Friday 8 May 2020

சரணாகதி

சரணாகதி 
நேற்றுவரை என்னை ஐயா என்று 
கூப்பிட்டவர்கள்,இன்று ஏன் 
அவமரியாதையாய் அதட்டுகிறார்கள் ?
கை கூப்பியவர்கள் இன்று காலைத் 
தூக்குவது ஏன்?
நேற்று புகழ் மாலை சூட்டக் 
கூடிய கூட்டம் உண்மையில்லையா ? 
என்ன நடக்கிறது இங்கே!
என்ன காரணம் ?
யோசி ! 
ஆழ்ந்து யோசி ! 
என் மனம் சரணடையவில்லை !
எப்படி அதை தீர்மானித்தாய் ?
சரணடையாத மனம், 
தான் என்ற 
அகந்தைக்கு ஆட்பட்டுவிட்டது !  
தான் என்ற அகந்தை எழும்பும்போது, 
புலன்கள் கிளறி எழும்புகின்றன ! 
புலன்கள் கிளறி எழுந்தால் ? 
அதற்குத் தீனி தேவைப்படுகிறது. காம, க்ரோத, 
மத மாச்சர்யங்கள் விழித்தெழுகின்றன ! 
அதனால் என்ன? அதையெல்லாம் 
விட்டொழித்தவன் தானே நீ ?
அகந்தை எழும்பும்போது, இவை அனைத்தும் 
புத்துயிர் பெருகின்றன ! தன் உணவுக்காகப் பேயாய்
அலைகின்றன. கோபம் தலைக்கேறுகிறது.
வார்த்தைகள் வரம்பு மீறுகிறது. எனக்கு மட்டுமே
எல்லாம் தெரியும் என்ற மமதை 
தலைவிரித்து ஆடுகிறது. நான் என்ற எண்ணம் 
தலை நிமிர்ந்து நிற்கிறது ! புலன்கள் 
அனுபவிக்க ஆரம்பிக்கின்றன. அதன் பலன்களும்
தொடர ஆரம்பிக்கின்றன, 
விதைத்ததுதானே முளைக்கும் ?
ஆம். ! எத்தனை அனுபவித்தாலும், இந்த
புலன்களுக்குப் போதவில்லை. அனுபவிப்பது,
புலன்களா, மனமா அல்லது இவை இரண்டுமா
என்ற கேள்விக்கு பதில் கிடைப்பதில்லை. 
புலன்கள் மூலம், மனது அனுபவிக்கிறது. மனதை
வைத்துக் கொண்டு புலன்கள் வேலை 
செய்கின்றன. வினையும், வினையின் பயனும், 
தொடர் சங்கிலியாய் துரத்தும் !
சாதாரண மானுடன் நீ !
 உன்னால் மீளவே முடியாது !
முடியும் ! மனம், புலன்கள் இவைகளைத் தாண்டி
உள்ளுக்குள் ஒரு அமைதி பரவ வேண்டும். 
அந்த அமைதி பெற இறையருள் வேண்டும் !
அந்த இறை அருளைப் பெற, மனதில் மற்றச்
சலனங்களைத் தவிர்த்து,  இறையின் நினைவை
ஆழ்ந்து உள்ளுக்குள் அழுத்திக் கொள்ளவேண்டும்.
இறை நினைவை மனதில் நீக்கமற நிலைக்கச்
செய்வதற்கு பணிவு வேண்டும். அந்த பணிதலின்
கடை நிலையே சரணாகதி. 
அந்த இறையிடம் நீயே சரணம் என்று
சொல்லிவிட்டால் போதுமா ?
போதாது ! தன்னை முழுவதுமாய் இறைவனுக்கு
ஒப்படைத்தலே சரணாகதி. தன்னை முழுவதுமாய்
ஒப்படடைத்தவனிடம் இருந்து வரும் 
வார்த்தைகள் தடிமனாக இருக்காது, வரம்பு 
மீறாது. எவர் மீதும் கோபம் வராது.  இறைவனிடம் 
தன்னை ஒப்புக் கொடுத்தவனை, எந்த புலன்களும்
கிறங்கடித்து, வேடிக்கைப் பார்க்காது. புலன்கள் 
அமைதியானால், மனம் என்னை போற்றியவனை, 
இழித்தவனை, தூற்றியவனை, நிந்தித்தவனை 
வேடிக்கைப் பார்க்கத் துவங்கும்.  அந்த 
போற்றலும், தூற்றலும் அவனவன் வினையென
உணரும் !  நடந்தவை எல்லாம் இறையின் 
செயலே என்பது வலியுறுத்தப்படும். 
முதலில் நான் எழுப்பிய வினாக்கள் 
அர்த்தமற்றது என்பது இப்போது புரிந்தது.
யாவும் இறையின் செயல் என்பது மறந்து 
போனது. நான் வளர்வதும், வாழ்வதும் அவன்
செயல் என்பதுவும் மறந்து போனது.  
நான் முக்கியம் என்ற நினைப்பும்,
எனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்ற 
எண்ணமும் அகந்தையைக் கிளறி விட்டது.  
அதனால் அமைதி போயிற்று ; பணிவு போயிற்று :
இதனால் சரணாகதி என்ற தவமும் போயிற்று !
இறைவா ! என் ஐயனே !  எம்பிரானே !
முந்தைய நிகழ்ச்சிகள் யாவும் உன் செயலே 
என்பதை உணர்ந்து கொண்டேன்.  இப்போது 
நான் கற்ற பாடத்தைத் தீவிரமாக பயிலுவேன். 
ஆழ்ந்து , ஆழ்ந்து தவமியற்றி, உன் பாதங்களைச் 
சரணடைந்து, உன் பாதங்களை இறுகப் பற்றிக்
கொள்வேன். 
இறைவா! என் குருவே !  
நன்றி !
ஓம் …. ஓம்…. !

No comments:

Post a Comment