Monday, 26 May 2014

சூ ழ் நி லைதிரு . வை. கோபாலகிருஷ்ணன்  அவர்களால் 
விமர்சனப் போட்டிக்காக தேர்தெடுக்கப்பட்ட  கதை,  
அவர் எழுதிய  "  சூழ்நிலை * 

இதற்கான இணைப்பு 


இந்த வாரம்  ஒரு  சின்னஞ்சிறு கதை  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.   

அன்றாட  வாழ்க்கையில்  ஒரு சில  நிகழ்வுகள்  அல்லது  செயல்கள்  பல  தொடர்ச்சியான  நிகழ்வுகளுக்கு  வித்திட்டு விடுகின்றன.  சுற்றி இருக்கும் மனிதர்களின்  பாராட்டுக்களோ   அல்லது  இடித்துரைத்தலோ  அந்த  குறிப்பிட்ட  செயலை  மையப்படுத்தியே  இருக்கும் .  

ஒரு  சராசரி மனிதன்,    தன்  மகளுக்காக  திருமணத்தை பேசி  முடிக்கும்  சமயத்தில்,  கை பேசியின் மூலமாக  ஒரு துயரச்  செய்தியை  கேட்க  நேரிடுகிறது .  அந்த சமயத்தில்,  அவன்  வாயிலிருந்து  வெளிவரும்  வார்த்தைகளைப்  பொறுத்தே  அதன் பின் விளைவுகளும்  அமையும். அந்த  பின்  விளைவுகள்  சுபமானதாகவும்  இருக்கலாம் அல்லது  துயரமானதாகவும்   இருக்கலாம்.  எதுவாக இருப்பினும்,  இதற்கு காரணம் ,  அந்த மனிதனின் அந்த குறிப்பிட்ட  நேரத்தில் எடுக்கும்  சமயோசிதமான முடிவும், செயல்களும் தான்  . 

இதே நிகழ்ச்சி , இக்கதையின்  கதா நாயகனின்  வாழ்விலும்   நிகழ்கிறது.  தகவல் கிடைத்தவுடன் , கதா நாயகன் ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா,"  என்ற வார்த்தைகளைக் கூறுவதாக சித்தரிக்கப்பட்டு, இதன் பின் விளைவுகளாக  சில  நிகழ்ச்சிகளையும்  கூறுவதுதான்  கதை .

இதை  இப்படி செய்திருக்கலாமே,  அப்படி செய்திருக்கலாமே  என்று  எழுதுவதெல்லாம்  வெறும்  கற்பனைகளே !  இவை  எதுவும் ,  எழுதிய  கதையை  மாற்றிவிட முடியாது .  விமர்சனம் என்பது , நடந்து முடிந்த  நிகழ்ச்சிகளைப் பற்றிய  எழுத்தாளனின்  கண்ணோட்டம் . 


 இந்த  கதையில், பின் விளைவுகளாக  கூறப்பட்டிருக்கும்  நிகழ்வுகளை  விமர்சிப்பதா ?  அல்லது   கதையின்  ஆணி வேராக  இருக்கும் செயலை  விமர்சிப்பதா ?  

இன்றைய விமர்சனத்துக்கான  கதையில்,  கதா நாயகன் தன் மகளின்  திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது  கிடைத்த தகவலும் , அதை  அவர் கையாண்ட விதமும்தான்  முக்கிய நிகழ்ச்சி.  மற்றவை எல்லாமே  அதன்  பின்  விளைவுகள் தான் .

எனவே,  நான்  தேர்ந்தெடுத்தது,  கதையின்   முக்கிய  நிகழ்வை , ஆணிவேராக  இருக்கும்  கதாநாயகனின்  செயலை விமர்சிப்பது என்ற முடிவை !   அதையே மையமாக வைத்து  விமர்சனத்தையும் எழுதினேன் . 

என் விமர்சனம்  இதோ !  


விஞ்ஞானத்தின்   வெகு வேகமான  வளர்ச்சி  ,  இன்று   
அனைவரிடமும்  கை பேசி  இருப்பதுதான் .  
மிக  நல்ல  வளர்ச்சிதான். 

ஆனால் , இதன் மறுபக்கம்  மிக கொடூரமானது.
கைபேசியில் பேசிக்கொண்டே  சாலைகளில்  நடந்து 
செல்லும்  இளைஞர் களும், இளைஞிகளும் ,  சர்வ 
சாதாரண காட்சி இன்று.  கைபேசியில்  பேசிக்கொண்டே  
வாகனங்களை   ஓட்டிச் செல்லும்  காட்சிகளும்  
சர்வசாதாரணம்.   வாகனங்களை  ஓட்டிச்  செல்லும்போது  
கைபேசியில்  பேசக் கூடாது  என அரசாணை  இருந்தாலும், 
அதை மீறத் துடிப்பவர்கள்  ஏராளம்.  !  
இதனால்  ஏற்பட்ட  விபத்துக்கள்  ஏராளம் !  
இறந்தவர்களும்  ஏராளம் ! 

மற்றுமொரு  கொடுமை,  பாட்டு கேட்கிறேன்   பேர்வழி ,  
என்று  இரு  காதுகளையும்  அடைத்துக்கொண்டு ,  
பாட்டைத் தவிர   வேறு எந்த  சப்தத்தையும்  கேட்க  
முடியாமல் ,  விபத்துக்களில்  சிக்கியோரும்  ஏராளம். ! 

இவர்களின்  மறைவு, அவர்களின்  பெற்றோர்களுக்கு  
மட்டுமல்ல,  நாட்டிற்கும்  பேரிழப்புதான் !  

இந்த  ஞான  வளர்ச்சியின்  மற்றுமொரு  பக்கம்,  
ஏதாவது  பேசவேண்டுமா,  எடு  கை பேசியை,  
தொடர்பு கொள்  உடனே !  -  இத்தகைய  எண்ணம்  
கொண்டவர்கள்  ஏராளம், ஏராளம்.  

இவர்களுக்கு , தான்  தொடர்பு கொண்டவர்கள் , எந்த 
சூழ்நிலையில்  இருக்கிறார்கள் ?  அவரால்  இப்போது 
தம்மோடு  பேசமுடியுமா  அல்லது  தான்  பேச விரும்பும் 
விஷயத்தை  அவரால்  தொடர்ந்து  பேசமுடியுமா  என்பதைப் 
பற்றியெல்லாம்  கவலையே  இல்லை. 

தொடர்பு கொள்ளப்பட்டவர்தான்,  செவாலியர்  சிவாஜி 
கணேசனைப்போல்  , அழுதுகொண்டே  சிரித்தும்  அல்லது 
சிரித்துக்கொண்டே  அழுதும்  சமாளிக்க வேண்டும் !   

இத்தகைய  ஒரு  சூழ் நிலையை  மனதில் கொண்டு , 
திரு. வை.கோபாலகிருஷ்ணன்  எழுதியிருக்கும்   சிறுகதை, 
" சூழ் நிலை " . 

டில்லியில்  வசிக்கும்  ஒரு  " பிசினஸ்  மேக்னட் "  ஆக 
சித்தரிக்கப்படுகிறார்,  கதா நாயகன். 

சென்னை  சென்றுள்ள  அவர்  தன்  வேலைகளின் ஊடே 
தன்   மகளுக்கு  ஒரு  சம்பந்தத்தை  பேசி  முடிக்கும் 
தறுவாயில்,  கைபேசியில்  தொடர்பு கொண்ட  அவரது மகள் ,
தன்  தாத்தா (  அம்மாவின்  தந்தை )  சாலை விபத்தில்   
இறந்துபட்டதையும், அவரது உடல்  G.H. இல்  இருப்பதையும் 
தெரிவிக்கிறாள். 

சம்பந்தம் பேசப்பட்டு  முடிவடையும்  நிலையில் ,  இந்த  
மரணச்  செய்தி  ,  அனைத்தையும்  குலைத்துவிடுமல்லவா ? 
நொடியின்  பகுதியில்  , முகத்தில் எந்த சலனத்தையும்  
காட்டாமல்  , " ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா,"  என்ற 
வார்த்தையை  கதா நாயகன்  உச்சரிப்பதாக  ,  கதாசிரியர்  
காட்டியிருக்கும் விதம், கதா நாயகனின் வார்த்தைகள் 
 பொய்யென்றாலும், 
"  பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
     நன்மை பயக்கு மெனின்  " 
என்ற  வள்ளுவரின்  குறளை  நினைவுறுத்துவது  
பாராட்டத்தக்கது.

திருமணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது , 
கிடைத்த  துக்கமான  செய்தியை வெளிக்காட்டாமல்,  
காலமறிந்து   , சாமர்த்தியமாக  அதை மறைத்து , திருமணத்தை  
உறுதிப் படுத்திக் கொண்டுவந்த கதா நாயகனின்  செயல், 
"  அருவினை யென்ப உளவோ கருவியாற்
     கால மறிந்து செயின்  " 
என்ற  வள்ளுவரின்  மற்றொரு குறளையும்   நினைவுறுத்துவது 
பாராட்டத்தக்கது. 

கதாநாயகனின்  இதே  செயல்,  
" ஒரு செயலைச் செய்யும்  மனிதனின் கண்ணோட்டம்,  
தான்  ஈடுபட்டுள்ள  செயலுக்கு  எத்தகைய 
சேதமும்  வராமல்  இருக்கவேண்டும் , அப்படியிருப்பின் 
அவருக்கு  இவ்வுலகமே சொந்தமாகும், "  
என்ற  கருத்தினைக் கொண்ட 
 (  கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்கு 
    உரிமை உடைத்திவ் வுலகு. )
வள்ளுவரின்   மற்றும்   ஒரு  குறளை  வாசகர்களுக்கு  
நினைவுறுத்துவதும்   பாராட்டத்தக்கது.  

G.H. இலிருந்து  தன்  மாமனாரின்  உடலை  சீக்கிரமாகவே 
பெற்று, அவரின்  ஈமக் கிரியைகளுக்கு  ஏற்பாடு செய்து, 
தேவையான  பொருளுதவியும்  செய்து  மாமியாரின்  மனதில் 
நீங்கா  இடம் பிடிப்பவராக  கதா நாயகனைச்  சித்தரித்த  
விதத்தில், ஒரு குடும்பத்தின்  மருமகன்  என்பவர்,  அந்த  
வீட்டிற்கு  ஒரு  மறு  மகன்தான்  என்ற உணர்வை  , 
வாசகர்களுக்கு  உணர்த்திய  கதாசிரியர், 
கதாநாயகனின்  செயலை, 
 " இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண் "  
என்ற வள்ளுவரின்  குறளுக்கு ஏற்பவும்   அமைத்திருக்கிறார்.   

கோட்டீஸ்வரனான  கணவன் , தன்  பிறந்த வீட்டை  மதிப்பதேயில்லை
 என்ற  கருத்தைக் கொண்ட  கதா நாயகனின்  மனைவி , இறுதியில் 
வயது வந்த மகள்  பக்கத்தில்  இருக்கிறாள்  என்பதையும்  மறந்து,
 கணவனிடம்  சண்டையிட்டு, பின்  உண்மையுணர்ந்து  ,  தன மகள் 
பக்கத்திலேயே  இருப்பதை   மறுபடியும்  மறந்து,  கணவனின்
மார்பில்  சாய்ந்து சரணடையும்  விதம்  , கதாசிரியருக்கு  சபாஷ்  
சொல்ல வைக்கிறது .  

திருமணம் பேசும் போது  இடையே வந்த துக்கத்தையும், துன்பத்தையும், 
இன்பமாகக் கருதி , கதா நாயகன்  செயல்பட்ட  விதத்தில், 
 "    இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
      ஒன்னார் விழையுஞ் சிறப்பு." 
(   பொருள்:  துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, 
     அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.. )
என்ற  மற்றும்  ஒரு  குறளை ,  வாசகர்களுக்கு  நினைவுறுத்துகிறார்,
கதாசிரியர்.

இக்கதையின்  ஆணி வேர் ,  கதா நாயகன்  தன்  மகளுக்காக  
திருமணம்  பேசி  முடிக்கும் தறுவாயில்,  மகளிடமிருந்து  வந்த  
துக்கச் செய்தியும்,  அதை  கதா நாயகன்  கையாண்ட  விதமும்தான். 

இக்கதை,  சிறு வயதில் படித்த  ' யானையைப் பார்த்த  குருடர்கள் "
கதையைத்தான்  நினைவுக்குக் கொண்டுவருகிறது ,
இக்கதையிலும்  கதா நாயகனாக  ஒரு  யானை !  பட்டத்து   யானை ! 


பெரிய பிஸினஸ் மேனாக இருப்பதால், எந்த வீட்டிலும், 
எந்த ஊரிலும், எந்த நாட்டிலும், ரொம்ப நேரம் தங்க முடியாத  
சுறுசுறுப்பான  யானை !

கதா நாயகனின்  செயலை , வெவ்வேறு  கண் கொண்டு 
பார்க்கும்  கதா  பாபாத்திரங்கள் .  

தன்  தாத்தாவின்  மரணத்தைத் தெரிவித்ததும் ,
“அப்படியாம்மா, ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா. நான் அவசியம் 
போய்ப் பார்த்துட்டு, அப்புறம் உனக்கு போன் செய்கிறேன்”  
என்ற தந்தையின்  பதிலைக் கேட்டு அதிர்ந்து போன  மகள். 

"  மாமனாரின் திடீர் மரணத்தைக் கேள்விப்பட்ட பிறகாவது ஒரு
    மனிதாபிமானத்துடன் பேச மாட்டாரோ! அவ்வளவு பணத்திமிரு ...... 
     இருக்கட்டும் நேரில் போய் பேசிக் கொள்கிறேன் "   என்ற  
பொருமலுடன்  சென்னை சென்று ,  அங்கும்  தன் கணவனுடன்  
பேசாமலே  இருந்த ,  கோபக்கார  மனைவி.

தன் கணவனை இழந்த துக்கத்தையும் மறந்து, தன் பணக்கார 
மற்றும் மிகவும் பிஸியான மாப்பிள்ளையைப் பற்றி அடிக்கடி 
பெருமையாகப் பேசி பூரித்துப் போகும்  மாமியார் .  

" யார்  எப்படிப் பார்த்தாலென்ன, என்னை!  நான்  என்  கடமையைச் 
செய்துவிட்டேன் !  நானும்  தங்கம் தான், என் உள்ளமும்  
தங்கம்தான் "  என்ற நினைப்புடன் ,  ஆர்ப்பரிக்காமல், 
அமைதியாய்  இருக்கும்  கதா நாயகன். 

எழுத்துக்களை  அழகாக, மிக அழகாக  பின்னலிட்டிருக்கிறார் .
ஆசிரியர். 

 திருவள்ளுவரின் , 
வாய்மை  என்ற  அதிகாரத்தின்  கருத்தினையும் 
காலமறிதல்  என்ற   அதிகாரத்தின்  கருத்தினையும் , 
கண்ணோட்டம்  என்ற  அதிகாரத்தின்  கருத்தினையும் ,
இடுக்கண்  அழியாமை  என்ற  மற்றொரு  அதிகாரத்தின்  கருத்தினையும்,
கதா நாயகனின்  ஒரே ஒரு செயலில்  புகுத்தி, 
கருத்தாழம் மிக்க  இந்த  கதையை  எழுதிய  விதம்  , 
இக்கதை ,  
கதாசிரியரின்   மற்றுமொரு  சாதனை  என்றே   
பாராட்ட வைக்கிறது

O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-  
.


1 comment:

  1. ஆணிவேரை ஆராய்ந்து அருமையாக விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள் ஐயா..பாராட்டுக்கள்..

    ReplyDelete