Saturday, 10 May 2014

உண்மை சற்றே வெண்மை


விமர்சனப் போட்டிக்காக  திரு. வை. கோபாலகிருஷ்ணன் 
அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட கதை, 
அவரால்  எழுதப்பட்ட  " உண்மை சற்றே  வெண்மை "

அதற்கான  இணைப்பு :

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12.html



முன்னுரை :

இக்கதையின்  கதாநாயகி , ஒரு  பட்டதாரி !

மாட்டு பண்ணை  நடத்தும்  பெற்றோர்கள். 
மாட்டுப் பண்ணையைப் பற்றிய  யதார்த்தமான,  ஒரு 
கிராமிய  சூழ் நிலையை  விவரிக்கும்  அட்டகாசமான எழுத்துக்கள் .

வயது  வந்த பெண்ணை  வீட்டில் வைத்திருக்கும்  பெற்றோர்களின் 
நியாயமான  ஏக்கம் ,  தங்களின்  பெண்ணிற்கு  திருமணம்  
செய்து பார்க்க வேண்டும்  என்பதுதான். 

கதைப்படி,  பெண்ணின்  ஜாதகத்திலும்  குறையிருக்கிறது. 
ஆனால், இது பெரிதும்  பாராட்டப்படவில்லை. 
ஜாதகியின் உடம்பில் உள்ள குறை  பெரிதுபடுத்தி பார்க்கப்பட்டிருக்கிறது. 
கதா நாயகியின்  குறை,  அவளது  மார்பில், அதுவும் வெளியே தெரியாத 
இடத்தில்  உள்ள  வெண்மையான புள்ளி / தழும்பு. 

இந்த குறை  மருத்துவத்தால்  போக்க முடியுமா அல்லது  முடியாதா 
என்பது  குறிப்பிடப்படவில்லை. 

எப்போதும்  உண்மை பேசுபவர்களாக  சித்தரிக்கப்பட்ட  பெற்றோர்கள் ,
மணம்  பேச வருபவர்களிடம்  பெண்ணின்  குறையை  மறைக்காமலிருப்பதால் ,
தட்டிப்போகும்  சம்பந்தங்கள்  பல. 

இந்நிகழ்வுகள்,  கதாநாயகியின்  மனதில்  கவலைகளை  
உருவாக்குகின்றன, தான்  பெற்றோர்களுக்கு  பாரமோ  என்று. 

ஆனால் ,  வீட்டிலிருக்கும்  பசுமாடு, தன் துணைக்காக, தான் கருவுற  
தயாராயிருக்கும்  நிலையை  வெளிப்படுத்துவதற்காக  கத்துவதையும் ,
புரிந்துகொள்ளாத பட்டதாரி பெண்ணாக  சித்தரிக்கப்படுகிறாள், 
கதா நாயகி. 

இதை புரிந்து கொண்ட பெண்ணாக  காட்டியிருந்தால்.
கதாநாயகியின்  மன ஓட்டங்கள்,   உடல் உறவுக்காக  ஏங்கும்   
பெண்ணாக கதா நாயகியை  சித்தரித்துவிடும் , என்ற  எண்ணத்தில்தான்   
கதாசிரியர் கதாநாயகியை இவ்வாறு  சித்தரித்திருக்கவேண்டும் .

ஆகையால், உடல் உறவு  சம்பந்தப்பட்ட  விஷயங்களை சாதுர்யமாக 
தவிர்த்து , கதாநாயகியின்  ஏக்கம்  திருமணமாகி  செல்லவேண்டும் 
என்ற அளவில்,  தெளிவான  வார்த்தைகளில்  கதை எழுதிய  
ஆசிரியரைப்  பாராட்ட வேண்டும். 

ஒரு பெண்ணின்  அங்கத்தில்  உள்ள குறையை  விவரிப்பதை  
தவிர்ப்பதற்காகவும்,  இக்குறையை  பெரிதுபடுத்தி  பேசும்  மக்களைச் 
சாடுவதற்காகவும் ,  கதைக்குள்  இரு நிறம் கொண்ட  காராம் பசுவைக் 
கொண்டுவந்த   கதாசிரியரின்  யுக்தி  பாராட்டுதற்குரியது. 

கதா நாயகியின்  ஏக்கங்களையும், மன ஓட்டங்களையும்  
கொச்சைப் படுத்தாமல். "வஞ்சப் புகழ்ச்சி"க்கு  மாறாக,  
" வஞ்சக இகழ்ச்சி"யாக   மடியில்  இரு நிறம் 
கொண்ட  காராம் பசுவை மேன்மைப் படுத்தும்  மக்களை காட்டி, 
காட்சி அமைத்த  கதாசிரியரின்   திறமையை  ஒரு  சாதனை  
என்றுதான் சொல்லவேண்டும். 

எனவே,  
இந்த கதை ,  கதாசிரியரின்  சாதனை  என்று   விமர்சனம் எழுதினேன் ,

கதா நாயகியைப் பற்றி  ஏதாவது எழுதலாம் என்று யோசித்தபோது, 
என் நினைவிற்கு வந்தது, கர்ணன் படத்தின்  "  மரணத்தை 
எண்ணிக் கலங்கிடும் விஜயா  "  என்ற பாடல்.  அதன் வரிகளையும்  
மாற்றி எழுதி,   துணைக்கு சேர்த்துக் கொண்டேன், விமர்சனத்தில். 

என் எழுத்துக்களுக்கு  மூன்றாம்  பரிசு கிடைத்தது. 
என்னை  எழுதத் தூண்டிய  
திரூ. வை. கோபாலகிருஷ்ணன்  அவர்களுக்கும், 
என் எழுத்துக்களை  பரிசுக்கு உரிமையாக்கிய
 நடுவர் அவர்களுக்கும், மனமார்ந்த  நன்றிகள். 

அதற்கான  இணைப்பு :
பரிசு பெற்ற என் வினர்சனம்  இதோ :

ஒரு  பெண்ணைப்  பற்றிய   கதை .

அவளின்  திருமண  (தே)க்கத்தைக்  காட்டும்   சூழ் நிலை .

இந்நிலையில்,  

ஒரு  பெண்ணின்  மனதில்   தோன்றும்  எண்ணங்களைக்
கொச்சைப்படுத்தாமல் ,  லாவகமாக,  நேர்த்தியாக  வெளியே
கொணர்வது   என்பது,  கம்பியின்  மேல்

இல்லை,  இல்லை,

கூரான   கத்தியின்  மேல்   காயம்  படாமல்
நடப்பதைப்  போன்றது !

சாதித்துவிட்டார் கதாசிரியர் ! ! .  

ஆரம்பமே   அட்டகாசம்தான்.

மாட்டிற்கு  தேவையான  அகத்திக் கீரை முதல்   
கழுநீர்  தண்ணீர் வரை ....
ஒரு  கிராமியச்  சூழ் நிலையைக் கண் முன்னே 
 கொண்டு வந்து  நிறுத்திவிட்டார், 
(  அந்தகாலத்து   பாரதி ராஜாவைப் போல ).

நாயகியின்  படிப்பு  கல்லூரியில்  வளர,வளர,
பெற்றோர்களின்  கவலையும்  வளர்கிறது,  
சரியான  வரன்  அமையாததால்.

காரணம்ஜாதகத்திலும் குறைநாயகியின் உடம்பிலும் குறை.

நாயகியின்  குறையை  விவரிக்ககாராம்பசுவை  
கதைக்குள்  கொண்டு வந்தது ,  சரியான   யுக்தி.

நாயகி,   தன்  மேல்  கொண்ட கழிவிரக்கத்தினால்
"  நான்  என்ன  செய்வது ?  காராம்  பசுவாகப் பிறக்காமல் ,  கன்னிப் பெண்ணாகப்  பிறந்து  விட்டேனே  !! "
என்று   சொல்லிய    வார்த்தைகள்  மூலம்,
இரு  நிறம்  கொண்ட  காராம்  பசுவை மேன்மை  படுத்தி,
ஒரு  பெண்ணுக்கு  தெரியாததெரியக்கூடாத  இடத்தில்  
இருக்கும்   சிறிய  வெள்ளைத்   தழும்பை   காரணம்   காட்டி,
பெண்மையை  தாழ்மைப்  படுத்தும் பேதைகளைசவுக்கு  
கொண்டு சாடியிருக்கிறார்,  கதாசிரியர்.

கடல்  போல்  ஆர்ப்பரிக்கும்   ஒரு பெண்ணின்   மன  ஓட்டத்தை,  
தெளிந்த நீரோடை போன்ற வார்த்தைகளைக் கொண்டு  
உண்மை  சற்றே வெண்மை "
என்ற மிக அழகான கவிதை  பாடியிருக்கிறார்,  கதாசிரியர் .  

வாழ்த்துக்கள்  ! !


திருமணத்தை  எண்ணி   ஏங்கிடும் பெண்ணே !

அதன்  ரகசியத்தைச் சொல்வேன் !

மானிடர்  திருமணம்  என்றோ நிச்சயிக்கப்பட்டது.

எங்கோ  ஒளிந்திருக்கும் !

ஏக்கத்தைக் கொல்வாய் !  மனதினை வெல்வாய் !

உன் குணத்தில்  அதுவும் ஒன்று !

நீயே  விட்டுவிட்டாலும் நிச்சயிக்கப்பட்டவன் 

வந்தே  தீருவான்  ஓர்  நாள் ...

சொன்னவன்  கண்ணன் !  சொல்பவன் கண்ணன் !! 

0-0-0-0-0-0-0-0

1 comment:

  1. வண்ணமயமான விமர்சனம் ...
    பரிசு பெற்றதற்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்.!

    ReplyDelete