Sunday, 25 May 2014

வெற்றியின்  ரகசியம்.


பாகம்  2


தத்துவத்தின்  கடுமையை  கதைகளின்  எளிமை  குறைக்கும்.   
உனக்கு  ஒரு கதை  சொல்லட்டுமா.... ?


கடலோரத்து  புதர் ஒன்றில்  இரண்டு  குருவிகள்  கூடு அமைத்து  , குடித்தனம் செய்தன.  இரண்டு  முட்டைகள்  இட்டன.  கருத்தோடு  பேணி வந்தன .

ஒரு நாள்  கடல் பொங்கி ஆடியதில்,  இரண்டு  முட்டைகளும்  நீருக்குள்  போய்விட்டன. குருவிகள்  பதறி தவித்தன .  ஒரு குருவி  விசும்பி  அழ ,
மறு  குருவி  சொல்லிற்று :

"  எதற்கு  அழுகிறாய் ... ?  உனக்கு  அந்த முட்டைகள்  வேண்டும்,  அவ்வளவுதானே ..  ?  நான்  எடுத்துதருகிறேன் ..... " என்று  வீரம்  பேசியது.

"  எப்படி  முடியும்...? "  மறு  குருவி  கேட்டது.

" உழைத்தல்  முடியும்.  முட்டைகள்  கடலுக்குள்தானே  இருக்க வேண்டும்......  கடல் நீரை  மறுபக்கம்  இறைத்து விட்டால் ,  முட்டைகள் தெரியும், அல்லவா...!  அப்போது, அவைகளை  நாம்  எடுத்துக் கொள்ளலாம் , அல்லவா...." உறுதியாய்  பேசிற்று.

"  முடியுமா.....? "  மறு குருவி ,  சந்தேகம்  எழுப்பிற்று.

" முயற்ச்சித்தால்  முடியும்.. "  இறுமாப்போடு  அந்த  குருவி  பேசியது.  இரண்டு  குருவிகளும்  உயரக் கிளம்பின . தங்கள்  அழகால்  கடல்  நீரை  முகர்ந்து  மறுபுறம்  கொட்டின . இரவு பகல் பாராமல்  அலைந்தன .  முட்டைகள் கிடைத்தே  ஆக வேண்டுமென்ற  வெறியுடன்  உழைத்தான . பசி , தூக்கம் , நோவு  எல்லாம்  மறந்து  நீரை அலகால்  முகர்ந்து  மறுகரையில்  ஊற்றிக் கொண்டிருந்தன .  

அந்த  கடற்கரை  வழியே  ஒரு முனிவன்  நடந்து  வந்தான் . இடமும், வலதுமாய் இந்த  குருவிகள்  அலைவதைப் பார்த்தான்.  தன்  மனோசக்தியை  அவைகளுக்குள்  செலுத்தி ,  அவைகள்  நோக்கம்  அறிந்து கொண்டான்,  சிரித்தான் .

அதே  மனோசக்தியால்  அந்த முட்டைகளை  கண்டு பிடித்து ,  நீரிலிருந்து  அவைகளை மிருதுவாக எடுத்து  கரையில் வைத்தான்.. தன்  வழியே  நடந்து போனான் .  

குருவிகள்  முட்டைகளைப் பார்த்து  திகைத்தன.  துள்ளிப் பறந்தன .

"  நான்  சொன்னது  நடந்து விட்டது  பார் ...  உழைத்தால்  உயரலாம்...  முயற்ச்சித்தால்  முடியலாம்.....  நாம்  நீரை முகர்ந்து  அந்த  கரை சேர்த்ததில் ,  கடல்  வற்றி  முட்டைகள்  வெளியே  வந்து விட்டன , பார்.. "  என்று  முதல் குருவி  கூறியது .

மறு குருவி  "  ஆமாம்,   ஆமாம்... " என்றது.

அந்த  குருவிகள்  முயற்சி செய்திருக்காவிடில்  முட்டைகள்  கிடைத்திருக்காது.  முட்டைகள்  கிடைத்ததற்கு  முயற்சி மட்டுமே  காரணமல்ல. 

இது ரொம்ப  சூட்சுமமான கதை ...!  யோசிக்க, யோசிக்க  எத்தனயோ  விஷயங்கள்  இதிலிருந்து  புரியும்.  கண் மூடி ,  இந்த  கதைக்குள்ளேயே  இரு...  !

0-0-0-0-0-0







1 comment:

  1. சூட்சுமமான கதை ...! பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete