ப இந்த மரணத்தைத் துரியன் ஏற்றான்! 
ஆகவே நீங்கள் இதில் தலையிட வேண்டாம்! 
என்றான் கண்ணன். பலராமனும் 
கோபத்தைத் துறந்து நிலைமை புரிந்து 
சாந்தம் ஆனான். பின்னர் துவாரகைக்குத் 
திரும்பி சென்றான்.

ஹரி ஓம் ! 





Tuesday 28 April 2020

ஆதி சங்கரர் - மஹா பெரியவா !

ஆதி சங்கரர் - மஹா பெரியவா !



உலகின் பல பாகங்களில் வசிக்கக்
கூடிய விஞ்ஞானிகள், மருத்துவர்கள்,
ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள்
போன்றோர் அவ்வப்போது காஞ்சி
மாநகரத்துக்கு விஜயம் செய்து மகா
பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற்று
விவாதிப்பது வழக்கம்.

வருகின்றவர்கள் ஆச்சரியப்படும்படி
அவர்கள் சார்ந்திருக்கிற துறை தொடர்பாக
பல்வேறு தகவல்களைச் சொல்லி,
அவர்களைப் பிரமிக்க வைப்பார்
மகா பெரியவா.

புகழ்பெற்ற புவியியலாளர்
(ஜியோலஜிஸ்ட்) ஒருவர் மகா
பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற
வேண்டும் என்று காஞ்சி சங்கர
மடத்துக்கு வந்தார். அவரது பூர்வீகம்,
 குடும்பம், உத்தியோகம் ஆகிய
அனைத்தையும் பற்றிக் கேட்டறிந்தார்
மகா பெரியவா. அரை மணி நேர
சம்பாஷணைக்குப் பிறகு, ஆசி பெற்று
கிளம்ப இருந்தவரை, ‘‘எனக்கு ஒரு
உபகாரம் பண்ணித் தர முடியுமா?’’
என்று ஒரு குழந்தை போல் கேட்டார்
மகா பெரியவா.

புவியியலாளருக்கு நம்ப முடியவில்லை. ‘
உலகத்தின் எந்த மூலையிலும் நடக்கின்ற
சிறு அசைவையும் அறிந்தவர், நம்மிடம்
என்ன உதவியை எதிர்பார்க்கிறார்?’ என்று
வியந்து, மகானுக்கு மீண்டும் ஒரு
நமஸ்காரம் செய்தார். எழுந்து நின்றவர்,
‘‘பெரியவாளுக்கு என்னால ஏதேனும்
உபகாரம் ஆகும்னு இருந்தா, அதைவிட
 எனக்கு சந்தோஷம் கிடையாது’’ என்று
பணிவுடன் சொன்னார்.

‘‘கேரளால இருக்கிற காலடி க்ஷேத்திரம்
பத்திக் கேள்விப்பட்டிருக்கியோ?’’ என்றார்.

‘‘தெரியும் பெரியவா. ஆதி சங்கரரோட
அவதார பூமி ஆச்சே...’’

‘‘ஆமா... அங்கே பூர்ணா நதி ஓடறது.
ஆதி சங்கரரோட தாயார் ஆர்யாம்பாள்
அதுலதான் தெனோமும் ஸ்நானம்
பண்ணுவா.’’

தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார்
புவியியலாளர்.

‘‘பூர்ணா நதிலேர்ந்து நான் சொல்ற
ரெண்டு எடத்துல மண்ணு சாம்பிள்
எடுத்துக்கோ. அது ரெண்டையும் டெஸ்ட்
பண்ணி, எத்தனை காலத்துக்கு
முந்தைய மண்ணுன்னு சொல்லணும்.’’
‘‘உத்தரவு பெரியவா.’’

‘‘பூர்ணா நதி கேரளாவில் காலடி
க்ஷேத்திரத்துக்குள்ள பாய ஆரம்பிக்கறது
இல்லியா? அது காலடிக்குள்ள நுழையற
எடத்துக்கு முன்னாடி இருக்கிற ஊர்லேர்ந்து
கொஞ்சம் மண்ணு எடுத்துக்கோ.

ரெண்டு எடத்துலேர்ந்து மண்ணு
எடுக்கணும்னு சொன்னேன் இல்லியா?
ரெண்டாவது மண்ணை எங்கே
எடுக்கணும்னா, இந்த நதி காலடி
ஊருக்குள்ள பாய ஆரம்பிக்கும்.
காலடிக்குள்ள பூர்ணா வந்த ஒடனே
ஒரு சின்ன யூ டர்ன் போட்ட மாதிரி
சங்கரர் வாழ்ந்த கிரஹம் வரை
வந்துட்டு, திரும்ப பழைய மாதிரி
தனக்கு உண்டான பாதைல இந்த
நதி பாய ஆரம்பிச்சிடும், பார்த்திருக்கியோ...
அந்த எடத்துலேர்ந்து மண்ணு எடுத்துக்கோ.

நான் சொன்ன இந்த ரெண்டு
எடத்துலேர்ந்து மண் எடுத்துக்கோ.
‘கார்பன் டேட்டிங்’ (பழங்காலப்
பொருட்களின் வயதைக் கண்டுபிடிப்பது)
முறைப்படி ரெண்டு மண்ணோட
வயசையும் கண்டுபிடிச்சு எனக்குச்
சொல்லு’’ என்று தெள்ளத் தெளிவாகச்
சொல்லி நிறுத்தினார் மகா பெரியவா.

தன் துறை சார்ந்த பணி என்பதாலும்,
மகா பெரியவாளே ஓர் உத்தரவு போல்
சொன்னதாலும், மிகவும் சந்தோஷத்துடன்,
‘‘நிச்சயம் பெரியவா. உடனே பண்றேன்’’
என்று சொல்லி, மகா பெரியவாளுக்கு
மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்து விட்டு
அங்கிருந்து புறப்பட்டார் புவியியலாளர்.

காலடிக்கு முன்னால் பாய்கின்ற ஊரிலும்,
காலடிக்குள் நுழைந்த பிறகு உள்ள
இடத்திலும் மண் சேகரித்தார்.
மகா பெரியவா சொன்ன சோதனைகளை
முடித்தார். பரிசோதனை முடிவுகளைக்
கையில் எடுத்துக் கொண்டார். இவற்றை
மகா பெரியவாளிடம் தெரிவிப்பதற்காகக்
காஞ்சிபுரம் வந்தார் புவியியலாளர்.

ஒரு புன்னகையுடன் அவரை வரவேற்றார்
மகா பெரியவா. நமஸ்காரம் செய்து
எழுந்து நின்றார் புவியியலாளர். அவர்
சொல்லப் போகும் தகவலுக்காக ஆவலுடன்
 அவரது முகத்தையே பார்த்துக்
கொண்டிருந்தார்.

‘‘பெரியவா... ரெண்டு எடத்துலயும்
மண்ணு எடுத்து, ‘கார்பன் டேட்டிங்’
முறைப்படி வயசைக் கண்டுபிடிச்சுட்டேன்.
கேரளாவில் காலடிக்குள் நுழைவதற்கு
முன் உள்ள மண் சுமார் ஒரு லட்சம் வருடம்
ஆனது. அதாவது, இந்த நதியின் வயது
ஒரு லட்சம் வருஷம். அடுத்தது -
காலடிக்குள் சங்கரர் கிரஹம் இருந்த
இடம் அருகே இருந்த மண், சுமார்
2500 வருட பழமை கொண்டது.’’

புவியியலாரையும் அங்கே கூடி
இருந்த பக்தர்களையும் பார்த்து மகா
பெரியவா புன்னகை பூத்தார்.

‘‘இவர் கொண்டு வந்த ரிசல்ட் படி
ஆதி சங்கரரோட அவதார காலம்
மேலும் ஊர்ஜிதமாயிடுறது’’ என்று
சொன்ன மகா பெரியவா, ஆதி சங்கரர்
அவதாரம் செய்தது கி.மு. 509-ஆம் ஆண்டு
என்றும், அவர் ஸித்தி ஆனது கி.மு. 477-
ஆம் ஆண்டு என்றும் அந்த மகா சபையில்
மீண்டும் ஒருமுறை பிரகடனப்படுத்தினார்.

ஆதி சங்கரர் இந்த பூலோகத்தில் வாழ்ந்தது
32 ஆண்டுகளே. ஆதி சங்கரரின் அவதார
தினம் மற்றும் ஸித்தி தின ஸ்லோகங்களை
வைத்து, அவர் வாழ்ந்த காலத்தை மகா
பெரியவா வெளியிட்டார். ஆதி சங்கரர்
வாழ்ந்த காலம் குறித்துப் பல்வேறு விதமான
கருத்து வேறுபாடுகள் அப்போது இருந்தன.
இவற்றை எல்லாம் மனதில் கொண்டு,
ஒரு புவியியலாளரை வைத்து மண்ணின்
வயதைக் கணக்கிடச் சொன்னமைக்கும்
ஒரு காரணம் உண்டு.

காலடியில் ஆதி சங்கரர் வசித்த
இல்லத்தில் இருந்து சிறிது தொலைவில்
பூர்ணா நதி ஓடிக் கொண்டிருந்தது.
சங்கரரின் தாயாரான ஆர்யாம்பாள்
நித்தமும் பூர்ணா சென்று நீராடித்
திரும்புவது வழக்கம். ஒரு நாள் ஆற்றில்
நீராடி விட்டு இல்லம் திரும்பும்போது
தள்ளாமையின் காரணமாக வழியில்
மயங்கி விழுந்து விட்டார் ஆர்யாம்பாள்.
இதை அறிந்த சங்கரர் கவலைப்பட்டார்.

‘இனி பூர்ணா செல்ல வேண்டாம்.
இல்லத்தில் இருக்கிற கிணற்றிலேயே
நீராடுங்கள்’ என்று தன் தாயாரிடம்
சொன்னார் ஆதி சங்கரர்.

ஆனால், ‘என்ன சிரமப்பட்டாலும்,
நான் இருக்கின்ற வரை பூர்ணாவில்தான்
நீராடுவேன்... அது எத்தனை பெரிய பாக்கியம்’
என்று மகனை சமாதானப்படுத்தினார் தாயார்.

அப்போதுதான் ஆதி சங்கரர்
கங்காதேவியைப் பிரார்த்தித்துப்
பாடல் பாடி, அந்தப் பூர்ணாவையே
தனது இல்லம் இருக்கும்
பக்கத்துக்குத் திருப்பினார்.

ஆதி சங்கரரின் அவதாரப் பெருமையை
நிரூபிக்கும் விதமாகவும், அவரது சந்நியாச
தர்மத்துக்கும் கட்டுப்பட்டு பூர்ணா
நதியே தன் பாதையைச் சற்று மாற்றிக்
கொண்டு பாய ஆரம்பித்தது.

திடீரென தன் வீடு அருகிலேயே பூர்ணா
ஓடத் துவங்கியதும், ஆர்யாம்பாளுக்கு
சந்தோஷமான சந்தோஷம்.

ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்தில்தான்
பூர்ணா, அவரது இல்லம் அருகே பாய்ந்தது.
ஆக, இங்கே பாய்கின்ற பூர்ணாவின்
மண்ணை சோதித்துப் பார்த்தால்,
ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் உறுதியாகத்
தெரிந்து விடும் என்று தீர்மானித்து,
புவியியலாளரிடம் இந்தப் பொறுப்பைக்
கொடுத்து, உலகத்துக்கு ஒரு உண்மையை
வெளியிட்டார் மகா பெரியவா.

இது பூர்ணா நுழைவதற்கு முன்
நதியின் வயது ஒரு லட்சம் வருடம்.

காலடிக்குள் நுழைந்த பின் சங்கரர்
இல்லம் அருகே எடுத்த மண்ணுக்கு
 2,500 வருடம்.

எனவே, ஆதி சங்கரர் அவதாரம் செய்து
2,500 ஆண்டுகள் ஆகி விட்டன என்பது
ஊர்ஜிதம் ஆயிற்று.

எத்தனை பெரிய விஷயத்தை,
எவ்வளவு எளிமையாக மகா பெரியவா
முடித்தார் என்று பார்க்க வேண்டும்.



ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர.

ராம அவதாரம்

ராம அவதாரம்


பெருமாளின் அவதாரங்களில் 
இது 7வது அவதாரமாகும்: 

ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு 
மகனாகத் திருமால் எடுத்த 
அவதாரம் ராமன். ஏகபத்தினி 
விரதனாக சீதாதேவியை மணந்தும், 
அரக்கன் ராவணனை சம்ஹாரம் 
செய்தும், தந்தை கொடுத்த 
சத்தியத்தைக் காப்பாற்றியதும் 
ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.

வைகுண்டத்தில் வாயில் காப்போராக 
இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் 
சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் 
மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், 
இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். 
இரண்யாட்சகனை வராக அவதாரம் 
எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க 
அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார். 
இரண்டாவது பிறவியில் இராவணனும், 
கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். 
அவர்கள் இருவரையும் ராமராக 
அவதரித்து கொல்கிறார். சிசுபாலன்,
 தந்தவர்த்தன் என்பது மூன்றாவது 
பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து 
பரமபத வாசலுக்கு மீண்டும் 
திரும்பினார்கள். 

சூரிய குலவம்ச வழி மன்னர்களில் 
ரகு என்பவன் மிகவும் புகழுடன் 
வாழ்ந்தான். அவனுடைய மகன் 
அஜன். இந்த அஜனுடைய புதல்வனே 
தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு 
வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக 
கோசலை, கைகேயி, சுமத்திரை என்று 
மூவர் இருந்தனர். 

ஸ்ரீமந் நாராயணன் கோசலைக்கு 

ராமன் என்ற மகனாக அவதரித்தார். 
பூமியில் அரக்கர்கள் அட்டகாசம் 
அதிகமாயிற்று. தேவர்களிடமும் தங்கள் 
அட்டூழியங்களைச் செய்து பயமுறுத்தி 
வந்தார்கள். அவர்களைத் துன்பத்திற்கு 
ஆளாக்கினார்கள். ஆகவே ஸ்ரீமந் 
நாராயணன் அவர்களிடமிருந்து 
உலகத்தையும், தேவர்களையும் 
காப்பாற்றவே ராமராக அவதாரம் 
எடுத்தார்.

விசுவாமித்திரர் தாம் இயற்ற இருக்கும் 
வேள்விக்குப் பங்கம் ஏற்படாமல் 
பாதுகாக்கும் பொருட்டு ஸ்ரீராமன், 
லட்சுமணன் ஆகிய இருவரையும் 
தம்மோடு அனுப்பி வைக்கும்படி 
தசரதனிடம் கேட்டார். முதலில் மறுத்த 
தசரதன் பின்பு அனுமதி வழங்கினான். 
அவர்களை வேள்வி செய்ய இருக்கும் 
காட்டிற்கு  அழைத்துச் செல்லும் வழியில் 
தாடகை என்ற ஓர் அரக்கி குறுக்கிட்டாள். 
அவனை ஸ்ரீராமன் வதம் செய்தார். யாகம் 
தொடங்கியதும் அரக்கர்கள் மாரீசன் 
என்பவன் தலைமையில் அதை நடக்க
 விடாதபடி இடையூறு செய்தார்கள். 
ராமன் அரக்கர்களை அழித்தார். 

மாரீசனைத் தம் இராம பாணத்தால் 

சமுத்திரத்திலே கொண்டு போய்த் 
தள்ளுமாறு செய்தார். அதனால் 
மகிழ்ச்சியுற்ற விசுவாமித்திரர் 
அநேக அஸ்திரங்களை அவர்களுக்கு 
உபதேசித்து அயோத்திக்கு அழைத்து 
வந்தார். அப்படி வரும்போது கல்லாக 
சபிக்கப்பட்டுக் கிடந்த அகலிகை 
ஸ்ரீராமனின் பாத ஸ்பரிசத்தால் சாப 
விமோசனம் பெற்றுத் திரும்பவும் 
மானிட வடிவம் பெற்றாள். பின்பு 
அவர்களை விசுவாமித்திரர் ஜனகர் 
ஆட்சி புரியும் மிதிலைக்கு அழைத்துச் 
சென்றார். அங்கே ஜனக புத்திரியான 
சீதைக்கு உரிய கணவனைத் 
தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நடந்தது.

அந்த சுயம்வர மண்டபத்தில் ஒரு 

சிவதனுசு இருந்தது. அது யாராலும் 
தூக்கி நிறுத்தி வளைத்து நாணேற்ற 
முடியாத ஒன்று. அந்த வில்லை எந்தப் 
பராக்கிரமசாலி வளைத்து 
நாணேற்றுகிறானோ அவனுக்குத் 
தன் பெண்ணைத் தருவதாக 
அறிவித்திருந்தான் ஜனகன். பலநாட்டு 
மன்னர்கள் வந்து முயன்றும் சிவதனுசு 
முறியவில்லை. ஸ்ரீராமர் அதை வளைத்து 
நாணேற்றிக் காட்டவே அவருக்கு ஜனகன் 
சீதையைத் திருமணம் செய்து கொடுத்தான். 
திருமணம் முடிந்து தம் சுற்றம் சூழ 
அயோத்தி திரும்புகையில் ராமனைப் 
பரசுராமர் எதிர்த்தார். அவரிடம் இருந்த 
வில்லை ராமன் வளைத்து, 
பரசுராமரின் அகந்தையை அடக்கினார். 
நாடு திரும்பிய ஒரு சில நாள்கள் கழித்து, 
தசரதன் தன் மகன் ஸ்ரீராமனுக்குப் 
பட்டம் சூட்ட நினைத்தான். 

அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். 

அதனால் ராமரின் சிற்றன்னை கைகேயி 
மிகவும் சந்தோஷமுற்றிருந்தாள். 
அப்படி அவள் மகிழ்ச்சியாக இருந்த 
சமயம் மந்தரை என்ற வேலைக்காரி, 
கைகேயியிடம் துவேஷத்தை 
ஏற்படுத்தினாள். ராமன் பட்டத்தரசன் 
ஆகிவிட்டால் கோசலைக்கு பெருமையே 
ஒழிய கைகேயி உனக்கு ஏது பெருமை? 
மேலும் ஜனகர் புத்திரியான சீதை 
பட்டத்தரசி ஆவாள். ஏற்கனவே உன் 
தந்தையார் நாடாகிய கேகய நாட்டிற்கு 
ஜனகர் பகைவர். இந்நிலையில் 
உன் பிறந்த இடம் தாக்கப்படலாம் 
என்று மந்தரை சொல்ல கைகேயி மனம் 
மாறினாள். எனவே தசரதர் கைகேயிக்கு 
ஏற்கனவே தருவதாக வாக்களித்த இரண்டு 
வரங்களைப் பயன்படுத்தி, ஒரு வரத்தால் 
பரதன் ஆட்சிக் கட்டில் ஏறவும், மற்றொரு 
வரத்தால் ராமன் பதினான்கு ஆண்டுகள் 
வனம் புகுதல் வேண்டும் எனவும், 
தசரதனை கேட்குமாறு மந்தரை சொல்லிக் 
கொடுத்தாள். மந்தரையின் தூண்டுதலால் 
தசரதனிடம் அவ்வாறே வரங்களைத் 
தற்போதே தரவேண்டும் எனக் கைகேயி 
கேட்டாள். மன்னன் ராமன் மீது கொண்ட
 பிள்ளைப் பாசத்தை அளவிட முடியாது. 
கைகேயி கூட அப்படித்தான் இருந்தாள். 
ஆனால் தற்போது இவ்வாறு 
மாறிவிட்டாளே என வருந்தினார். 
தசரதன் எவ்வளவு கெஞ்சியும் அவளுடைய 
பிடிவாதத்தை மாற்ற மறுத்துவிட்டாள். 
தந்தையின் நிலை கண்டு அவர் வாக்கை 
நிறைவேற்றச் சித்தமானார் ராமன். 
பரதனுக்கு ஆட்சியை அளித்து விட்டு 
ராமன் காட்டிற்குப் போனார். அவரோடு 
லட்சுமணனும் சீதையும் உடன் சென்றார்கள்.

தன் பிரியமான மகன் கானகம் சென்றான் 

என கேள்விப்பட்ட தசரதன் அத்துயரம் 
தாளாமல் உயிர் துறந்தான். அயோத்தி
 நகரமே சோகத்தில் மூழ்கியது. காட்டுக்குச் 
சென்ற ராமனுடன் கங்கைக் கரையில் 
குகன் என்ற வேடன் நட்புக் கொண்டான். 
அவன் உதவியால் கங்கையைக் கடந்து 
பரத்வாஜ முனிவர் ஆசிரமத்திற்கு ராமன் 
வந்தார். அங்கு அவரது உபசாரத்தை ஏற்றுக் 
கொண்ட பின்னர் சித்திரகூடம் சென்று 
அங்கு பர்ண சாலையை அமைத்துக் 
கொண்டான். அங்கு ராமன், சீதை, 
லட்சுமணன் மூவரும் தங்கினார்கள். 

இந்நிகழ்ச்சிகள் நடக்கும்போது பரதன் 

தன் தாய்வழிப்பாட்டன் நாடாகிய கேகய 
நாட்டிற்குப் போயிருந்தான். அயோத்திக்கு 
அவன் திரும்பிய சமயம் தன்னைப் பெற்ற 
அன்னையின் பேராசையால் ஏற்பட்ட 
சம்பவங்களை தெரிந்து மிகவும் 
வருந்தினான். மூத்தவன் இருக்க நான் 
எப்படி முடி சூடுவது என்று பட்டத்தை 
ஏற்க மறுத்துவிட்டான். அத்துடன் 
வனத்திற்குச் சென்று சகோதரர்களை 
அழைத்து வரப்போனான். சித்திரகூடம் 
சென்றான். தந்தையின் மரணச் செய்தியைச் 
சொன்னான். சொல்லிவிட்டு அயோத்தி 
நாட்டை வந்து ராமன்தான் ஆள வேண்டும் 
என்று வற்புறுத்தினான். ஆனால் ராமன் 
மறுத்து விட்டான். பின்பு, அங்கேயே மிகவும் 
துயருற்ற ராமனும், சகோதரரும் தந்தைக்குச் 
செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்தனர். 
பரதனிடம் ராமன், பரதா! உன் விருப்பப்படி 
நான் அயோத்திக்கு வருவது சரியல்ல. 
தந்தையின் வாக்குப் பொய்யாகி விடும். 
நானும் என் வாக்குறுதியை 
நிறைவேற்றத்தானே வனம் வந்திருக்கிறேன். 
அவருக்கு நீயும் மகன் என்ற முறையில் 
அயோத்தி சென்று மக்களுடைய நலத்தைப் 
பேணுவதில் அக்கறை செலுத்து என்றான்.  

அண்ணா!  அயோத்தி அரசுக்கு உரியவர் 

தாங்கள். நீங்கள் அங்கு வராமல் நான் 
அயோத்தி திரும்பமாட்டேன் என்ற சபதம் 
எடுத்து இங்கு வந்திருக்கிறேன். ஆக தயவு 
செய்து தாங்கள் பட்டத்தை ஏற்றுக் கொள்ள 
வேண்டும்! என்று பரதன் பணிந்து 
உரைத்தான். தம்பி! அரசன் இல்லாத மக்கள் 
தவிப்பார்கள். உடனே நீ அயோத்திக்குப் 
போக வேண்டும்! என்றான் ராமன். 

அண்ணா! அப்படியானால் நான் உங்கள் 
ராஜ்யத்தை உங்கள் பிரதிநிதியாகவே ஆட்சி 
செய்வேன். அதற்காகத் தாங்கள் தங்களது 
பாதுகைகளை எனக்குத் தந்தருள 
வேண்டும் என்று பிரார்த்தினான்.

ராமன் பாதுகைகளைக் கொடுத்தான். 

அவற்றைத் தலை மேல் தாங்கிக் 
கொண்ட பரதன், அயோத்திக்குப் 
போகவில்லை. ராமனின்றி தலைநகர் 
போவதில்லை என்ற உறுதி பூண்டிருப்பதால் 
நந்திக்கிராமம் என்ற இடத்திற்குச் சென்றான்.
 ராமனுடைய பாதுகைகளைச் சிம்மாசனத்தில் 
வைத்து பூஜித்து அவருடைய பிரதிநிதியாகவே 
இருந்து அரசு காரியங்களை மேற்கொண்டான். 

ஸ்ரீராமன், சீதை லட்சுமணுடன் அத்திரி 
முனிவர் ஆசிரமம் போனான். அங்கு தங்கி 
அவருடைய உபகாரங்களை ஏற்றுக்கொண்டு 
மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். 
அவர்கள் செல்லும் வழியில் விராதன் 
என்ற அரக்கன் குறுக்கிட்டான். அவனை 
அழித்துவிட்டு அகஸ்தியர் ஆசிரமம் சென்றான். 
அவர் வில்லும் அஸ்திரங்களும் கொடுத்து 
உதவினார். அங்கிருந்து கோதாவரி நதி 
தீரத்திற்குப் போகும் வழியில் பறவைகளின் 
அரசனான ஜடாயுவைச் சந்தித்தான். 
அவரோடு அளவளாவிய பின்னர் பஞ்சவடி 
வந்தான். 

பர்ணசாலை அமைத்து அவர்கள் மூவரும் 

அங்கு தங்கினர். அந்தக் காட்டின் பெயர் 
தண்டகாருண்யம் என்பதாகும். ராமர் அங்கு 
வந்து சேர்ந்ததால் அங்குள்ள முனிவர்கள் 
அரக்கர் பயமின்றி வாழ முடிந்தது. அங்கே
 ஒருநாள் இராவணன் என்ற 
இலங்கேஸ்வரனுடைய தங்கை சூர்ப்பனகை 
என்பவளைக் காண நேர்ந்தது. அவர் ராமருடைய 
அழகைக் கண்டு மயங்கினாள். அவரை அடைய 
ஆசைப்பட்டாள். ஆயினும் தன்னிலும் அழகு 
மிகுந்த சீதை அவன் கூட இருக்கும் வரை 
தன் ஆசை நிறைவேறாது என்ற முடிவுக்கு 
வந்தாள் சூர்ப்பனகை. பேரழகியாக வடிவம் 
தாங்கிப் பஞ்சவடிக்குள் நுழைந்தாள் 
சூர்ப்பனகை. லட்சுமணனுக்கு அவளுடைய 
தீய எண்ணம் தெரிய வந்தது. 

அதனால் அவன் அவளுடைய மூக்கையும், 

காதுகளையும் அறுத்து அவளை 
அவமானப்படுத்தி விரட்டி அடித்தான். 
இதை அவளுக்குப் பக்கத்தில் இருந்த 
கரன், தூஷணன் என்ற இரு 
சகோதரர்களுக்கும் தெரிவித்தாள். 
அவர்கள் தம் சகோதரிக்கு ஏற்பட்ட 
அவமானத்தைப் பொறாதவராக ராம 
லட்சுமணர்களைக் கொன்று விடுவதாகக் 
கூறி அவர்களுடன் போரிட வந்தார்கள். 
ராமர் தன்னந்தனியாகவே இருந்து மிகவும் 
குறுகிய காலத்தில் அவர்கள் இருவரையும் 
சம்ஹரித்தான். சூர்ப்பனகை உடனே 
இலங்கைக்கு ஓடினாள். 

ராவணனாகிய தன் சகோதரனிடம் 

கர தூஷணாதியர் இராமனால் வதம் 
செய்யப்பட்டதும், தான் காது, மூக்கு 
அறுபட்டதையும் உள்ளம் உருக எடுத்துச் 
சொன்னாள். அதோடு அவள் நிறுத்தினாளா? 
இல்லை. ராமன் மனைவி சீதை பேரழகி. 
அந்த அழகு பிம்பத்தை அவன் 
அடைய வேண்டும் என்ற ஆசைக்கனல் 
அவன் உள்ளத்தில் தோன்றும்படி சொன்னாள். 
இதைக் கேட்டதும் சீதையை அபகரித்துக் 
கொண்டு வந்து தன் அந்தப்புரத்தில் 
வைத்துக் கொள்ள வேண்டும் என 
ராவணன் தீர்மானித்தான்.

மாயவேலை செய்வதில் அதிசாதுர்யமான 

மாரீசன் என்ற அரக்கனைப் பொன்மான் 
உருக்கொண்டு பஞ்சவடியில் திரியச் 
சொன்னான். அப்படி மானாகத் திரிந்து 
ராம லட்சுமணர்களை அங்கிருந்து 
சிறிது தூரம் தள்ளி அழைத்துச் செல்லுமாறு 
ஏற்பாடு செய்திருந்தான். அவ்வாறே மாரீசன் 
பொன்மானாக மாறினான். பஞ்சவடிக்குச் 
சென்று ராமர் சீதை உள்ள பர்ணசாலைப் 
பக்கம் நடமாடினான். தகத்தகாயமாக 
மின்னும் பொன்மானைக் கண்டாள் சீதை. 
அதைத் தனக்குப் பிடித்து தருமாறு 
ராமனை வேண்டினாள். 

லட்சுமணனோ தேவி! அது உண்மையான 

மான் அல்ல. உங்களையும் மற்றோரையும் 
ஏமாற்ற வந்த மாயமான்! என்றான். சீதை 
அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்ரீராமர் 
பர்ணசாலையில் லட்சுமணனைக் காவலாக 
இருக்கும்படிச் சொல்லிவிட்டு மானைத் 
துரத்தினார். கையில் வில்லோடு தன்னை 
தொடர்ந்து வரும் ஸ்ரீராமனிடம் அகப்படாத 
மாயமான் அவனை வெகுதூரம் இழுத்துச் 
சென்றது. அலைச்சலில் சினந்த ராமன் ஒர் 
அம்பு விட்டு அழகிய மானைக் கொன்றார். 
மாரீசன் உயிர் விடும் போது ராமனுடைய 
குரலைப் போன்று மாற்றிக் கொண்டு 
ஹே லட்சுமணா! ஹே சீதா என்று அலறிய 
படியே உயிரை விட்டான். சீதை 
பர்ணசாலையில் இருந்தாலும் அவளுக்கு 
அந்தக் குரல் கேட்டது. அவள் அதனால் 
வேர்த்து வெலவெலத்துப் போய், லட்சுமணா! 
உன் அண்ணாவுக்கு ஏதோ ஆபத்து என
 நினைக்கிறேன். நீ சீக்கிரம் போய் பார் 
என்று லட்சுமணனை அங்கிருந்து போய்ப் 
பார்த்து வரும்படி வேண்டினாள். 

தேவி! இது அந்த மாயமானுடைய குரல். 
என் சகோதரனை வெல்பவர் இந்த பூமியில் 
எங்கும் கிடையாது. ஆகவே கவலை வேண்டாம்! 
என்றான் லட்சுமணன். இப்படி சொன்னதும் 
அவளுக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. 
லட்சுமணா, நான் சொல்வதைக் கேள், 
நீ உடனே ஓடிச்சென்று உன் அண்ணனுக்கு 
என்ன நேர்ந்தது என்று பார்! என ஆவேசமாகக் 
கூறினாள். சீதையைப் பர்ணசாலையில் தனியே 
விட்டு விட்டுத் தன் அண்ணனைத் தேடிச் 
சென்றான் லட்சுமணன். அந்த சமயம் 
பஞ்சவடியில் ராவணன் ஏற்கனவே 
வந்து பதுங்கி இருந்தான். ஓர் சந்நியாசியாய் 
பர்ணசாலைக்கு வந்து பிச்சை கேட்டான். 
சீதை பிச்சை போட வந்தாள். 

அப்படியே  அவளை கவர்ந்து கொண்டு 

விமானத்தில் ஏறி பறந்து போனான் ராவணன். 
பறக்கும் ஆகாய வீதியில் பறவைகளின் 
அரசனான ஜடாயு வந்து எதிர்த்தான். 
அடாத செயலுக்கு அழிவுகாலம் வந்து 
சேரும் என்று சொல்லிவிட்டு அவன் 
ராவணனைத் தாக்கினான். ராவணனோ 
ஜடாயுவை அடித்துப் பலமான காயங்களை 
ஏற்படுத்தி விட்டு அவனைக் கீழே தள்ளி 
விட்டு நேரே இலங்கைக்குப் போனாள். 
மாரீசனைக் கொன்ற ராமன் பர்ணசாலைக்குத் 
திரும்பினான். அங்கு வரும் வழியில் 
லட்சுமணன், தங்களுக்கு ஏதோ ஆபத்து 
என பார்த்து வரும்படி சீதாதேவி என்னை 
அனுப்பினார் என ராமனிடம் சொன்னான். 
இருவரும் பெருத்த கலக்கமுற்று 
பர்ணசாலைக்கு திரும்பினார்கள்.

அங்கு சீதை இல்லாததைக் கண்டு 

கலக்கமுற்றனர். இருவரும் சீதையை 
வனாந்தரம் முழுவதும் தேடிக் 
கொண்டிருந்தனர். அப்போது பலத்த 
காயங்களுடன் ஜடாயு உயிருக்குப் 
போராடிக் கொண்டிருப்பதைக் கண்டனர். 
ஜடாயுவை தன் மடியில் கிடத்தினார் ராமன். 
ராவணன் சீதையை கடத்திச் சென்றதை 
அறிவித்து விட்டு உயிர் நீத்தான் ஜடாயு. 
ஜடாயுவுக்கு ஈமச்சடங்குகளை எல்லாம் 
செய்து விட்டு ராமனும், லட்சுமணனும் 
அங்கிருந்து கிளம்பினார்கள். கபந்தன் என்ற 
ஓர் அரக்கன் அவர்களை இடைமறித்தான். 
அவனோ பிறப்பால் அரக்கன் கிடையாது. 
சாபத்தின் காரணமாக அவன் அரக்கனாகத் 
திரிந்தான். அவனை அவர்கள் வதம் 
செய்யவே சாப விமோசனம் பெற்றான். 
சாபவிமோசனம் ஆனதும் அவன் உடல் 
தேஜோமயமாகத் திகழ்ந்தது. அந்த 
ஒளிமிகுந்த உடலுடன் அவர்களை வலம்
 வந்து வணங்கி அவர்களைச் சபரியிடம் 
போகுமாறு வேண்டினான். 

அவர்கள் சபரியிடம் போனார்கள். 

அவள் மிகவும் பக்தி சிரத்தையோடும், 
அன்போடும் உபசரித்தாள். அவள் 
ராமருக்குப் பழவகைகளைக் 
கொடுக்கும் முன்பு தான் கடித்துச் சுவை 
பார்த்துவிட்டே அவருக்குக் கொடுத்தாள். 
அதைக் கண்டு பூரிப்பும், ஆனந்தமும் 
அடைந்தான் ராமன். அவள் கடித்துக் 
கொடுத்தப் பழங்களை விரும்பி சாப்பிட்டான். 
அவள் ராமரையும், லட்சுமணரையும் 
மதங்கமலைக்குப் போகும்படி அறிவுறுத்தினாள். 
மேலும் அங்கு சென்றால் அந்த மலையைச் 
சேர்ந்த சுக்ரீவன், அனுமன் முதலியோர் 
சீதையை மீட்கப் பெரிதும் உதவுவார்கள் 
என்றும் சொன்னாள். பகவான் அவளுக்கு 
மோட்சத்தைக் கொடுத்து விட்டு அங்கிருந்து 
மதங்கமலைக்குப் புறப்பட்டார். 

சுக்ரீவன் மதங்கமலையில் 

அனுமனோடு தங்கியிருந்தான். 
கிஷ்கிந்தை மன்னனான வாலியின் 
சகோதரன் சுக்ரீவன். அவனை அவன் 
அண்ணன் நாட்டைவிட்டுத் 
துரத்திவிட்டதால் அவனுக்குப் 
பயந்து மதங்கமலையில் 
ஒளிந்திருந்தான். ராம லட்சுமணர்களை 
அந்த மலைச்சாரலில் பார்த்தவுடன் 
அவர்கள் தன் அண்ணா வாலியால் 
அனுப்பப்பட்டுத் தனக்கு துன்பம் 
விளைவிக்க வருகிறார்களோ என்று 
பயந்தான். எனவே அவர்களை யார் 
என்று தெரிந்து வரும்படி அனுமனை 
அனுப்பினான். அவர்களைப் பற்றி அறிந்து 
கொண்ட அனுமன் ஸ்ரீராமனிடம் மிகுந்த 
மதிப்புக் கொண்டான். பிறகு சுக்ரீவனிடம் 
ராம, லட்சுமணர்களை அழைத்துச் 
சென்றான். சுக்ரீவனைச் சந்தித்து விவரம் 
அறிந்ததும் அவனைத் தன் சகோதரர்களில் 
ஒருவனாக ஏற்றுக்கொண்டு அவனுடைய 
துயரத்தைத் துடைப்பதாக வாக்குறுதி 
கொடுத்தான். எனினும் சுக்ரீவனுக்கு 
அவனிடம் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. 
காரணம் வாலியை ராமன் ஒருவனாகக் 
கொல்ல முடியாது என்று அவன் நினைத்தான்.

காரணம் வாலியும் வரம் பெற்றவன், 

அவனை எதிர்ப்போர் பலத்தில் பாதி 
அவனிடம் போய் விடும். அப்படிப்பட்டவனை 
ஒரு தெய்வம் தான் வெல்ல முடியுமே தவிர, 
ஒரு மனிதன் நிச்சயம் ஜெயிக்க முடியாது 
என்ற நம்பிக்கை அவனிடம் வலுத்து 
இருந்ததே காரணம். பின்னர் வாலியை 
யுத்தத்திற்கு அழைக்கும்படி சுக்ரீவனை 
அனுப்பினார். வாலி வந்தான். சுக்ரீவனுடன் 
போரிட்டான். அப்படி அவர்கள் இருவரும் 
போரிடும் போது ராமன் வாலியை 
மறைந்து நின்று அம்பு எய்து கொன்றான். 
சுக்ரீவனைக் கிஷ்கிந்தை மன்னன் ஆக்கினான். 
அதற்குப்பின் சீதையை தேட பல 
பாகங்களுக்கும் வானரப் படைகளை 
அனுப்புவதாகச் சொன்னான் சுக்ரீவன். 
அப்போது மழைக்காலமாக இருந்ததால் 
சிறிது காலம் கழித்து அனுப்புவதாக 
வாக்குறுதி அளித்தான். பின் தான் கூறிய
 வாக்குறுதியை மறந்தே போனான் 
சுக்ரீவன். 

அவன் சிற்றின்பத்தில் கட்டுண்டு 

கிடக்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட 
ராமர், லட்சுமணனை அவனிடம் 
அனுப்பி வைத்தான். அங்கே மதிமயங்கிக் 
கிடந்த சுக்ரீவனைப் பார்த்து, வாலியைக் 
கொன்ற அஸ்திரத்தைப் போல 
ஆயிரக்கணக்காண அஸ்திரங்கள் 
இருக்கின்றன அதை மறக்க வேண்டாம்! 
என்று தெரிவித்தான். அதைக் கேட்டதும் 
தான் செய்த தவறை உணர்ந்தான் சுக்ரீவன். 
ராமனின் பாதங்களில் விழுந்து வணங்கி 
தன்னை மன்னிக்குமாறு வேண்டிக் 
கொண்டான். அதன்பின் சீதையைத் 
தேட நாலாப்புறமும் வானரப் படைகளை 
அனுப்பினான். அப்படி சென்ற படைகளில் 
தெற்கே சென்ற படைகளை அனுமன்,
 அங்கதன், ஜாம்பவான் தலைமை தாங்கி
 நடத்திச் சென்றனர். அவர்கள் 
எங்கெல்லாமோ தேடியும் கிடைக்காமல் 
மகேந்திர மலைக்கு வந்தார்கள். 
முயற்சியில் தோற்றாலும் உடனே 
அவர்கள் கிஷ்கிந்தை திரும்பவில்லை. 
சீதாபிராட்டியைப் பார்க்கும் பாக்கியம் 
ஜடாயுவுக்குக் கிடைத்தது மாதிரி 
தங்களுக்குக் கிடைக்கவில்லையே 
என அவர்கள் ஏங்கினர். அந்த சமயத்தில் 
அருகாமையில் தான் ஜடாயுவின் அண்ணன் 
சம்பாதி இருந்த விவரம் தெரிய வந்தது. 
ராம லட்சுமணர்களுடைய துன்பத்தை 
அறிந்த சம்பாதி சீதையை ராவணன் சிறை 
வைத்திருக்கிற சேதியை சொன்னான்.

அனுமனை அனுப்பி கடலைத் தாண்டி 

ராவணன் அவளை எங்கே சிறை 
வைத்திருக்கிறான் என்று அறிந்து 
வரும்படியும் ஆவேசமாகக் கூறினான். 
அதே போல எல்லோரும் அனுமனை 
அவ்வாறு வேண்டிக்கொண்டார்கள். 
பகவானிடம் அவன் கொண்டிருந்த 
ஆழ்ந்த பக்தியால் அவன் விஸ்வரூபம் 
எடுத்தான். கடலைத் தாண்டி இலங்கையை 
அடைந்து அங்கு சீதையை நெடுகத் தேடினான். 
கடைசியாக அசோக வனத்திற்குள் அவன் 
போனதும் அங்கே சீதா, ஸ்ரீராமரை நினைத்து 
வருந்தி அழுது கொண்டிருந்தாள். இதைக் 
கண்ட அனுமன் மிகவும் வருந்தினார். 
அவளைச் சுற்றி காவலில் இருந்த பெண்கள் 
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொழுது 
சீதாதேவியை நேரில் பணிந்து தொழுதான். 
தான் யார் என்பதை அவளிடம் எடுத்து கூறினான். 

மேலும் தங்களைத் தான் நான் தேடி 

வந்துள்ளேன், அதற்கு அடையாளமாக 
ஸ்ரீராமர் கொடுத்து அனுப்பிய 
கணையாழியைக் கொடுத்து வணங்கினான். 
அதைத் தன் கைகளில் வாங்கி கண்களில் 
ஒற்றிக்கொண்டாள் சீதா. எம்பெருமானுடைய 
கணையாழியைப் பெற்று மகிழ்ந்த சீதா 
தன்னிடமிருந்த சூடாமணியை அனுமனிடம் 
கொடுத்தாள். பின்பு இலங்கையில் தான் 
இருக்கும் நிலைமையை எடுத்துக் கூறி, 
பிரபுவை தயவுசெய்து சீக்கிரமே வந்து 
என்னை சிறை மீட்கச் சொல்வாயாக 
என்று வேண்டிக் கொண்டாள். அவளைப் 
பார்த்து விட்டோம் என்ற களிப்பில் 
உடனே அனுமன் திரும்பவில்லை. 
ராவணன் கோட்டைக்குள் இருக்கிற 
நிலைமையையும் தெரிந்து கொண்டு 
போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. 
இதனால் ராவணனுடைய அசோகவனத்தை 
அழிக்கும் வேலையில் இறங்கினான். இந்த 
சேதி ராவணன் காதுக்கு எட்டியது. உடனே 
அந்த வானரத்தை பிடித்து வருமாறு தன் 
பேரனும், தன் மகன் இந்திரஜித்தின் 
பிள்ளையான அட்சயன் தலைமையில் 
ஒரு சேனையை அனுப்பினான். அனுமன் 
அவர்களை ஒரு சில கணப் பொழுதில் 
மாய்த்து விட்டான். அதனால் சீற்றம் 
கொண்ட ராவணன் மகன் இந்திரஜித்தே 
நேரில் புறப்பட்டு அசோகவனத்திற்கு
 வந்தான். அவன் தன்னுடைய 
பிரம்மாஸ்திரத்தினால் அனுமனைக் 
கட்டி இழுத்து வந்து ராவணன் அவையில் 
நிறுத்தினான். அப்போது அவனைப் பார்த்து 
ராவணன், அத்துமீறி அட்டகாசம்
 செய்யும் வானரமே நீ யார்? என்று 
வினவினான்.

என் பெயர் அனுமன். நான் கோசலை 

நாட்டு மன்னன் ஸ்ரீராமனுடைய தூதன். 
அதோடு கிஷ்கிந்தை அரசன் 
சுக்ரீவனுடைய தாசன் என்று தன்னை 
அறிமுகம் செய்து கொண்டு, மேலும் 
ராவணனிடம் ஹே! ராவணா! நீ 
புத்திகெட்டுப் போய் தேவி சீதாவை 
அசோகவனத்தில் சிறை வைத்திருக்கிறாய். 
இனியும் நீ தாமதியாமல் ஸ்ரீதேவியை 
எம்பெருமானிடம் ஒப்படைத்து விடு. 
அவர் உன்னை மன்னித்து உனக்குத் 
திருவருள் தருவார்! என்று எடுத்துச் 
சொன்னான். அப்போது ராவணன் 
அவனைக் கொன்றுவிடுங்கள் என்று 
கூறினான். தூதனாக வந்த அனுமனை 
நாம் கொல்வது தர்மம் அல்ல என்றான் 
ராவணன் தம்பி விபீஷணன்.

 உடனே இலங்கேஸ்வரன் தன் ஆட்களை 

அழைத்து ஏதாவது அவமானம் செய்து 
அனுமனை அனுப்பலாம் என்று சொல்லி, 
அனுமன் வாலில் தீ வைத்து அவனை 
விரட்டி விடுங்கள் என்று கட்டளை இட்டான். அ
னுமனோ வாலில் எரிந்த நெருப்பைக் 
கொண்டு இலங்கையை எரித்து விட்டு 
மகேந்திரமலைக்கு திரும்பினான். 
அங்கிருந்து எல்லாருமாக ஸ்ரீராமரை 
அடைந்தனர். கண்டேன் தேவியை! என்று 
அனுமன் ஸ்ரீராமரிடம் சொல்லி விட்டு 
அவள் அடையாளமாகக் கொடுத்து 
அனுப்பிய சூடாமணியைக் கொடுத்தான். 
தேவியின் சூடாமணியைக் கண்டதும் 
ராமர் கண்ணீர் விட்டார். சீதாதேவியின் 
நிராதரவான நிலையை நினைத்துப் 
பெரிதும் வருந்தினார். சுக்ரீவனை 
அழைத்து யுத்தத்திற்குத் தயாராகும்படி 
கேட்டுக் கொண்டார். வானர சேனைகளுடன் 
அனைவரும் புறப்பட்டு சமுத்திரக் 
கரைக்கு வந்து சேர்ந்தார்கள். ராமனிடம் 
கொண்டிருந்த அன்பு காரணமாக ச
முத்திரத்தில் மலைகளையும், பாறைகளையும்
 போட்டு இலங்கைக்குப் போய்ச்சேர 
பாலம் அமைத்தார்கள். அதன் வழியே 
அனைவரும் இலங்கைத் தீவுக்குப் போய்ச் 
சேர்ந்தனர். ராவணனுடைய தம்பி 
விபீஷணன் அசுர குலத்தில் பிறந்தாலும் 
தன் சகோதரன் தர்மத்திற்கு விரோதமாகப் 
பிறர் மனைவியை சிறை எடுத்து 
வந்திருப்பதை அவனால் பொறுத்துக் 
கொள்ள முடியவில்லை. ஆகவே அவன் 
தன் அண்ணனிடம் தர்மங்கள் எடுத்துச் 
சொன்னான். அண்ணா! நீ இன்று சீரும் 
சிறப்புமாக இருக்கக் காரணம் 
பரமேஸ்வரனாகிய சிவபெருமானிடம்
 நீ பெற்ற வரம்; அவரும் உனது ஈனச் 
செயலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள
 மாட்டார். பிறர் மனைவியை விரும்புவது
 தகாது என்று சாஸ்திரங்கள் 
சொல்லுகின்றனவே. ஆகவே இத்தகைய 
பாதக செயலை விட்டுவிடு. 
சீதாதேவியை நாம் ராமரிடம் 
ஒப்படைத்து சரணடைந்து விடுவோம். 
அவர் நம்மை மன்னித்தருள்வார் என்றான்.

ராவணன் கோபமாக விபீஷணனைப் பார்த்து, 

அசுரகுலத்துக்கே நீ இழுக்கு! நீ கூறுவதை 
என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது 
என்றான். இனியும் இவனுடன் இருப்பது 
பாதகம் என்றெண்ணிய விபீஷணன் 
ராமரிடம் சரண் புகுந்தான். அப்போதே 
ராமன் இலங்கையை அவனுக்குக் கொடுத்து 
முடிசூட்டி வைத்தார். யுத்தம் தொடங்கும் 
முன் ஒருவேளை அரக்கர்கள் குணம் 
மாறலாம் என்று நினைத்து ராமன் 
ராவணனிடம் அங்கதனைத் தூது 
அனுப்பினான். 

ராவணனோ சீதையை விடுவிக்க 

முடியாது எனப் பிடிவாதமாக மறுத்து 
விட்டான். யுத்தம் மூண்டது. வானர 
சேனைகள் அரக்கர் கூட்டத்தை துவம்சம் 
செய்தனர். ராவணன் தன் படைகளுடன் 
ராமனை எதிர்த்தான். அவனுடைய 
சேனைகள் அனைத்தையும் வீழ்த்தி, 
வில்லை முறித்து யுத்த களத்தில் 
ராவணனை தலை குனியச் செய்தார் 
ராமன். நிராயுதபாணியாக இலங்கேஸ்வரன் 
நின்ற போது, இன்று போய் நாளை 
படை திரட்டி மீண்டும் வா! என்று மேலும்
 அவகாசம் கொடுத்தார் ராமர். அவமானம் 
தாங்க முடியாத ராவணன் அரக்கர் 
சேனையை ஒன்று திரட்டி தன் தம்பி 
கும்பகர்ணனைப் போர்க்களத்திற்கு 
அனுப்பினான். அவன் வதம் செய்யப்பட்டதும் 
தன் குமரன் அதிகாயனை அனுப்பினான். 
அவனும் கொல்லப்பட்டதும் இந்திரஜித் 
யுத்தகளத்தில் குதித்தான். இந்திரஜித், 
லட்சுமணனையும் மற்ற வீரர்களையும் 
நாக பாசத்தால் கட்டினான். கருடன் 
பிரத்தியட்சமாக அந்த பாசத்தை 
அறுத்து அத்தனை பேரையும் விடுவித்தான். 
மறுபடியும் இந்திரஜித் அவர்களை 
பிரம்மாஸ்திரத்தால் கட்டினான். 
அனுமன், ஜாம்பவானைத் தவிர 
அத்தனை பேரும் மயங்கி விழுந்தன. 
அனுமன் விரைந்து போய் சஞ்சீவி 
மலையைக் கொண்டு வந்து 
எல்லோரையும் பிழைக்கச் செய்தான். 

இந்திரஜித் தன் நாக, பிரம்ம பாசங்கள் 

தோல்வியடைந்ததால், நிகும்பலை 
என்ற யாகத்தைச் செய்யத் தொடங்கினான். 
அதற்காக ஓர் இரகசிய இடத்தைத் தேர்ந்து 
எடுத்து இந்த வேள்வியை ஆரம்பித்தான். 
அதனால் யாராலும் தன்னைக் கொல்ல 
முடியாத வரம் பெற்றுப் போர் முனைக்கு 
வர ஆயத்தமானான். அதை அறிந்த 
விபீஷணன் ராம லட்சுமணர்களிடம் 
விபரம் சொல்லி அந்த ரகசிய இடத்திற்கு 
அவர்களை அழைத்துச் சென்று யாகத்தைத் 
தடுத்து, இந்திரஜித்தை வதம் செய்ய 
வைத்தான். தன் மகன் இந்திரஜித் இறந்து 
விட்டான் என்ற சேதி கேட்டு ராவணன் 
ஆடிப் போனான். எனினும் ஸ்ரீராமனிடம் 
அவன் பணிய விரும்பவில்லை. 
தன் மூல பலத்தைத் திரட்டிக் கொண்டு 
போருக்கு வந்தான். தமது பாணத்தால் 
ராவணனை சம்காரம் செய்தார் ராமர். 
அப்போது தேவர்கள் அவர் மீது மலர் 
மாரி பொழிந்தனர். கற்பகாலம் ஜீவித்திருக்க 
விபீஷணனுக்கு அனுக்கிரகம் செய்து 
இலங்கை மன்னனாக முடிசூட்டி 
வைத்தார் ராமர். பின்னர் அனைவரும் 
அயோத்திக்கு ராமர் சீதையுடன் 
புஷ்ப விமானத்தில் செல்லும் போது 
வழியில் கிஷ்கிந்தையிலும் பரத்வாஜர் 
ஆசிரமத்தில் தங்கிச் சென்றார்கள்.

அயோத்தியே மகிழ்ச்சிக் கடலில் 

ஆழ்ந்தது. பரதன் ஸ்ரீராமரை சிங்காசனத்தின் 
அமர்த்தினான். வசிஷ்டர் முதலான 
ரிஷிகள் ராமனுக்கு புனித நீரால் 
அபிஷேகம் செய்து மகுடாபிஷேகம் 
செய்தனர். ஸ்ரீராமர் சீதையுடன் தரும 
நெறி வழுவாது பல ஆண்டுகள் ராஜ்ய 
பரிபாலனம் செய்து வந்தார். கோசலை 
நாடு சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது. 
ஒரு நாள் ராமர் நகர் வலம் வந்தார். 
அங்கே ஒரு வீட்டில் உள்ளவர்கள் 
தம்மைப் பற்றி பேசுவதைக் கேட்டார். 

அங்கே சீதாதேவியைப் பற்றி தவறான 

விவாதம் நடந்து கொண்டிருப்பதைக் 
கேட்டார். அந்த வார்த்தைகள் ராமனுடைய 
நெஞ்சில் முள் போல் குத்தியது. 
தர்மத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து 
வந்த நாம் இப்படி ஒரு விஷயத்தை 
எண்ணிப் பார்க்கவில்லையே என 
துயருற்றார். இதன் காரணமாக உலக 
நிந்தனைக்குப் பயந்து கர்ப்பிணியான 
தன் சீதையைக் காட்டில் கொண்டு 
போய் விட்டு வர லட்சுமணரைப் 
பணித்தார். தாங்க முடியாத துயரத்துடன் 
வந்த ஜானகியை வால்மீகி தன் 
ஆசிரமத்தில் தங்கச் செய்து அவளை 
நன்கு கவனித்துக் கொண்டார். 
அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். 
அந்த  குழந்தைகளுக்கு லவன், 
குசன் என்று பெயரிட்டார் வால்மீகி. 
அதே சமயம் அயோத்தியில் 
லட்சுமணனுக்கு, புதன், சந்திரகேது, 
பரதனுக்கு தட்சன், புஷ்கரன், 
சத்ருகனுக்கு சுதாகு, சுருதசேனன் 
என பிள்ளைகள் பிறந்தனர். 

பரதன் திக் விஜயம் செய்து 

கந்தர்வர்களை வென்று ஏராளமான 
செல்வங்களைக் கொண்டு வந்து 
ராமனிடம் சமர்ப்பித்தான். 
சத்ருக்கன் லவணன் என்ற ஓர் 
அரக்கனை வதம் செய்தான். அவன் 
மதுவனத்தில் மதுரை என்ற ஒரு 
பட்டணத்தை உண்டாக்கினான். 
வால்மீகி மகரிஷி ராமனுடைய 
சரித்திரத்தை ராமாயணம் என்ற 
பெயரில் இயற்றி அதை லவகுசர்களுக்குச் 
சொல்லி வைத்தார். இருவரும் ஒருநாள் 
இதை ராமனுடைய அரசவையில் 
அரங்கேற்றினார்கள். அவர்களை தம் 
குமாரர்கள் என்று அறிந்த ராமர், 
மேலும் வால்மீகி ஆசிரமத்தில் 
சீதை இருக்கிறாள் என்பதையும் 
அறிந்து அவளை அடைய எண்ணினார்.

ஸ்ரீராமனுடைய உள்ளக்கிடக்கையை 

அறிந்த வால்மீகி அவளைப் புனிதவதி 
என்று ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். 
சீதையோ தான் கற்புத்தன்மையில் 
இருந்து கொஞ்சமும் வழுவாது 
இருக்கிறேன் என்பது உண்மையானால் 
தன்னை பூமாதேவி அழைத்துக் 
கொள்ளட்டும் என்று தெரிவித்தாள். 
அவள் இப்படிச் சொன்னதும், பூமி 
இரண்டாகப் பிளந்தது. அதனுள்ளிருந்து 
பூமாதேவி வெளிப்பட்டு சீதையை தன் 
இரு கைகளில் ஏந்தியவளாக அழைத்துக் 
கொண்டு மறைந்தாள். தன் விருப்பத்திற்கு 
மாறாக பூமாதேவி தன் தர்மபத்தினியை 
பிரித்து சென்றுவிட்டாள் என ராமர் 
கோபமடைந்தார். 

அப்போது பிரம்ம தேவன் தோன்றி 

ராமனை சமாதானப்படுத்தி சீதா தேவியின் 
பூலோக வாசம் முற்றுப் பெற்றது. அவள் 
வைகுண்டத்தில் உங்கள் வருகைக்காக 
காத்திருப்பாள் என்று பிரம்மா சொன்னார். 
அதன் பிறகே ராமர் சாந்தமடைந்தார். ராமர் 
தன் புதல்வர்கள் லவ, குசனை ஏற்றுக் 
கொண்டார். பதின்மூன்றாயிரம் ஆண்டுகள் 
ஸ்ரீராமர் ஆட்சி செய்து விட்டு ராஜ்யத்தை 
தன் புத்திரர்களுக்கும், தமது சகோதரர்களின் 
பிள்ளைகளுக்கும் பகிர்ந்து அளித்தார். 
அதன் பிறகு சரயு நதியில் இறங்கி 
வைகுண்டம் சேர்ந்தார். அவரைப் பின் 
தொடர்ந்து சங்கு சக்ர அம்சங்களாகப் பிறந்த 
சத்ருகன், பரதனும் ஆதிசேஷனான லட்சுமணனும் 
பூலோகத்தை விட்டு வைகுந்தம் சேர்ந்தனர்.


ஹரி ஓம் !!!