Thursday 15 May 2014

வெற்றியின்  ரகசியம்.


பாகம்  1


எழுத்துச் சித்தர் ,  திரு.  பாலகுமாரனின்,  
"  கடலோரக்  குருவிகள்  "  என்ற   நாவலிலிருந்து  
சில  வரிகள் !





ஜெயிக்கின்ற  எல்லோரும்,   கர்ப்பிணியாக  இருக்கக்  கற்றுக் கொள்ள வேண்டும் . நிறை  மாத  கர்ப்பிணியாய்  இருக்க வேண்டும். 

நிறை  மாத  கர்ப்பிணிக்கு ,  தன்  கருவின் மீது  அபார  நம்பிக்கையும், அதனால்   அதன்மீது  ஒரு  அன்பும்  ஏற்படும்.   தான்  சுமக்கின்ற  கரு  மீது ஏற்பட்ட அன்பு ,  தன்  மீதும்  பரவ , தன்னைத்தானே  நேசிக்கின்ற  ஒரு ஆத்மாவாக அந்த  கர்ப்பிணி  இருப்பாள். அதே  சமயம்,   தான்  சுகப்பிரசவம்   அடைய  வேண்டுமே என்ற  கவலையும்  அவளுக்கு  இருக்கும். 

கருவின் மீது  கொண்ட  அன்பால் , கவலையால் , கர்ப்பிணி  அதிர்ந்து  நடக்க மாட்டாள்.   ஆவேசம்  கொள்ள  மாட்டாள் . அப்படிச் செய்ய,  நஷ்டம்  அவளுக்கே !   மாறாக ,  ஒவ்வொரு  அடியும்  கவனத்துடன்  எடுத்து  வைப்பாள்.  

அது  போல, 

நீ  செய்து  முடிக்க வேண்டிய  காரியத்தை , ஏதோ ஒரு விதமாக  ஆளாக  வேண்டிய  விருப்பத்தை , ஏதோ  ஒரு  கர்ப்பிணிப் பெண்  தாங்குவது போல்  தாங்கு !   எல்லா  நேரமும், எதைச் செய்தாலும்,  கர்ப்பிணியின்  சிந்தனை  கருவிலே  இருப்பதைப் போல , உன்  உயர்வு  குறித்த  சிந்தனை,  உன்னிடம்  இடையறாது  இருக்க வேண்டும். 

வீண்  வம்பிலோ ,  வழக்கிலோ  ஈடுபட  விரும்பாது ,  எங்கேனும்  சிக்கினாலும் ,  நகர்ந்து கொள்கிற  கர்ப்பிணியாய்  நீ  இருக்க  வேண்டும் !
கர்ப்பிணி  ஆவேசமுற்றால்,  பிரச்சினை  கருவுக்குத்தான் !  நீ  ஆவேசமுற்றால் ,  பிரச்சினை  உன் உயர்வுக்குத்தான் ! 

இப்போது  நான் சொல்வதை  நன்றாய்  உற்றுக் கேள் !  உள்  வாங்கு ! 

கர்ப்பிணி  தன் கருவினை  நேசித்து , 
அதைத்தாங்கும்  தன்னையும்  நேசிப்பது போல ,  
உன் இலட்சியத்தையும் , 
உன்னையும்  நேசிக்கக் கற்றுக் கொள் !    

உன்னை  நேசிப்பது  எப்படி  வெளியே  வரும்... ?
உன்   உடையழகில் ,
உன்  நடையழகில் , 
உன்  பேச்சழகில் ,
உன்  செயலழகில்  வரும் !

குளித்து,   சுத்தமாய்  உடுத்திக் கொள் !
அழுக்காய் , நாற்றமாய் , அருவருப்பாய்  இருக்காதே  .. !
நிற்பதும், 
நடப்பதும் , 
எழுவதும் , 
அமர்வதும் ஆரவாரமில்லாமல்  இருக்கட்டும்..  !

அதாவது ,   நீ......  கர்ப்பிணி  !
இலட்சியமுள்ளவன் ....!
ஒரு போதும்  துள்ளாதே ......!
மக்கு  ஆடுகள்  தான் காரணமின்றி  துள்ளும்....
ஆடுகள்  முட்டிக் கொள்வதைப்போல  தமாஷ் , 
உலகத்தில்  எதுவுமில்லை !

இதற்குப்  பிறகு,  பேச்சு .. !

மிகப் பணிவாகவும் , தெளிவாகவும்  பேசு...
சின்னச் சின்ன  வாக்கியங்களாய் , நிதானமாய்  பேசு  .. !
இன்றைக்குள்ள  இளைஞர்கள்  நிறையபேருக்கு , பேசத்தெரியாது !
காரணம்...  உச்சரிப்பு  சரியில்லை.
இதற்கு  காரணம்,  மொழியோடு  பரிச்சயமில்லை  .
இதற்கு காரணம்,  புத்தகங்களோடு  தொடர்பின்மை !
தினம்  நாற்பது  குறளை , சத்தம் போட்டுச் சொல் ..
அந்த திருக்குறளின்  அர்த்தத்தை  உள்  வாங்கு !
உன்னால் தெளிவாக  பேச  முடியும் ..!
அந்த திருக்குறளில்  சொல்லி இருப்பதைப்போல, நடக்க முற்படு !
நிதானமாக  பேச முடியும்.. !
உன் மொழியில் உள்ள  நல்ல நூல்களோடு ,
உனக்கு  பரிச்சயம்  உண்டெனில் ,
உன் வாழ்க்கை  சுகமாக  ஆரம்பிக்கும்... !
நீ  தெளிவாகப் பேச,  எதிராளிக்கு  உன்னைத் தெளிவாகப் புரிய , 
ஆரம்பத் தொடர்பு  நல்ல நிலையில்  இருக்கும். 

இப்போது  செயலைப் பற்றி  சொல்கிறேன்,  கேள்  !

நீ  குளிக்கிற  இடம் ,
உடை  வைத்திருக்கும்  பெட்டி ,
புத்தக  அலமாரி ,
இந்தச் சூழ் நிலைகளை  மிகச் சுத்தமாய்  வைத்திருப்பது ,
உன் செயலில்  நேர்த்தி வர  ஆரம்பித்துவிட்டது என்று  அர்த்தம் !

Perfection  மிக மிக  முக்கியம்..
செருப்புக்கு  பாலிஷ்  போடுவதை ,
ஓவியத்திற்கு  வர்ணம் திட்டுவதைப் போல செய் !
உன் வேலைகளுக்கு இன்னொருவரை  கட்டளையிடாதே ,  நீயே  செய்..!
உதாரணம்  ஒன்று  தருகிறேன்.. !
தரையில்  சாய்ந்து விட்டு, 
ஒரு  தலைகாணி இருக்குமா என்று  கேட்காதே ,
நீயே எழுந்துபோய், உன் தலைகாணியை  கொண்டு வா !
உட்கார்ந்து சாப்பிடும்போது ,  உப்பு  கேட்காதே ,  நீயே  கொண்டு வா .. !
முழுமையாய்  வேலை செய் ..!
விருப்பமாய்  வேலை  செய்  .. !
திருத்தமான வேலை  செய் ....!
விருப்பமாய்  வேலை  வேலை செய்கிறபோது,  
வேலைகள் நிறைய  வரும்.. !
வேலைகள் நிறைய  சேர்ந்தால்,  வீண்  பேச்சு  குறையும்...
வீண்  பேச்சு  குறைவான  இடத்தில்  சச்சரவே  வராது ....

வாழ்க்கை  என்பது  அத்தனைச்   சுலபமில்லை !

நீ  சரியாக  இருந்துவிட்டால்,  எல்லாம்  சரியாகிவிடாது...
நீ  சரியாக  இருக்கிறாய் ,  அல்லது  
சரியாக  இருக்க  முயற்சி  செய்கிறாய்  என்பது தெரிந்துவிட்டால் போதும் ,
உன்னைக் கலைக்க , பல மிருகங்கள்  வரும் .. !

தன் வாழ்க்கையைச் சரியாக அமைக்காத  தான் தோன்றிகள் ,
திருடர்கள் ,
பொய்யர்கள் ,
சூதாடிகள் , உன்னை கவிழ்க்க  வருவார்கள் .!
இப்படிப்பட்டவர்கள் , உறவு என்கிற  பெயரிலோ ,
நட்பு  என்ற  பெயரிலோ , நெருக்கமாய்  இருப்பார்கள் !
அவர்களிடமிருந்து  அப்பால் போகமுடியாத  சூழ்  நிலை  இருக்கும் !

தன் தேவையையும் , தன் பலத்தையும்  முற்றும்  உணர்ந்தவன் ,
இவர்களை  அமைதியாக  கவனிப்பான் ... !
இவர்கள் பக்கமிருந்தும், இவர்களிடமிருந்து  விலகியிருப்பான் .. !
இவர்களோடு பேசிச்  சிரித்தாலும், இவர்களோடு ஒட்டாது  இருப்பான்.. !
சமயம்  வரும்போது,  முழுமூச்சாய்  எதிர்ப்பான்.. !

திருடன் ,  
கோள்சொல்லி , 
வஞ்சனை  செய்பவன்,    வாழ்ந்ததாய்    சரித்திரமே  இல்லை  !
இது  சத்தியம்.... !

ஆரம்பத்தில்  வெற்றியும் , பளபளப்பும்  இருப்பினும், 
அவன் வெற்றிகளே  அவனை  படுகுழியில்  தள்ளும் ..!
அவன்  பளபளப்பு , அவனுக்கு  குஷ்டம்  என்பதைக் காட்டும்..!
திருடனின்  ஆரம்ப வெற்றியைக் கண்டு  திகைத்து விடாதே  !
நாமும்  திருடினால்  என்ன  என்று  கணக்கு  போடாதே ..  !

திருடர்கள்  தூங்குவதே  இல்லை  !
தொழில் காரணமாக  அல்ல,  பயம்  காரணமாய் ...
ஒரு  திருடன்தான் ,
தான்  ஜெயித்து விட்டதாய் ,
பெரிய  பணக்காரனாய்  ஆகிவிட்டதாய் ,
உயர்ந்த  பதவி  வகிப்பதாய் ,
சீரும்  செல்வாக்குடன்  இருப்பதாகக்  காட்டுவான் .....
திரும்பத் திரும்பக் காட்டுவான்.. !
பறையறிவிப்பான் !!!
நிறைய  அரசியல்வாதிகள்  படோடாபமாய் இருப்பதற்கு  காரணம் ,
திருட்டுத்தனத்தின்  வெளிப்பாடுதான்.... !
உனக்கு உள்ளது,  உன்னுடனே இருக்கும்.  அழியாது.. 

சண்டை  போடுகிற  தகப்பன் ,
ஏமாற்றுகின்ற  தமையன் ,
கட்டிப் போடுகின்ற  தாய் ,
சுமக்கச்  சொல்கின்ற  தங்கை ,
ஏளனம்  செய்கின்ற  காதலி ,
இங்கிதம் இல்லாத  நண்பன் ,
என்று  உலகத்தில்  பல  வேதனைகள்  உண்டு !
மறுக்காமல்  ஏற்றுக் கொள் ... !

இவர்களைவிட்டு  எங்கும்  விலக முடியாது ...
நீ .. என்கே  போயினும் , 
இதுபோல்  எவரோடும்  வாழத்தான்  வேண்டும்  !
இந்த  நாய்  இல்லையெனில் , வேறு  எந்த  நாயாவது, 
உன்னை முகர்ந்துப் பார்த்துவிட்டுத்தான்  செல்லும்... !
முகரும்  நாய்களில்,  எந்த நாய்  உத்தமம்  என்று  
நீதான்  தேர்ந்தெடுக்க வேண்டும்....
நாய்கள்  குலைக்கும், கவ்வும்,   பயப்படாதே .....!
உன்னைப் போல  உண்டா  என்று ,
அவர்களுக்கு  தீனி  தூக்கிப்போடு !
திணரும்  அளவுக்கு  பாராட்டு... !
ஆனால்,  மனதிற்குள்  விலகியே  இரு.. !
உன் வேலைகளை  கவனித்தபடி  இரு..   !!!!

0-0-0-0-0-0-0-0-0-0--0-0-0-0-0-0-0-0-0-0-0-0














































1 comment:

  1. அற்புத்தமான பகிர்வுகள்..பாராட்டுக்கள் ..

    ReplyDelete