Wednesday 22 April 2020

வராக அவதாரம்

வராக அவதாரம்



பெருமாளின் அவதாரங்களில் 
இது 3வது அவதாரமாகும்:  

பூமியைக் கவர்ந்து சென்ற 
இரண்யாட்சன் கடலுக்கடியில் 
ஒளித்து வைத்தான். திருமால்
 வெள்ளை வராகமாக (பன்றியாக) 
உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, 
அப்பூமியைத் தன் கொம்பில் 
தாங்கிக் கொண்டு அருள் 
செய்தார். 

சிருஷ்டி என்பது இருவகைப்படும். 
முதலில் இறைவன் தாமாகவே 
மாயையின் பலத்தினால் மகத்தில் 
இருந்து பஞ்சபூதங்களும், 
ஐம்புலன்களும் உண்டாகப் படைத்தார். 

இதற்குப்பின் தான் பிரமன் 

தோன்றினார். பரமனின் 
ஆணைப்படி தாவரங்கள், 
விலங்குகள், மனிதர்கள், 
தேவர்கள் என அனைத்தையும் 
பிரமன் படைத்தார். 

சனகர், சனந்தனர், சனாதனர், 
சனத்குமாரர் என்ற 
முனிவர்களைப் படைத்து 
சிருஷ்டித் தொழிலை 
மேற்கொள்ளும்படி பணித்தார். 

பிரமன் புருவங்களின் நடுவிலிருந்து 
ருத்திரன் தோன்றினான். 
அதன்பின் மர்சி, அத்ரி, ஆங்கீரசர், 
புலஸ்தர், புலகர், க்ருது, பிருகு, 
வசிஸ்டர், தக்ஷர், நாரதர், 

இதன்பின் வேதங்கள், சத்வகுணங்கள், 
காயத்ரி, பிரணவம் இத்யாதி 
ஆகியவற்றைப் படைத்தார். 

என்ன படைத்தும் பிரம்ம குலம் 
பெருகவில்லை. இதனால் பிரம்மா 
மிகவும் மனம் உடைந்து போனார். 

அதன் காரணமாக அவருடைய 
உடல் இரண்டாகப் பிரிந்தது. 
அவை ஆண், பெண் உருவங்களாக 
மாறின. அந்த ஆண் சுவாயம்புவமனு 
என்றும், அந்த பெண் சத்ரூபா என்றும் 
அழைக்கப்பட்டனர். சுவாயம்புவமனு 
பிரம்மாவைப் பார்த்துக் கேட்டார்: 

பிரபோ! நானும் என் மனைவியும் 
தற்சமயம் என்ன பணி செய்வது? 
உங்களைப் போன்ற மக்களைப் பெற்று 
பூமியை ஆட்சி செய்து பல யக்ஞங்களைச் 
செய்து ஸ்ரீ ஹரியை சந்தோஷப்படுத்துக 
என்று பிரமன் கட்டளையிட்டார். 
உங்கள் சொல்லை நான் தட்டமாட்டேன். 
ஆயினும் பூமியில் நான் வசிக்க 
இடமில்லையே! பூமி கடலின் ஆழத்தில் 
மூழ்கிக் கிடக்கிறதே! என்றான் மனு.

பூமியில் மானிடர்களைப் படைக்க 

வேண்டும் என்று நான் எண்ணிய 
சமயத்தில் பிரளயம் வந்துவிட்டதே 
என்று கவலையில் ஆழ்ந்தார் 
பிரம்மா. உடனே ஸ்ரீஹரியை நோக்கி 
தியானம் செய்தார். மனத்தில் 
ஸ்ரீஹரியை சிந்தித்துக் கொண்டே 
நான் எந்தப் பரந்தாமனுடைய 
கிருபையால் உருவானேனோ, 
அதே பிரபு இதோ இங்கே 
ஜலசமுத்திரத்தில் அமிழ்ந்து 
கிடக்கும் உலகத்தை வெளிக்கொண்டு 
வந்து நிலைக்கச் செய்யட்டும் என்று 
தியானித்தார். அப்போது அவருடைய
 நாசியில் இருந்து ஒரு கட்டை விரல் 
அளவேயான ஒரு வராகம் வெளிப்பட்டது. 
ஸ்ரீமந்நாராயணன், பிரம்மாவின் 
விருப்பத்தைப் பூர்த்தி செய்யவே 
அந்த பன்றி (வராக) ரூபத்தை எடுத்தார். 

எல்லோரும் பார்த்துக் கொண்டு 

இருக்கும்பொழுதே அந்தச் சிறிய 
பன்றி உருவம் பூதாகரமாக யானை 
அளவு வளர்ந்தது. அதைப் பார்த்து 
பிரம்மா மெய்சிலிர்த்து புளகாங்கிதம் 
அடைந்தார். என் எண்ணத்தை 
நிறைவேற்றவே நாராயணன் 
இவ்வாறு அவதாரம் எடுத்திருக்கிறார் 
என்று மகிழ்ந்து வேதபாராயண 
ஸ்தோத்திரங்களைச் சொன்னார். 
அதனால் சந்தோஷம் அடைந்த 
மூர்த்தி கர்ஜனை செய்தார். 
அந்த பிரமாண்ட ஒலி ஜனலோகம், 
தபோலோகம், சத்யலோகம் 
மூன்றிலும் கேட்டது. இதைக்கேட்ட 
மகிரிஷிகள் மகிழ்ந்தார்கள். அச்சமயம் 
தவத்தில் சிறந்தவரான கஸ்யப 
முனிவருக்கும், திதிக்கும் திருமணம் 
நடைபெற்றது. கஸ்யபர் தன் ஆசிரமத்தில் 
பகவானைக் குறித்து வேள்வி செய்து 
கொண்டிருந்தார். அந்நேரம் வேள்வி 
சாலைக்கு வந்த திதி, தன் விருப்பத்தை 
நிறைவேற்றுமாறு கணவரிடம் கூறினாள்.
 அதற்கு அவர் இது பூதங்கள் மட்டுமே 
சஞ்சாரம் செய்யும் சந்தியா வந்தன 
நேரம், ஒரு முகூர்த்த காலம் மட்டும் 
நீ பொறுத்துக் கொள் என்று கூறினார். 
அதற்கு திதி மறுக்கவே தன் மனைவியின் 
ஆசையை நிறைவேற்றினார் கஸ்யபர்.  
பின் மீண்டும் பகவானை நினைத்து 
பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். 
அங்கு வந்த திதி, சுவாமி! என்னை 
மன்னித்தருளுங்கள், தங்களின் 
சொற்களைக் கேளாமல் இவ்வாறு 
தவறாக நடந்து கொண்டேன் என்றாள். 
உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார் 
கஸ்யபர். என் கருவிலிருக்கும் சிசுவுக்கு 
எந்தவித ஆபத்தும் வராமல் இருக்க 
தாங்கள் தயவு காட்ட வேண்டும் எனக் 
கேட்டாள். திதியே! நான் எத்தனையோ 
முறை கூறியும் நீ காதில் போட்டுக் 
கொள்ளவில்லை.

சந்தியா காலத்தில் உன் உதிரத்தில் 

சேர்ந்த கருவிலிருந்து இரண்டு 
பிள்ளைகள் பிறப்பார்கள். அவர்கள் 
அரக்க குணம் உடையவர்களாக 
தர்ம விரோதமான காரியங்களில் 
ஈடுபட்டு மூவுலகையும், தேவர்களையும் 
துன்புறுத்துவார்கள். அப்போது பெருமாள் 
அவதாரம் எடுத்து அவர்களை வதம் 
செய்வார் என்றார் கஸ்யபர். 

சுதர்சனத்தை கையில் ஏந்திய 
பரந்தாமன் கையில் என் பிள்ளைகள் 
மரணமாவதில் எனக்கு ஒரு குறையும்
 இல்லை, எனினும் அந்தணராகிய 
உங்கள் சாபத்துக்கே நான் அஞ்சினேன் 
என்று அழுதாள். பிரியே! கவலை 
வேண்டாம், இப்போது நீ பரந்தாமனிடத்தும், 
சிவபெருமானிடத்தும், என்னிடத்திலும் 
கொண்ட பக்தியால் உன் பிள்ளைகளில் 
ஒருவனுக்குப் பிறக்கும் பையன் ஹரி 
பக்தியில் சிறந்தவனாக இருப்பான். 
அவன் மேலானவர்களுக்கும் 
மேலானவனாக இருந்து புகழ் 
பெறுவான் என்றார். இதைக் 
கேட்ட திதி தன் பிள்ளைவழிப் 
பேரனாவது ஹரி பக்தனாக 
இருக்கிறானே என 
சந்தோஷமடைந்தாள். 

கரு உருவாகி வளர்ந்தது. 
பிள்ளைகள் பிறந்தால் தேவர்களுக்கு 
இடையூறு ஏற்படுமே என்றெண்ணிய 
திதி அப்பிள்ளைகளை நூறு வருடங்கள் 
வயிற்றில் சுமந்தாள். அதனால் அந்தக் 
கருவின் ஒளி எங்கும் பறந்து விரிந்து 
சூரிய சந்திரனின் ஒளியை மங்க 
வைத்தது. நாலாத் திசையும் இருண்டன.

 இதைக் கண்ட தேவர்கள் பிரம்மனிடம் 

முறையிட்டனர்.பிரம்மன் அவர்களிடம் 
தேவர்களே! ஒரு நாள் என் மனத்தினால் 
தோற்றுவிக்கப்பட்ட என் புதல்வர்களான 
சனகாதி முனிவர்கள் நாராயணனை 
தரிசிக்கச் சென்றனர். அப்போது அவர் 
வாயிற்காப்பாளர்களாக ஜெய, விஜயர் 
இருந்தனர். நாராயணனை தரிசிக்க 
விடாமல் தடுத்த காரணத்திற்காக 
முனிவர்களின் சாபத்திற்கு ஆளாகினர். 
தங்கள் தவறை உணர்ந்த ஜெய, விஜயர்கள் 
நாங்கள் தண்டனை அனுபவிக்கும் 
காலத்திலும் ஸ்ரீமந் நாராயணனையே 
நினைக்க வேண்டும் என்று வேண்டினர். 
இதை அனைத்தும் கவனித்துக் 
கொண்டிருந்த நாராயணன் 
முனிவர்கள் முன் தோன்றினார். 
முனிவர்களே! பக்தர்களாகிய 
உங்களுக்குச் செய்த அபசாரம் 
கண்டிக்கத்தக்கது.

அது மட்டுமல்ல. என் ஊழியர்கள் 

அறியாமல் செய்த பிழைக்கு நான் 
பொறுப்பேற்கிறேன், அவர்கள் 
அதி சீக்கிரமே பூமியில் ஜனித்து 
சாபம் நீங்கி என் திருவடிகளை 
சரணடைய வேண்டும் என்றார். 
உடனே முனிவர்கள் இவர்கள் 
இருவரும் வெகுசீக்கிரமே அரக்கர்களாக 
பிறந்து உன்னை அடைவார்கள் 
என்றார். 

இவர்கள் தான் இப்போது திதியின் 
கருவில் இருக்கும் ஜெய, விஜயர்கள் 
என்று சொல்லி முடித்தார். திதி நூறு 
வருடங்கள் சென்றதும் இரட்டைக் 
குழந்தைகளைப் பெற்றாள். அவர்கள்
பூமியில் ஜனனம் ஆகும் போது பல 
கெட்ட சகுனங்கள் பூமியின் தோன்றின. 
முதலில் பிறந்தவன் ஹிரணிய கசிபு 
என்றும், இரண்டாவது பிறந்தவன் 
ஹிரண்யாட்சன் என்றும் 
பெயரிடப்பட்டனர். விரைவிலேயே 
அவர்கள் பூதாகாரமாக மலை என 
வளர்ந்து நின்றனர். அவர்கள் செய்த 
அட்டூழியங்களைக் கண்டு மூன்று 
உலகமும் நடுங்கியது. இதற்கு 
காரணம் பிரம்மாவிடம் யாருக்கும் 
இல்லாத பராக்கிரமத்தைக் கேட்டுப் 
பெற்ற வரத்தின் விளைவே ஆகும். 

ஹிரண்யாட்சன் தேவர்களை 

ஓட ஓட விரட்டினான். மிகவும் 
துன்புறுத்தினான். இதனால் 
தேவர்கள் அனைவரும் காணாமல் 
போயினர். இவன் அவர்களைத் 
தேடி பாதாள லோகத்திற்கு செல்ல 
சமுத்திரத்தில் மூழ்கினான். சமுத்திர 
ராஜனான வருணனை யுத்தத்திற்கு 
அழைத்தான். ஹிரண்யாட்சனிடம் 
யுத்தம் செய்து பலன் எதுவும் இல்லை, 
பிரம்ம வரத்தால் பராக்கிரமம் கொண்ட 
இவனை ஜெயிக்க முடியாது என்பதை 
வருணன் உணர்ந்தான். அசுர முதல்வனே! 
உன் பராக்கிரமத்தை நான் பாராட்டுகிறேன்.
 தினவு எடுக்கும் உன் தோள்களுக்கு 
சிறந்த விருந்து தர ஸ்ரீ ஹரி ஒருவராலே 
முடியும். நீ அவரைத் தேடிச் சென்று 
உன் விருப்பத்தை நிறைவேற்றிக் 
கொள் என்று தந்திரமாக பதில் 
கூறினான். வருணன் இவ்வாறு 
சொன்னதும் ஹிரண்யாட்சன் 
கதையை சுழற்றிக் கொண்டு கர்ஜனை 
செய்த வண்ணம் ஹரியைத் தேடி 
புறப்பட்டான். அவன் வைகுண்டத்தை 
நோக்கிப் போகும் சமயம் அவனை 
நாரதர் தடுத்தார். அசுர தலைவனே! 
உன்னிடம் கொண்ட அச்சத்தால் 
தேவர்கள் எங்கோ ஓடி ஒளிந்தார்களே, 
நீ இப்போது எங்கே போகிறாய், என்றார்.

நான் ஹரியைத் தேடி வைகுண்டம் 

போகிறேன். அங்கே போனால் தான் 
தினவு எடுக்கும் என் தோள்களுக்குத் 
தகுந்த தீனி கிடைக்கும் என 
நினைக்கிறேன்! என்றான். நல்ல காரியம் 
செய்யப் போகிறாய், ஆனால் 
நீ தேடிப் போகும் ஹரி 
வைகுண்டத்தில் இல்லை. 
பாதாளத்தின் கீழ் அழுந்திக் 
கிடக்கும் பூமியை வெளிப்படுத்த 
சென்றிருக்கிறார். 

அப்படியா? இதோ பாதாள 
லோகத்திற்குப் போகிறேன் என்று 
சொல்லி விட்டு பாதாளத்திற்குள் 
புகுந்தான். அங்கே ஹரி பகவான் 
வராக மூர்த்தியாக எழுந்தருளி 
தண்ணீருக்குள் ஆழ்ந்து கிடக்கும் 
பூமியைத் தமது கோரப்பற்களால் 
தாங்கி மேலேற்றிக் கொண்டு இருந்தார். 
இந்தக் காட்சியைக் கண்ட 
ஹிரண்யாட்சன் 
சிரித்தான். பன்றி வடிவில் 
இருந்த பகவானைக் கேலி செய்தான். 
பகவான் அவனுடன் யுத்தம் செய்ய 
ஆயத்தமானார். இரண்டு மலைகள் 
மோதுவது போல மோதிக் கொண்டனர். 

யுத்தத்தை நேரில் காண பாதாள 

லோகத்திற்கு தேவர்களுடன், 
பிரம்மா வந்து சேர்ந்தார். 
அண்ட சராசரங்களும் அப்போது 
கிடுகிடுத்தன. ஹிரண்யாட்சன் தன் 
கதையை எடுத்து ஹரியை நோக்கி 
வீசினான். அதை ஹரிபகவான் தன் 
சக்கராயுதத்தால் தடுத்தார். பின் 
ஹிரண்யாட்சனின் மாய லீலைகளால் 
லட்சக்கணக்கான அசுர கணங்கள் 
ஆயுதங்களோடு தோன்றின. 
தன் சுதர்சன சக்கரத்தால் 
அத்தனையையும் அழித்தார் 
ஹரி பகவான். 

பிரம்மா அந்நேரம் ஹரியைப் 
பார்த்து, சந்தியா காலம் 
நெருங்குவதற்குள் அவனை 
அழித்து விடுமாறு கூறினார். 
ஹரியும் அவ்வாறே ஹிரண்யாட்சனின் 
காதோரம் லேசாக ஒரு தட்டு தட்டினார். 
அவன் விழிகள் பிதுங்கி மரம் போலச் 
சாய்ந்தான். அந்நேரம் தேவர்கள் 
ஹரியைப் போற்றி துதித்துப் பாடினர்.  

பாதாளத்தில் அழுந்து கிடந்த 

பூமியை வெளிக்கொணர்ந்து 
நிலை நிறுத்தினார். அவனுடன் 
யுத்தம் செய்ததால் அவர் உடல் 
முழுவதும் உதயசூரியனைப் போல் 
சிவந்து காணப்பட்டது. பிரமாதியர் 
அப்பொழுதும் இடைவிடாது வேத 
தோத்திரங்கள் செய்தனர். அதைக் 
கேட்டு ஆனந்தம் அடைந்த பகவான் 
அகமகிழ்ந்து சாந்தமாகி 
அந்தர்த்தானம் ஆனார். 

பிரம்மன் சுவாயம்புமனுவை 
அழைத்தார். நீ உன் பிரஜைகளுடன் 
பூமண்டலத்தை அடைந்து ஆட்சி 
செய்து  வாழ்வாயாக! என்று 
அனுக்கிரகித்தார். 

பின்னர் சுவாயம்புமனுவும், 
சத்ரூபாவும் கணவன் மனைவியாக 
வாழ்ந்து பிரியவரதர், உத்தானபாதர் 
என இரண்டு ஆண் குழந்தைகளும், 
ஆஹுதி, தேவஹுதி, ப்ரசூதி என்ற 
மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தனர். 
இவர்களும் இவர்கள் வழி 
வந்தவர்களுமே ஆதிமனிதர்கள் ஆவர்.

இந்த வராகஅவதார மூர்த்தியைப் 

பிரார்த்தனை செய்பவர்களுக்கும், 
அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு 
சிந்தித்து அவரைத் தியானம் 
செய்பவர்களுக்கும் 
சகல சம்பத்தும், 
தீர்க்க ஆயுளும் உண்டாகும்.


ஹரி ஓம் !!!!

No comments:

Post a Comment