Monday, 12 May 2014




" வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ  


புதிய கட்சி  , மூ.பொ.போ.மு.க. உதயம் "    (  VGK  13 ) 



நாடெங்கும்  தேர்தல்  களைகட்டி இருந்த நேரத்தில் , நம்மை
 "  வழுவட்டைகளாக  இருக்க வேண்டாம் ,
எழுச்சியுடன்  எழுந்து வாருங்கள் "  என்று  அழைப்புவிட
 ( மறு வெளியீடாக ) வந்திருந்த ,    கலகலப்பான,  
அற்புதமான படைப்பு ! 

அதற்கான  இணைப்பு : 



வழுவட்டை  என்ற  வார்த்தையை  அடிக்கடி  உபயோகித்ததினால் ,
வழுவட்டை என்பதனை  அடைமொழியாகக் ஸ்ரீனிவாசன்  
என்பவரின் சுருக்கம்,  வ.வ.ஸ்ரீ.

இவரது  அலுவலகத்தில்  புதிதாக  வேலைக்கு  சேர்ந்திருப்பது ,
நம்  கதாநாயகன்.

அலுவலகத்தில்  சேர்ந்த முதல் நாளே , கேண்டீனைப்பற்றித்
தெரிந்து  கொள்ளாத  வழுவட்டையாக இருக்கும் , 
கதா நாயகன், 
வ.வ.ஸ்ரீ யின்  எழுச்சி மிக்க வார்த்தைகளால்  ஈர்க்கப்பட்டு,
அவரை பேட்டி காண்பதிலும், தன்  சில பல  சந்தேகங்களைப்
போக்கிக்கொள்வதிலும்  காலத்தை கழித்துவிட்டு  ,  அவர்
வார்த்தைகளில்  அளவற்ற  நம்பிக்கை  வைத்திருக்கும்
சாதாரண  குடிமகன்.
வ.வ.ஸ்ரீ யின்  அன்புக்கு  பாத்திரமாகி, அவரால்  நிதி  அமைச்சர்
பதவிக்கு உயர்த்தப்பட்ட, கட்சியின்  நம்பிக்கை நட்சத்திரம்.

வாழ்நாள்  முழுவதும்  துணையிருக்கும்  " பொண்டாட்டி " க்கு
மாற்றாக,  " பொடி ".
அவள் மேல் கோபமா?
அவளை  இரண்டு  இழுப்பு இழுக்க வேண்டும் என்ற  எண்ணமா ?
எடு  பொடியை !!  நாசியில் வைத்து  இரண்டு இழுப்பு இழுத்தால்
போறும்,  அவளையே  அடித்த திருப்தி,  வ,வ.ஸ்ரீ க்கு- 

கதா நாயகனும்  பொடி போடுவதற்கு  ஒரு  காரணத்தை
கண்டு பிடித்தார்   வ.வ.ஸ்ரீ !
" பேக்கிங் ஹைஜீனிக்காக இருப்பதால், நீ கூட தைர்யமாக 
பொடி போடலாம் ”
ஆஹா  !   என்ன ஒரு  எழுச்சியான  அறிவுரை !!
( Packing   அழகாக , கண்ணை கவரும் படியாக இருந்தால் போறும்,
உள்ளே இருப்பது   எதுவாயிருந்தாலென்ன, 
எப்படியிருந்தாலென்ன  )

இன்றைய  இலவச இணைப்புகளுக்கும், 
கையிருப்பை ( Stock / money ) கரைக்கும் வியாபார யுக்திக்கும்,
 "  ரிஷி மூலம், நதி மூலம்  "  ஆராய்ந்து , அது,
திருச்சி மலை வாசலில், தேரடி  பஜாரில், மேற்கு பார்த்த முதல்
கடையில் , ஓசிப் பொடிக்கு  கை  நீட்டுபவருக்கெல்லாம்
 இலவச பொடி  வழங்கப்பட்டு  வந்ததுதான் என  தெளிந்து,
அலு லகத்திலும்  இலவசப் பொடி வினியோகித்த கர்ம வீரன்,
வ.வ.ஸ்ரீ 

இவருக்கு ,  தானும்  ஒரு அரசியல்  கட்சியை  ஆரம்பிக்க 
வேண்டும்  என்ற  எண்ணம்  அவருகிறது,  அதுவும், 
அறிஞர்  அண்ணாவின்  வாரிசாக ! அதற்கு  , பாரம்பரியமான 
ஒரு  குடும்பப் பிண்ணனி  வேண்டுமல்லவா (  நேருவின்  
குடும்பத்தைப்  போல் )  அதற்காக ,  ஆசிரியர்  தொகுத்திருந்த 
காரணங்கள்: 

தலைமுறை, தலைமுறையாய்
பொடிபோடும்  பொன்னான குடும்பம் !

99  வயதிற்குமேல்,  நிமிடங்களை  எண்ணிக்கொண்டிருக்கும்
நேர்மையாளன்  வாயில், பாலை  ஊற்றினார்களோ இல்லையோ ,
வெடிக் குழாயில் கந்தகத்தை அடைப்பதுபோல் ,  நாசியில்
பொடி  போட்ட  பொறுப்பான குடும்பம் !!

அறிஞர்  அண்ணா  போட்ட  அதே  பொடியை  இன்றுவரை போட்டு, 
அண்ணாவின்  நாமத்தை  வாழ்த்தி வரும், 
அழகான  குடும்பம் !

இத்தகைய பெருமை வாய்ந்த குடும்பத்தின்  வாரிசான  வ.வ.ஸ்ரீ,
அண்ணாவின்  நாமத்தை  வாழ்த்த,
அண்ணாவின் நாமத்தை  வளர்க்க,
மற்றும் ஒரு   மு. க.   (  முன்னேற்ற  கழகம் )வின் மேல்
ஆசை வைத்ததில்   வியப்பேயில்லை !!
ஆனாலும்,  மிகுந்த    தாராள  குணம்  வ.வ.ஸ்ரீ க்கு !
ஆடு  காட்டிலே  கிடக்க, ஆட்டின் உறுப்புகளை  பங்கு
வைத்தது போல், "  நானே  முதல்  அமைச்சர்,  நீயே  
நிதி  அமைச்சர் " என  பதவிகளை  பங்கு வைக்கும்
புண்ணியவான்  அவர் !

இடையே  அந்த காலத்து  " கமர்கட் " பற்றிய  குறிப்பும் .
( அந்த  கமர்கட்  பற்றிய  பின்குறிப்பு  சூப்பர்.  ஆனால்  எங்கள்
ஊரில்  அவ்வளவு  சீக்கிரம்  கரையாது. " காக்கா கடிக்கும் "
சீக்கிரத்தில் வழி விடாது. கல்லால்தான்  உடைக்க வேண்டும் ). 

நினைத்து, நினைத்து ,
( நம்  இயலாமையையும் சேர்த்து ) 
வாய் விட்டு  சிரிக்கலாம் !


இந்த  நீ....ளமான  நகைச்சுவைக் கதைக்கு  ,
நானும்  எழுதியிருந்தேன்,  ஒரு  விமர்சனம்,
என் எண்ணங்களைக் கோர்த்து ! 

என்  எழுத்துக்கள்  இரண்டாம்  பரிசைப் பெற்றிருக்கிறது.
அதற்கான  இணைப்பு :
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-02-03-second-prize-winners.html

என்னை  எழுதத் தூண்டிய  சிறப்பான  கதை எழுதிய  
திரு. VGK  அவர்களுக்கும்,  என் எழுத்துக்களை  பரிசுக்கு  
தேர்ந்தெடுத்த  நடுவர்  அவர்களுக்கும், 
என் மனமார்ந்த நன்றிகள் ! 




பரிசு பெற்ற  என் எழுத்துக்களும், என்  எண்ணங்களும் :
0-0-0-0-0-0-0-0-0-0-0-

கதாசிரியரின்  முழு    நீ......ள  நகைச்சுவை  கதை !
இது  சிரிக்க வைத்த  கதை மட்டுமல்ல,
என்னை  சிந்திக்கவும்  வைத்த  கதை !

மரத்தை  மறைத்தது  மாமத  யானை 
மரத்தின் மறைந்தது  மாமத  யானை 
என்று   திரு மூலர்   கூறியது   போல் ,
 ஒன்றில் ,  மற்றொன்றை மறைத்து,    நகைச்சுவையாய்
கதை எழுதிய  ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் !

கதாசிரியரின் நினைவில் , ,
நெஞ்சு  பொறுக்குதில்லையே, 
இந்த நிலை கெட்ட மாந்தரை  நினைத்து விட்டால்.
என்ற  பாரதியின்  வரிகள்    வந்திருக்க வேண்டும் ,
கொட்டிவிட்டார், தன்   மனக் குமுறலை, நகைச்சுவையாக !

சிலர்  சிரிப்பார்,
சிலர்  அழுவார்,
நான் 
சிரித்துக் கொண்டே  அழுகின்றேன் -  என்ற
எண்ணத்துடன், மற்றவரை  சிரிக்க வைத்து,
வேடிக்கை  பார்த்துக் கொண்டிருக்கும்  சிந்தனையாளருக்கு,
சிரம் தாழ்த்திய  வணக்கங்கள் !


" என்னால  ஆகாதுன்னு  எனக்கு தெரியுமுங்க , 
ஆனா,  சொல்லறத  சொல்லிப்புட்டேன் ! " என்ற 
பட்டுக் கோட்டையாரைப் போல், 
கொள்ளையடிப்பதில்  வல்லமை காட்டும்  திருட்டு  உலகத்தையும்,
தட்டு கெட்ட மனிதர் கண்ணில்  பட்டதெல்லாம்  சொந்தம்,
என்ற நிலையினையும் கண்டு,  நெஞ்சு பொறுக்காமல் ,
இன்றைய  அரசியல் அவலங்களையும், அரசியல்  வாரிசுப்
போராட்டங்களையும், அர்த்தமில்லாத  வாக்குறுதிகளையும்,
இலவசங்களின்  குத்தாட்டத்தையும் , கோடிட்டு காட்டி,
சுவையாக  கதை எழுதிய ஆசிரியருக்கு  பாராட்டுக்கள் !


நித்தில  பூம்பந்தர் கீழ் ,
மாமுது பார்ப்பனன்  மறை வழி காட்டிட,
மாலையிட்டு,
மங்கள நாண் முடித்து ,
அம்மி மிதித்து,
அருந்ததி பார்த்து,     கைபிடித்த  நல்லாளை,

பொருத்தமாக வந்து,
பொறுமையுடன்  வாழ்ந்துகொண்டிருக்கும்
பொண்டாட்டி" யை ,
செல்லமாக  சுருக்கி,
பொடி " யாக்கி ,
என்னை   சிரிக்க வைத்த   கதாசிரியருக்கு,   வாழ்த்துக்கள் !!

நெய் மணக்கும்  வெண் பொங்கலைப் போன்ற  இக்கதையின்
நடுவே,  விருப்பம் உள்ளவர்கள்  சுவைத்து  ரசியுங்கள், விருப்பம் இல்லாதவர்கள்  ஒதுக்கி விடுங்கள்  என்ற  எண்ணத்துடன் ,
பளபளப்பான  பால் குடத்தையும் , பழைய சோத்துப் பானையையும் ,
செண்ட் வாசனையையும் , பூண்டு   வாசனையையும்,
சூடான  கொழுக்கட்டையையும் , ஊசிப்போன  கொழுக்கட்டையையும்
நெய்யில் வருத்த குறு மிளகுகளாக,   விதைத்த  விதம்  அருமை !

பொடி  போடாமலேயே,
இடியையும், தூரலையும் வரவழைத்து, 
பஞ்ச  அமிர்தம்  நிறைந்த கை குட்டையை கசக்குவதையும், 
நாசிகா சூர்ணத்தின் மிருதங்க கச்சேரியையும் 
விவரித்த  விதம்     அருமை !

திருச்சி ,  மலை வாசல் கடையைப் பற்றிய வர்ணனைகளும்,
அங்கு ஓசிப் பொடிக்காக காத்திருக்கும்  கூட்டத்தைப்   பற்றிய  வர்ணனைகளும் .....அடடா .... என்ன   பசுமையான    நினைவுகள் !!

“  பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்      ”  
என்ற  வ.வ.ஸ்ரீ யின் குரல்  மூலம்,  
தொழுது,   உண்டு,     பின் செல்லும்    மாக்களை,
தக்க தருணத்தில்  நினைவு கூர வைத்திருக்கும்   
கதாசிரியருக்கு............   சபாஷ் !

அதிரடி  தள்ளுபடி , 
ஆடி  தள்ளுபடி, 
புத்தாண்டு தள்ளுபடி ,
பொங்கல் தள்ளுபடி , 
தீபாவளி தள்ளுபடி, 
கார்த்திகை  தள்ளுபடி,
கிறிஸ்துமஸ்  தள்ளுபடி,  
வருட முடிவு  தள்ளுபடி  என்று  பள்ளு பாடி,
என்  கையிருப்பை கரைக்கும் வியாபார யுக்திக்கும்,
இன்றைய  இலவச இணைப்புகளுக்கும்,
 "  ரிஷி மூலம், நதி மூலம்  "  ஆராய்ந்த   கதாசிரியருக்கு .....
மீண்டும்  ஒரு   சபாஷ்  !


அறிஞர்  அண்ணாவின்  உண்மையான வாரிசு யார் ?  என்ற  
கேள்வியை  எழுப்பி,  தலைமுறை தலைமுறையாய்,   அண்ணா 
உபயோகித்த  அதே பொடியை  உபயோகித்து வரும்  வ. வ.ஸ்ரீ யும்
அரசியல்  வாரிசு  போட்டிக்கு  தகுதியானவர்தான்  என்ற  பதிலையும்
தந்து , என்னை  சிரிக்க வைத்து , சிரிக்கும்  என்னைப் பார்த்து  
சிரித்துக்  கொண்டிருக்கும்  கதாசிரியருக்கு ......  
மற்றுமொரு  சபாஷ் !


வ.வ.ஸ்ரீ  என்ற  அரசியல் வாதியின்  சின்னம்  " பொ டி ட் டி ன் "
என்று கூறி, அந்த  அரசியல் வாதியின்   நோக்கமும், 
குறிக்கோளும்  " பொ டி ட் டி ன் " தான்  என்று   தெளிவாகவும், 
தீர்க்கமாகவும்  எனக்கு  எடுத்துரைத்த  கதாசிரியருக்கு  ...
மீண்டும் மீண்டும் .........ஒரு  சபாஷ் !

" தாலிக்கு  தங்கம்  வேண்டாம் 
  தாளிக்க  வெங்காயமும் வேண்டாம் " 
என்ற கொள்கையும் , ஞானமும் வ,வ.ஸ்ரீ க்கு பிறப்பதற்காக, 
திருச்சி, வெங்காய மண்டியில், நடுத்தெருவில்  குவிக்கபட்டிருந்த 
வெங்காயத்திற்கும், “இண்டர் நேஷனல் கோல்டு பஜார்” என்ற
இடத்தில் குவித்து வைத்திருந்த தங்க  மோதிரங்களுக்கும் 
முடிச்சு போட்டவிதம்  அருமை !  

சிட்டிசென்டர்’ என்ற இடத்தில் , நம்ம நாட்டு சோளக் கதிரைத் 
தின்றுவிட்டு, பொடி கிடைக்காத ஏமாற்றத்தில் , 
பொடலங்காய் காம்ப்ளெக்ஸ் " என்று   வ,வ, ஸ்ரீ   எரிச்சல்
அடைவதாக  காட்டியிருப்பதும்  அருமை !

தாலிக்கு தங்கமும், தாளிக்க எண்ணையும், மற்றவையும்தான்  
உனக்கு  வசப்பட்டுவிட்டதே!   இன்னும் என்ன  ? என்று  என்னை  
திருமூலர்  பாணியில்  சாடியிருப்பது ........ இன்னும்  அருமை!

இந்த   கொள்கையைப் பரப்ப , கொள்கை பரப்பு  செயலாளர்
பதவிக்கு, ஓர் குஜாலான  சினிமா  நடிகையைத் தேடும்
அரசியல்வாதியாக  வ.வ.ஸ்ரீ !

"  நான்  எட்டு  வருடங்களாக  அலுவலகத்தில்  எந்த  
வேலையும் செய்யவில்லை!   நான் செய்த  அந்த  
வேலையை  நீ  தொடர்ந்து செய்தால், அது  உன்னுடைய  
பதவி உயர்வுக்கு  வழி வகுக்கும் "  என்று  கதா நாயகனுக்கு
அறிவுரையும், வாக்குறுதிகளும்  வழங்கும்  வ.வ.ஸ்ரீ.

கதா நாயகனை ,
அலுவலகத்தில்  சேர்ந்த முதல் நாளே  கேன்டீன் இருக்கும்
இடத்தைக்கூட தெரிந்து  கொள்ளாத  வழுவட்டையாகவும்,

இன்றைய  அரசியல் வாதிகள்  அள்ளி வீசும்  வாக்குறுதிகளை,
" ஆ..."  என்று  வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருக்கும்
நம்  சாதாரணக்  குடிமகனைப்   போலவும்  ,  அமைத்த   விதம்
அருமை !

முற்போக்கு அணிக்கும், பிற்போக்கு அணிக்கும்
வியாக்கியானம்  அளித்து , எல்லாமே  சாக்கடையில்
போகும்  சமாச்சாரங்கள் என்று  முடித்திருப்பது
மிக மிக அருமை !

ஒரு  பேச்சாளின்  பேச்சு,   கேட்பவர் மனத்திலும் ,
ஒரு  எழுத்தாளனின்  எழுத்து,   வாசகனின்  மனத்திலும்
ஒரு  தாக்கத்தையும் , ஏக்கத்தையும்
உண்டு பண்ண வேண்டும் ! !

ஒன்றை சொன்னால், மற்றொன்று  மனதில்  உதிக்க வேண்டும் !


இதைப் படித்த  வாசகர்களின் சிரிப்பு ,
 " என்னால  ஆகாதுன்னு  எனக்கு தெரியுமுங்க "
என்ற பட்டுக் கோட்டையாரின் பாடலின்  பிரதிபலிப்பாக ,

" இதுதான்  உண்மை ,
  ஆனால்,  நான் என்ன  செய்ய முடியும் "
என்ற  எண்ணத்திலும், ஏக்கத்திலும்  வந்ததாகத்தான்
இருக்க முடியும் .

இதுவும்  ஓரு  தாக்கம்தான் !


என்னுடைய  பார்வையில் ,
இந்த  சுவையான  கதை ,
கதாசிரியரின்  மற்றுமொரு  சாதனை ! !

One  more feather on  his  cap !!

வாழ்த்துக்கள் ! ! 

0-0-0-0-0-0-0-0-0-0-0-


































































































  

























தாலிக்கு  தங்கம்  வேண்டாம் !
தாளிக்க  வெங்காயமும்  வேண்டாம் !

(     ஏனென்றால்,   தாலிக்கு  தேவையான  தங்கமும்,
தாளிக்க தேவையான எண்ணையும், மற்றவையும்
 (இல) வசப்பட்டுவிட்டது!  )

என்ன  அற்புதமான  கொள்கை !
இதைப் பரப்ப,  ஒரு  குஜாலான  சினிமா நடிகையைத் தேடும்  ,  கட்சியின்
தலைவர், வ.வ.ஸ்ரீ. இதை உண்மையென நம்பும்  சாதாரணக் குடிமகன்,  நம் கதா நாயகன் !





1 comment:

  1. அருமையான விமர்சனம்..

    பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete