Wednesday, 14 May 2014

"  என்  கண்மணித்  தாமரை " என்ற நாவல்.
  

எழுத்துச் சித்தர்,  திரு. பால குமாரன்  எழுதியது. 
அதிலிருந்து  சில  வரிகள் .

மாடசாமி,  சுப்பிரமணியம்  என்ற  இரு கதா பாத்திரங்களுக்கு
இடையே  நடந்த  உரையாடல்களாக  எழுதப்பட்டிருப்பவை !

0-0-0-0-0-0-0-0-0-0-0-

உன்  கேள்வி  என்ன, மாடசாமி ?

திருக்கடவூர்,  அமிர்தகடேஸ்வரர்  காலசம்ஹார  மூர்த்தியா ?

ஆமாம்  மாடசாமி !  மார்கண்டேயருக்கு  பதினாறு வயது 
முடியுது. அவரை  எமதர்மன் துரத்திக்கிட்டு  வர்றான் .
மார்கண்டேயர் , அமிர்தகடேஸ்வரை கட்டிப்பிடிச்சுகிட்டு 
தன்னை  காப்பாத்தும்படி  கதறுகிறார். எமன்,  பாசக்கயிறை 
வீசுறான். கயிறு,  மார்க்கண்டேயனோட,  சாமியையும்  
சேர்த்து  சுத்தி  இழுக்குது.  லிங்கரூபமா  இருந்த  ஈஸ்வரர்,
உள்ளேயிருந்து  எழுந்துவந்து ,  காலனை   வதம்  பண்ணின 
இடம் இது !

புரிஞ்சுதா !  உன் கேள்வி என்ன  சொல்லு !  


காலசம்ஹாரமூர்த்திய  நமஸ்காரம்  பண்ணினா , 
வேண்டிக்கிட்டா  மரணம்  வராதா ? 

வராது ! 

சாமி! .......  உடம்பு மரணம்,   ஆத்மா  மரணம்னு  குழப்பாதீங்க ! 

ஓஹோ...  உனக்கு  மரணம்  பத்தியே  குழப்பமா ...
மரணம்னா  என்ன  மாடசாமி ?

உடம்பு  செத்துப்போறதுய்யா ...  மூச்சு நின்னு போறது...

உங்க  தாத்தா  இருக்காரா,  மாடசாமி 

இல்லீங்க...  செத்துட்டாரு..

தாத்தாவுக்கு  தாத்தா  ?  

என்னங்க...  விளையாடறீங்களா ?   அவரும்  செத்துட்டாரு ... 

ராஜ ராஜ  சோழன்   தெரியுமா ?

தெரியுங்க..  நாங்க  அவர்  பரம்பரை ...

அவர் என்ன  செய்தாரு, எப்படி  ஆண்டார்னு  தெரியுமா ?

கதையா, பாட்டா, கல்வெட்டா இருக்கே,  பட்டி தொட்டி 
எல்லாம்  பாடறாங்களே !

மூணு   தலைமுறைக்கு  முன்னாடி இருந்த  தாத்தாவைப்பத்தி 
உனக்கு  ஒண்ணும்  தெரியல.  ஆனா ,  முப்பது  தலைமுறைக்கு 
முன்னாடி இருந்த  ராஜ ராஜ சோழனை  உனக்கு  நல்லா 
தெரியுது. பட்டி தொட்டியெல்லாம்  தெரியுது. 

ஆமாங்க ....

அப்போ  என்ன  அர்த்தம் .....?  

மாடசாமி  அவரையே  பார்த்துக் கொண்டிருந்தான்.
சுப்பரமணியம்  கைகட்டி, அவனையே  பார்த்தபடி  இருந்தார்.

உன் தாத்தாவுக்கு  தாத்தா  செத்துட்டாரு ,  ஆனா, 
ராஜ ராஜ சோழன் சாகலை. சாகவும்  மாட்டார்.  காரணம் என்ன..  ?
சிவன் அருள் ..  சிவ தியானம் ...  சிவ கைங்கர்யம் ... சிவனுக்கு 
அவன் எழுப்பிய  கற்றளி ..

உலகத்துல  இவன் மட்டும்தான்  ராஜாவா ..? 
தென்னாட்டை  இவன் மட்டும்தான்  ஆண்டானா ... ??
சோழ வம்சத்தில்  இவன் மட்டும்தான்  சக்கரவர்த்தியா.. ???

இவ்ளோ....பெரிய  கோவில்,  எப்படி  அவனால்  கட்ட முடிஞ்சுது ?
தியானம்... இடைவிடாத  தியானம்.  அதாவது,  இடைவிடாத 
இறைநினைப்பு.  வாழ்க்கை முழுவதும்  இறைவனுக்கே  
அர்ப்பணித்த  விவேகம் ....

கோட்டை  கட்டியிருந்தா,  மண்ணோட மண்ணாயிருக்கும்.
மண்ணாயிடுத்து. பழையாறைல , குட்டிச்சுவர்தான்  நிக்கறது.
நாலு பக்கத்து  தெருதான்.  இப்போதைக்கு  நகரமா  இருக்கு.
ஆனா,  அவன்  கட்டின  கோவில்  அலுங்காம  நிக்கறது.
ராஜ ராஜனுக்கு  சாவே  கிடையாது . 
பூமி  வெடிச்சு  சிதர்ற  வரைக்கும்  பிரகதீஸ்வரம் இருக்கும். 
பிரகதீஸ்வரம் இருக்கிறவரை  ராஜ ராஜனும்  இருப்பான். ..

உடம்பு  சாகக்கூடாதுன்னு  வேண்டிக்கறதுக்கு  உனக்கு உரிமையேயில்லை.  நீ  விரும்பியா  பிறந்தாய் ... ?
நீ  ஆசைப்பட்டா  இந்த  அப்பா, அம்மா  கிடைச்சா .. ?
நீ  தேர்ந்தெடுத்ததா  இந்த ஊர் .....?
உன்னை  யாரோ  இங்கு  இறக்கிவிட்டா..,  
யாரோ வந்து  எடுத்துண்டு  போவா...

நோயற்று  இருக்கணும்னு  வேண்டிக்கலாம்....
சாவற்று  இருக்கணும்னு  வேண்டிக்க  முடியாது.
மரண பயம்  ஒரு  நோய் .....
அந்த  பயம்தான்   காலன்,  யமதர்மன்....

மார்க்கண்டேயன்  மரணத்திற்கு  பயப்பட ,   
அந்த  பயம் தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது.  
ஒரு  பயத்திற்கு  ஏன்  யமதர்மன்  என்று  பெயர் .....?

சுப்பரமணியம்  கேள்வி கேட்டுவிட்டு  தொடர்கிறார் .

நன்றாக  புரிந்துகொள் ,  மாடசாமி ! 
உன்  மரண  நேரத்தில்  இந்த உலகத்தில்  நீ செய்த  
நன்மையும் , தீமையும் உன்  கண் முன்னே வரும்.  
உன் மனதுக்குள்ளேயே  ஒரு நடு நிலைமை  உணர்வு 
தோன்றும். அந்த உணர்வுக்குத்தான்  யமதர்மன்  
என்று  பெயர். 

தர்மம் என்பது  நடு நிலையானது. உலகத்தில்  வாழும்போது 
நாம்  நல்லதின் பக்கமோ, அல்லது  தீயதின்  பக்கமோ 
சார்ந்திருக்கிறோம்.  அன்பாகவோ ,  கோபமாகவோ  
மனிதர்களை  அணுகுகிறோம்.  நடு நிலைமை  
வருவதேயில்லை.  

வாழும்போது வராத  நடுநிலை உணர்வு ,  சாகும்போது 
வருகிறது.  நீ   சரியாக  வாழ்ந்தாயா  என்று  உன்னை , 
உன் மனதே  எடை போட்டு பார்கிறது. கடைசி  மூச்சிலிருந்து 
கருவில் குடிகொண்டது வரை , எல்லா  விஷயங்களும்  
தட தடவென்று  சீக்கிரமாய்  ஓடுகின்றன. நடு நிலையற்ற 
நேரங்களைக் காட்டிக்கொடுக்கின்றன .  

ஒரு  வினை  இருப்பின்  அதற்கு  விளைவுகள்  உண்டு.
இங்கு செய்த  வினையின் விளைவாக , மறுபடியும்  ஒரு 
பிறவி  ஏற்படுகிறது.  வினைக்கேற்ப  அந்தப்பிறவியின்  
சுகதுக்கங்கள்  முடிவு செய்யப்படுகின்றன. 

எனவே ,  வினையை  குறைத்துக் கொள்ளவே  இறை 
வழிபாடு  என்று  வைத்துக் கொள்கிறோம்,  துறவு 
பூணுகிறோம். 

மாடசாமி,  இறை வழிபாடும்  ஒரு  வினை. அந்த  செயலும் 
அற வேண்டும்  என்பதற்காகத்தான்  துறவும் , தவமும் 
மேற்கொள்ளப்படுகிறது .

இப்போது  நெல் அளந்தாயே ,  இது  ஒரு வினை . இதற்கு 
ஒரு  விளைவு  உண்டு.  இப்போது  இவருடன்  சண்டை  
போட்டாயே ,  இதுவும்  ஒரு வினை,  இதற்கும்  விளைவுண்டு.

உள்ளே  மௌனமாயிருப்பதே  நலம் அல்லது  தவம்.
செய்யும்  செயலோடு  மனம்  ஒட்டாதிருப்பதே  மௌனம்.
செயல்  என்பது  மனம் கட்டளையிட , உடம்பால்  நடைபெறுவது.
இந்த  மனதை  இயங்க  வைப்பது  யார் .... ?
உடம்பு  மாடசாமியா,  மனம்  மாடசாமியா... ??
மனதிற்கு அப்பால்  ஏதும்  இருக்கிறதா ... ?
மனதை  ஏதும்  வழி நடத்துகிறதா .....??
இருக்கிறது என்றால்  உற்றுப் பார் .....
இல்லையென்று கருதினால், இஷ்டம்போல்  ஆடு ....

இவ்வளவுதான்  சொல்லிக் கொடுக்க முடியும், மாடசாமி !
படிப்பு  இங்கே  முடிகிறது.

உன்னை  குளத்தில்  கைபிடித்து  இறக்கத்தான்  முடியும், 
நீதான்  நீச்சலடிக்க வேண்டும்.  உன் இடுப்பு பிடித்து ,
குதிரையில் ஏற்றித்தான்  வைக்க முடியும். சவாரி  நீதான் 
செய்ய வேண்டும்.

உன் மனதை  இடைவிடாமல்  பார்க்கும்போது, மாடசாமி 
என்கிறவன்  மனமல்ல  என்பது  புரிந்துவிடும்.   பிறகு ,
பார்வையே  வேறு.. !  நான்  நெல்  அளந்தேன்  என்று  
ஒரு நாளும்  சொல்ல முடியாது !

மரணமில்லா  பெருவாழ்வு  என்பது  பெயர் நிற்றல்.
ராஜ ராஜ சோழனுக்கு  மரணமே  இல்லை....
மாடசாமிக்கு...............?

நெல்லளக்கவே  சோம்பல் படுகிற  மாடசாமி  எங்கே ....?
நெடிதுயர்ந்த கற்றளி கட்டின  ராஜ ராஜன்  எங்கே ....??
புகழுடம்பே  பிரகாசிக்காத போது, ஆத்மா  எங்கிருந்து 
பிரகாசிக்கப் போகிறது ..?  அது  மறைக்கப்பட்ட  பொருளாகத்தான் 
இருக்கும்.

கெட்டவர்கள்  பெயரும்  பூமியில்  நிற்கிறது,  ஐயா...

நிற்கும்.  நிச்சயம் நிற்கும்...   கடைசி நிமிடத்தில்  கெட்டது
அத்தனையும் விட்டுவிட்டு , நன்மையை நோக்கி  வாய்விட்டு 
கதறுகிறானே .....  அந்த காரணத்தால்  நிற்கும்.

நல்லவன்  வாழ்வதைவிட , கெட்டவன்  திருந்தியதுதான்  
விசேஷம். இன்னும்  பல தலைமுறைகளுக்கு  பாடம்...

மரணபயம் நீங்கி, உன் பெயர் நிலைக்க , 
என்ன  செய்யப்போகிறாய்  என்று  யோசி..!  
இப்போதே  நடுநிலைமை கொள் ..!
விருப்பு, வெறுப்பற்று  இருக்க, எதையும்  ஏற்கும்  
மனப்பக்குவம்  வேண்டும் .. !
எதையும் ஏற்கும் அமைதி  தியானத்தால்  வரும்..
தியானத்திற்கு அடிப்படை,   பக்தி ...
பக்திக்கு  அடிப்படை ,  பணிவு....
பணிவுக்கு  ஆதாரம்,  ஸத்சங்கம்,  நன்மக்கள்  கூட்டம்...

கள் குடியனோடு பழக , அந்த புத்தியும் ,
காமுகனோடு  பழக,  அந்த எண்ணமும்,
கழகத்தில் கவராடுபவரோடு  சேர, அந்த பழக்கமும் ,
உனக்கு வரும்.

மாடசாமி....!  போகும்  பாதையை  தேர்ந்தெடுத்து, 
உன் சக பயணிகளை  யாரென்று  விசாரித்து, 
வாழ்க்கையை  நடத்து. 

0-0-0-0-0-0-0-0--0-0-0-0-0-0-0-0-0-0


















  











No comments:

Post a Comment