Sunday 25 May 2014
 ஜாதிப் பூ


06/05/2014 


விமர்சனப் போட்டிக்காக  
திரு. வை. கோபாலகிருஷ்ணன்  அவர்களால் 
வெளியிடப்பட்ட  கதை  "  ஜாதிப் பூ "

அதற்கான  இணைப்பு  

மிகவும் அழகான  சிறு கதை !
அழகான  ஒரு  பூக்காரியிடம், மனதை பறிகொடுத்த 
ஒரு இளைஞன் , தன் எண்ணத்தை  மற்றொரு 
பூக்காரியிடம் ( அவள் தான் ,  தான் விரும்பும் 
பெண்ணின்  பாட்டி என்பதை அறியாமல்  )
வெளியிடும்  நிகழ்ச்சி !

கதையை,  கவிதைபோல்  எழுதிய 
கதாசிரியரை  பாராட்ட வேண்டும் !

கதையை  விமர்சிக்கலாம் ! 
கருத்தைச் சொல்லலாம் !

இது   கவிதை !
மிகவும் அழகான  கவிதை !
அழகை,   அழகென்றுதான்  சொல்ல முடிந்தது ,
என்னால் .

பேரழகு என்றால் ,  அதில்  மறுபடியும்  
" அழகு " என்ற  வார்த்தை வருகிறதே ! 

மாற்று ?

யோசித்தேன் ! 
ஒன்றும்  தோன்றவில்லை !
தோற்றுத்தான்  போய்விட்டேன் !

அதனால்,  கதையின்  போக்கிலேயே 
மனதிற்கு  தோன்றியதை   கிறுக்கினேன் ! 

கிறுக்கியதையும்  அனுப்பிவிட்டேன், 
விமர்சனம்  என்ற பெயரால். 

விமர்சனம்  ஏதும் இல்லாமல் ,  கதையின்  போக்கிலேயே 
எழுதுவது  அர்த்தமில்லாத  ஒன்றுதான் !  இதைப் போலத்தான்  
இதற்குமுன் , "  மறக்க மனம்  கூடுதில்லையே " 
என்ற  சிறுகதைக்கு ,  சில பல  சினிமா  பாடல்  வரிகளை  
தொகுத்திருந்தேன் !  

இந்த  "  ஜாதிப் பூ " என்ற சிறுகதையில். 
" ஜாதிப் பூ ' விற்க்கும் , ஜாதி வெறிக்கும்  பின்னலிட்ட 
கதாசிரியரைப்  பாராட்ட வேண்டும்.

பூக்காரியிடம்  சிறு  வயது முதல்  தன்  வளர்ச்சியைப் 
பகிர்ந்து கொண்ட  கதா நாயகனிடம் ,  சிறு வயதிலேயே 
ஜாதி பூவைப் பற்றிய  ஒரு முதிர்ச்சியான  கேள்வி எழுப்பியது,  
கொட்டும்  மழையில் , உடல்  நலமற்றிருந்த  கிழவியையும், 
பூக்கூடையியும்  நனையாமல்  ,  குடிசை வர  குடை பிடித்து 
கூட்டிச் சென்ற , மனிதாபிமான, மனித நேயமிக்க  செயல், 
ஆகிய  இரண்டைத் தவிர ,  பாராட்டுவதற்கு  வேறொன்றும் 
இல்லை ,  என்னிடம். 

ஆனால்,  இவ்விரண்டும்  பலப்பல  வண்ணங்களில்  
விமரிசிக்கப்பட்டுவிடும்,  வித்தகர்களால் !!.

இதைத் தவிர  வேறு   என்ன  என்பதை  யோசித்து ,
ஒன்றும்  தோன்றாமல்தான்  , தோற்றுவிட்டேன்  என்று 
கூறினேன் !

தன் பேத்திக்கு, பேங்கில்  வேலை பார்க்கும்  கதாநாயகன் 
மணமகனாக  வருவது ,  பூக்காரிக்கு  சந்தோஷம்தான்.  
அவளை  விடுத்து , வேறு யாருக்கு  ???


இந்த கேள்விக்கு    "பதிலாக," நான்  தேர்ந்தெடுத்தது,  
பூக்காரியுடன் ,  மழையில்  நனையாமல்  சென்ற 
"  பூக்கூடையை " !

இக்கதையில்  பங்கு பெறும்  பாத்திரங்கள்,
பூக்காரி, பூக்காரியின் பேத்தி ( கதா நாயகி ) , கதா நாயகன்,
மற்றும்  குடையும்,  பூக்கூடையும் தான் !
குடை  ஒரே ஒருமுறை , காட்சியில் இடம் பெறுகிறது !
பூக்கூடை,  ஒவ்வொரு நாளும்  பூக்காரியுடன்  வருவது ! 

இந்த கதைக்கு , என்னுடைய  கருத்து ,
" இது  அனைவரின்  மனம் நிறைந்த  திருமணம் " 
 என்பதுதான் !


ஆதலால் ,  கதா நாயகன் , கதா நாயகியின்  திருமணத்தை 
எண்ணிக்   களிப்புறும்  தோழனாக,  பூக்கூடையை 
நிர்ணயித்து, கதையின்  போக்கிலேயே  கிறுக்கினேன் ,
 சில பல  வார்த்தைகளை  பிரசவித்து !

முடிவு.........................?

அது  எப்படியிருந்தாலும் ,  
சுமார்  40  வருடங்களாக,  சிறு சிறு  கடிதங்களைத் தவிர  ,
( அதுவும் 1989 வரைதான் ) வேறு  எதையும்  தமிழில்  
எழுதத் தெரியாமலிருந்த  என்னை எழுதத்  தூண்டிய ,
திரு.  வை. கோபாலகிருஷ்ணன்  அவர்களுக்கு 
மனமார்ந்த  நன்றிகள்  !!!  
என் கிறுக்கல்கள்  !!!

0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0

தூசியெனும்  போர்வையுடன் 
தூங்கிக்கொண்டிருந்த  என்னை,
தட்டி எழுப்பியது , 
ஒரு  
வளைக்கரம் ! 

சீந்துவார்  இல்லாமல் 
சீரற்று போன என்னை, 
சீண்டியது  யாரென்று 
சீற்றமுடன்  பார்த்தேன் ! 
சிரிப்புத்தான்  வந்தது, 
சீண்டியது,  
என் 
தோழி  என்பதால் ! 

என்  தோழி, 
வீறிட்டு  அழுதபோது 
விளையாட்டு  காட்டிட 
உருண்டு, புரண்டவன் , 
நான் !

என் தோழி, 
பூச்சாண்டி காட்டிட   
அவளுக்கு  முகமூடியாய் 
இருந்தவன், 
நான் ! 

தத்தியும், தவழ்ந்தும் வந்து , 
கால்களால்  எனக்கிட்ட  முத்தத்தை, 
மறந்திருப்பாள்  என்றிருந்தேன்,
மறக்கவில்லை  என்றது ,
அவள்  பார்வையும்,
புன்சிரிப்பும் ! ! 

பூக்காரி  எனும்  குதிரையேறி,
குடிசைக்கும்,  கோவிலுக்குமாய்,
சவாரி  செய்தவர்கள்  
நாங்கள் !

படிப்பை  முடித்து,
பாட்டியிடம்  சீராட, 
விடுப்பில்  வந்திருக்கும் 
பருவப் பெண்,
என்  தோழி ! 


மல்லிகைமுல்லை
ஜாதிப்பூ தாழம்பூ மகிழம்பூ,
கனகாம்பரம் ,    வாடாமல்லி 
வெண் தாமரைசெந்தாமரை, 
மரிக்கொழுந்து நந்தியாவட்டை, 
ரோஜாபட்டுரோஜா, 
ஜவ்வந்தி  பாரிஜாதம் 
இருவாட்சி,  செம்பருத்தி  
என,
எத்தனைப் பூக்கள் சுமந்திருப்பேன், அன்று !
அத்தனையும்  தோற்றுவிடும்,
அவள்  அழகினில், இன்று !

வேலை ஒன்றுமில்லை ! 
வெட்டியாய் இருக்க 
விருப்பமும்  இல்லை ! 
போட்டியிடுகிறேன்  உன்னுடன், 
திறமை  உண்டு  என்னிடம் !
கடை விரிப்பேன்  உன் எதிரில் ,
காட்டிக் கொள்ளாதே  உன் உறவை ! 
பகுதி  நேர  விற்பனையில் 
பாங்காய்  விற்றிடுவேன்,  
பூக்கள்  அத்தனையும்  ! 
கொக்கரித்தாள் ,  என்  தோழி !  
நெட்டி முறித்தாள்,  அந்தக்   கிழவி ! ! " ஜாதிப்பூ  வாங்கினால். 
  ஜாதி வெறி  வந்திடுமோ "
தயங்கி தயங்கிக்  கேட்ட    
சிறு வயது கண்ணனை, 
வரித்துவிட்டேன்,  
என் தோழனாக !
ஆனால்  
அவனுக்குத்  தெரியாது,
அவன், 
என் தோழனான  கதை  !

முக்கால் கிழவியிடம், 
முதல் ரேங்க் வாங்கியதை, 
மூச்சிரைக்க  ஓடிவந்து 
முக்கி முக்கி சொன்னவன், 
என் தோழன் !
ஆனால்,  
அவனுக்குத்  தெரியாது,
அவன், 
என் தோழன் என்று !

பள்ளி முதல் 
பேங்க் வரை 
ஒவ்வொரு  வளர்ச்சியையும் 
தள்ளாத கிழவியிடம் 
தயங்காமல் சொன்னவன், 
என் தோழன்  !
ஆனால்,  
அவனுக்குத்  தெரியாது,
அவன், 
என் தோழன் என்று ! 

நல்லார்  ஒருவருக்காக 
நாடெங்கும்  பெய்த மழையில் ,
நலிந்திருந்த கிழவியையும்,
மெலிந்திருந்த என்னையும் ,
குடிசை வரை 
குடை பிடித்து 
கூட்டிப் போனவன், 
என் தோழன் ! 
ஆனால்,  
அவனுக்குத்  தெரியாது,
அவன், 
என் தோழன் என்று ! 

பணி ஒய்வு  
பெற்ற   என்னை, 
மீண்டும் 
பூச் சுமக்க ஆணையிட்டாள், 
என் தோழி ! 

கடை  விரிப்பேன், 
கோவில் எதிரில் !
காவலும்  உண்டு 
என்  எதிரில் !
பக்கத்தில்  துணையிருக்க 
பூச்சுமந்து  வாராய் நீ !
பணியிட்ட  தோழியிடம் 
பணிந்துவிட்டேன் நானும் !

கன்னிப் பெண்,  விரித்த  கடை !
ஈக்களும் மொய்த்தன ! 
கொசுக்களும்  சுற்றின ! 
மொய்த்த ஈக்களை 
" ச்சூ" என்று  ஒட்டினாள் !
சுற்றிய கொசுக்களை 
" ப்பூ" ஊதினாள் ! 
கடைவிழி பார்வைக்கு 
ஏங்கிய காளையர் ஆயிரம் !
உள்ளம் கருத்திருக்க, 
நெற்றிக்கு  வெள்ளையடித்து,
உறவாட வந்த  கயவர்கள்   ஆயிரம் , ஆயிரம்  ! 
ஏறெடுத்து  பார்த்ததில்லை, 
ஏனென்றும்  கேட்டதில்லை !
கருமமே  கண்ணாயினாள், 
கடை விரித்த  என் தோழி !

அவள்  வேலை,  அவளுக்கு ! 
என் ஏக்கம், 
என் தோழனைப்  பார்பதற்கு ! 

எத்தனை  முறை வந்தாலும்,
திரும்பிப்  பார்த்ததில்லை !
பல்லில்லா  கிழவியிடம் 
பல்லைக்காட்டி இளிப்பதுதான் 
அவன்  வேலை ! 
பூ  விற்பவளைத்தான்  தெரியாது !
பூச்  சுமந்த என்னையுமா  தெரியாது ?
திட்டத்தான்  வாய் திறந்தேன் !
திரும்பிவிட்டான்  என்பக்கம் !
பார்த்தது  என்னையல்ல !
என் தோழியையும்,
அவளை மொய்த்திருந்த 
ஈக்களையும்,  கொசுக்களையும்தான்  !

கனல்  தெறித்த  அவன்  பார்வையில் 
கண்டு கொண்டேன், அவன்  உள்ளத்தை !
கனிவு கொண்ட  அவன் பார்வையில் 
அறிந்து கொண்டென், அவன்  ஆசையை ! 
மெல்ல  திரும்பினேன் ,
அப்பப்பா !
எத்தனை  அழகு,  என் தோழி ! 
இத்தனை  அழகும்,  என் தோழனுக்கே !
குதித்தேன் !  கும்மாளமிட்டேன் !

பூக்களின்  பெயர்களை 
கேட்டு கேட்டு 
தெரிந்து கொண்டாயே,  அன்று  ! 
உனக்காக பூத்திருக்கும் 
இந்த 
பூவையின் பெயரையும் 
கேட்டு தெரிந்துகொள், இன்று , 

கூவினேன், வாய்வலிக்க !
கேட்கவில்லை காது , 
அந்த  மடையனுக்கு !
மடையன் தான் !
ஆனாலும், 
அவன்,  என் தோழன் ! 
அவனுக்கு  தெரியாது,
கூவியது,
அவன் தோழன் என்று ! 

பூ விற்ற ,  பூவை வாங்கியோர் 
திரும்பிப் பார்க்கவில்லை,
பூச் சூடாத கிழவியை !
சோடை போனது,
வியாபாரம்  அன்று ! 

மிகுதியான  பூக்களை 
வேகமாக  மாறிட,
விடியலில் சென்றுவிட்டாள் 
என் தோழி,
தன் துணையை மாற்றிக் கொண்டு !

ஏமாற்றம்தான்,
ஆனாலும், ஒரு சந்தோஷம் !
என் தோழன் , 
என் அருகில் இருப்பதால்  !
ம்ம்... 
வெகுநாட்களுக்குப் பிறகு,
மீண்டும்  ஒரு சவாரி,
இக்கிழக் குதிரையின் மேல் ! 

கட்டிவிட்டாள் தன்  கடையை. 
வெகு சீக்கிரத்தில், 
என் தோழி !
கண் சிமிட்டி விடை பெற்றாள்,
உறவைச் சொல்லாத உறவுக்காரியிடம் ! 

பூ  வாங்க வந்தவர்கள் 
பூவைக் காணாமல்,
பூ  விற்றவளிடம் கேட்டார்கள், 
பூ  எங்கே ? என்று, 

சொந்தத்தைச் சொல்லாத 
சொந்தக்காரியும், 
சொல்லிவிட்டாள்  அனைவருக்கும் ,
இனி 
அவள்  வருவது  
வாரத்தில்  இரு முறை என்று !

இருமுறை  என்ன ?
ஒருமுறையும் வேண்டாம் !
கண்டித்து சொல்லிவிடு, 
அவளிடமும், 
அவள்  உறவுகளிடமும் !
பூ விற்க வந்தவளுக்கு 
பூச்சூட்ட ஆசைஎனக்கு !
மாலை விற்க வந்தவளுக்கு 
மாலையிட ஆசை எனக்கு !
கிசுகிசுத்தான் என் தோழன்,  
கிழவியின் காதில் ! 

கிசுகிசுத்தது  என்தோழன்.
ஆனால்,
ஊரறிய சொல்லிவிட்டான் 
தன் ஆசிகளை, 
அந்த  இறைவன் !
கோவில்மணி ஒலித்தது,
மேளதாளம்  பின்தொடர ! 

பாம்புச் செவியெனக்கு ,
கேட்டுவிட்டேன்  அத்தனையும் !
தீட்டிக் கொண்டேன் 
என் காதுகளை !
கிழவியின் பதில் 
என்ன என்று ?
பேத்தி சொல் தட்டாத  
பாட்டி இவள் !
உறவைச் சொல்லவில்லை !
வந்த  உறவையும் விடவில்லை !
வரவேற்றாள்  என் தோழனை,
" வாடா  மாப்ளே " என்று !

என் தோழிக்கு  திருமணம் !
என் தோழனுக்கும் திருமணம் !
உள்ளம்  நிறைந்தது !
கண்கள்  பனித்தன !
யாரிடம் பகிர்வது ,
என் 
உள்ளக் களிப்பையெல்லாம் ?
என் குரல் கேட்காது ,
வையகத்தில்  யாருக்கும் !
மவுனமாய் இருந்துவிட்டேன்,
மவுனம்தான் என் வாழ்த்துரை !

மவுனத்தை கலைத்தது, 
அருகில் நின்ற 
இரு கால்கள் !
மெல்ல நிமிர்ந்தேன்,
உற்றுப் பார்த்தன, 
இரு கண்கள் !

ஓ !....
என் குரல் கேட்டதோ ?
மெல்ல வினவினேன் !
அசைந்தது தலை,
மேலும், கீழும் !
அக்கணத்தில், 
கொட்டிவிட்டேன் அத்தனையும் !
திரும்பிப் பார்த்தார்,
என் தோழனை !
ஆசீர்வதித்தது, 
அவரின் புன்சிரிப்பு ! 


யாரென்று கேட்கும் முன்,  
இடைமறித்தது 
மற்றும் ஓர் குரல் !
" எழுத்தாளரே, வணக்கம் "

இறைவனுக்கு  
பூச்சுமந்த  நான், 
அன்று, 
சூட்டினேன் அவன் பெயரை,  
என் 
சிறு வயது தோழனுக்கு !

எழுத்து அறிவிப்பவன் 
இறைவன் என்றால்.
எழுதி அறிவிப்பவனும் 
அவன் தானே !
ஆதலினால்,
இன்று 
சூட்டிவிட்டேன் இவருக்கும், 
அவனின் மறுபெயரை !
  
ஏட்டினில்  எழுதிடுவார் ,
என் தோழியின் திருமணத்தை !
வலைத்தளத்திலும்  பதிவிடுவார் ,
என்  தோழனின்  திருமணத்தை !
பாரோரும் புகழ்ந்திடுவர்
பாங்கான இவர்  எழுத்தை !

சோர்ந்திருந்த என்னை,
என் குரல் கேட்டு,  குறை நீக்கி,
எழுச்சியுரச் செய்த எழுத்தாளருக்கு,
ஆயிரம்  நன்றிகள் !
அனந்த கோடி நமஸ்காரங்கள் !

இனி,
சோம்பியிருக்க மாட்டேன்!
வேலைகள் 
மெத்த உண்டு !

பூச்சுமக்க வேண்டும் நான்,
என் தோழியின் திருமணத்திற்கு !
பூச்சுமக்க வேண்டும் நான் ,
என் தோழனின் திருமணத்திற்கு, 
சுமக்க வேண்டிய பூக்கள் 
ஆயிரம், ஆயிரம் !
ஒவ்வொரு  அழைப்புக்கும் 
ஒவ்வொரு  பூ என !

ஏ !  பூக்காரக் கிழவி ! 
கடையை கட்டிவிடு,
குடிசைக்கு போகவேண்டும் நான் !
என் தோழியிடம் பகர வேண்டும், 
என் தோழனின் திருமணத்தை !
பார்க்க வேண்டும் அவள் முகத்தில் ,
படரும் சிரிப்புக்களை !
பார்க்க வேண்டும் அவள்  முகத்தில் , 
வளைந்தோடும்  வெட்கத்தை !

கோவிலில், 
மணி  அடித்துவிட்டது ! 
மேளமும்  கொட்டிவிட்டது ! !
இன்னும் என்ன மெத்தனம் !
அடியே !  பூக்காரக்  கிழவி ! 
நாள்  குறிக்கச் சொல் 
அந்த குடுமிக்கார  ஜோசியனை !
அடுத்த  முகூர்த்ததில் 
அவசரத் திருமணம் !

அவசரம் .....
எனக்குத்தான் !
உழைத்து உழைத்து 
ஓடாகிப் போன என்னை, 
ஓரங்கட்டுவதற்கு முன்,
பூச்சுமக்க வேண்டும் நான்,
என் தோழியின்  திருமணத்திற்கு !
பந்தல் முதல் பள்ளி (அறை ) வரை ,
நான் சுமக்கும் பூக்கள்தான் !

வந்திடுவீர்,  வையகத்தீர்,
வாழ்த்துரைக்க, என் தோழிக்கு !
வந்திடுவீர்,  வையகத்தீர்,
வாழ்த்துரைக்க, என் தோழனுக்கும் ! 

இது ,
பூக்கூடையின்  பிதற்றலென 
வாளா(ரா)திருக்க வேண்டாம் ! 
வரவேற்க காத்திருப்பேன் 
வாயிற்படியில், 
பூக்களை சுமந்துகொண்டு !


0-0-0-0-0-0-0-0-0-0-0

4 comments:

 1. அருமையான ஆக்கம் ஐயா.

  வார்த்தைகள் சும்மா அதுபாட்டுக்காக வரிசை வரிசையாய் ஓடி வந்து குதூகலத்துடன் அமர்ந்திருக்கின்றன. வரகவிகளுக்கே இதெல்லாம் சாத்தியம் என்று சொல்வார்கள்.

  'ஜாதிப்பூ' கதையையும் படித்தேன். கதை பற்றி இந்த கவிதையில் விமர்சனம் இல்லை தான். இருந்தாலும் பூக்கூடை சொல்வது போன்ற அந்தக் கதையை, கவிதையாய் சொன்ன உங்கள் கற்பனை வளம் பிரமிக்க வைத்தது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்களுக்கு நன்றி, ஐயா !

  ReplyDelete
 3. கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவி பாடுமாமே..!

  ஜாதிப்பூக்களைசுமந்த கூடை பாடிய கவி ரசிக்கவைத்தது..
  குடையும், கூடையும் கூட்டணி அமைத்தது சிரிக்கவைத்தது..
  பாராட்டுக்கள்..

  ReplyDelete
 4. //இராஜராஜேஸ்வரி 14 October 2014 07:18

  கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவி பாடுமாமே..!

  ஜாதிப்பூக்களைசுமந்த கூடை பாடிய கவி ரசிக்கவைத்தது..
  குடையும், கூடையும் கூட்டணி அமைத்தது சிரிக்கவைத்தது..
  பாராட்டுக்கள்.. //

  அதே அதே ...... என் பாராட்டுக்களும் ஐயா. அன்புடன் VGK

  ReplyDelete