Thursday, 8 May 2014



நாவினால் சுட்ட வடு ”


திரு. வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களால்  
விமர்சனப்போட்டிக்காக வைக்கப்பட்ட  கதை, 
அவர் எழுதிய "  நாவினால்  சுட்ட வடு " 

அதற்கான இணைப்பு


இரு தோழியரைப் பற்றிய  கதை. 

தன் திருமணம்  சில பல காரணங்களால் தட்டிப்போக,  
அந்த இடத்திற்கு  தன்  தோழியையே  பரிந்துரைக்கும் , ஒருத்தி . 

தோழிதான்  தன்  திருமணத்திற்கு  காரணம்  என்று  தெரிந்திருந்தாலும், 
அவளுடன்  சிரித்துப் பேசும் தன்  கணவரை  சந்தேகக் கண் கொண்டு 
பார்ப்பது,  அவளுக்கும்  தன்னைப் போல  குழந்தை இல்லை 
என்று  ஒப்பிட்டுப் பார்த்தல்  ஆகிய    குண நலன்களுடன் 
வளைய வரும்  கதாநாயகி ,  மற்றொருத்தி .

தோழி  கதாநாயகியின்  வீட்டிற்கு  அழைத்து வரும் , இரட்டையர்களின் 
கும்மாளத்தை, குறும்புகளை  சுவைபட  எழுதியிருக்கிறார்,  ஆசிரியர்.

குழந்தைகளின்  குறும்புகள்  அத்தனையும்  கதாநாயகிக்கு  
எரிச்சலாக  இருந்தாலும் ,  அவர்களுக்கு தேவையானதை  எடுத்து 
வைக்கும்  விதத்தில் ,  குழந்தைகள் மேல்  கதாநாயகிக்கு  இருக்கும் 
ஈடுபாட்டையும்  உணர்த்துகிறார்,  ஆசிரியர். 

ஒரு நாள் ,  தோழி அழைத்து வரும்  குழந்தை,  லேப்-டாப்பை 
கட்டிலிலிருந்து  கீழே தள்ளி விட ,  கதா நாயகியின் கோபம்  
உச்சத்தை  அடைகிறது. 

இதைப்பற்றியும், இரட்டையர்களின்  அட்டகாசங்களையும் பற்றி 
கணவனிடம்  முறையிடுகிறாள் , கதா நாயகி. 

கணவரும், 

" பொருட்களின் மதிப்புத் தெரிந்த உனக்குக் குழந்தைகளின் 
மதிப்புத் தெரியவில்லையே” 

என்ற  வார்த்தைகளை  உதிர்த்துவிடுகிறார்,

இந்த  வார்த்தைகள்  intentional  ஆ ,  அல்லது  incidental  ஆ ? 

Intentional  என்றால்,  ஆசிரியர்  இது போன்ற  நிகழ்ச்சிகளை , குறைந்தது 

ஒன்றிரண்டையாவது இணைத்திருக்க வேண்டும்.  ஆனால்,  
எதையும்  இணைக்கவில்லை. 

கதைப்படி,  கணவரின்  வாயிலிருந்து  விழுந்த  வார்த்தைகள் , 

தவறுதான்  என்றாலும் , அவை  தவறியதாகவும்   இருக்கலாமே ! 

ஆனால்,  கதையின் தலைப்பு , "  நாவினால்  சுட்ட   வடு " என்று  

தீர்க்கமாய் இருக்கிறது !  

" ஒரே முறை  சொல்லியிருந்தாலும் சரி,  வாயிலிருந்து  தவறிய  

வார்த்தைகளானாலும்   சரி,  குற்றம் குற்றமே ,  இது  என்றுமே  
மறையாத  வடுதான் "  என்று  எழுதுவதில்  உடன்பாடில்லை எனக்கு ! 

இதன்படி பார்த்தால் ,   இந்த  உலகத்தில்,  எல்லோருமே  தவறு         செய்யாதவர்களாய்த்தான் இருக்க வேண்டும் .


கணவன்  தவறு செய்திருந்தாலும்,  அதை  உணரும்போது ,

அவன்  மனிதனாகிறான் ,

தவறு செய்த கணவனை ,  அவன் கேட்காமலேயே  மன்னிக்கும்  

மனைவி ,  தெய்வமாகிறாள், அவனுக்கு. 

இன்றல்ல, நாளையோ  அல்லது என்றோ  இக்கதையை  படிப்பவருக்கு 

ஒரு முறையே ஆனாலும் சரி, அது என்றைக்குமே வடுதான்  என்ற 
எண்ணம் வருமல்லவா ?  அதனால்,  என் மாற்றுக் கருத்தை ,
இது வடுவல்ல, சாதாரண  காயங்கள்தான் என்று, ஒரு தந்தையோ / தாயோ 
மகளுக்கு  அறிவுரை  கூறுவதுபோல் ,  விமர்சனத்தை முடித்தேன்  .
என் எண்ணத்தை வலுப்படுத்த , கணவரின்  செயல்களாக  குறிப்பிடுவதற்கு 
எதுவுமில்லை.  எனவே,  புகழ் பெற்ற பாடலான " ஒவ்வொரு  பூக்களும் " 
என்ற பாடலின்  சில வரிகளை  துணைக்கு  அழைத்துக் கொண்டேன் ! 


என் விமர்சனம் ,  இரண்டாம்  பரிசை  பெற்றிருக்கிறது !

என் கருத்துக்களை  எழுதத் தூண்டிய 

 திரு.  வை. கோபாலகிருஷ்ணன் 
அவர்களுக்கும்,  என் எழுத்துக்களை  பரிசுக்காக  
தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும், 
என் மனமார்ந்த  நன்றிகள் !

பரிசு  பெற்ற  விமர்சனம்  இதோ ! 


0-0-0-0--0-0-0-0-0-0



தீராத விளையாட்டுப்  பிள்ளை - கண்ணன் 
தெருவிலே  பெண்களுக்கு  ஓயாத  தொல்லை.

ஒரே  ஒரு  கண்ணனுக்கு,   ஆயர்பாடியின்   அனைத்து
கோபிகைகளாலும் ஈடு  கொடுக்க  முடியவில்லை.

இங்கு  இரட்டை (  வால் ) கண்ணன்கள்.
சொல்லவும்  வேண்டுமோ,  கதா நாயகியும்
அவள்  நண்பியும் படும் பாட்டை!.

தரையை  ஈரமாக்குவது, அதில்  வழுக்கி  விழுவது...
 யதார்த்தமான, நிதர்சனமான, மிகவும்  ரசித்த  வரிகள்.

மிகுதியான வேலை, அயர்ச்சி, இவைகளினூடே  இந்த  வால்களுக்கு  வேறு செய்யவேண்டுமா  என்று  மனம் சலிப்பதுபோல்  காட்டியிருந்தாலும்,

கறந்த பால் கன்னலொடு 
நெய் கலந்தாற்போல

நாயகியின்  மனதில்  இருக்கும்  தாய்மையின்  நெகிழ்வையும், பரிவையும்
அவர்களுக்குத்  தேவையான  பிஸ்கட், சாக்லேட்ஸ்,  பால், இட்லி, நெய்யுடன்  பருப்பு,  தெளிவான  காரமில்லாத  ரசம்  என  தேடித்தேடி,  ரசித்து,  எடுத்து  வைப்பது )   இணைத்துக் காட்டியிருப்பது  அருமை.

ம் .. ம் ..  பிஸ்கட்டும்,  சாக்லேட்சும்   இக்கால  தாய்மார்களின்  வரப் பிரசாதம்.

மறு மனையில்  உட்கார்ந்து   கை நிறைய  வளையல் போட்டுக்கொண்டு,
அம்மிக் குழவி  கழுவவது, பேப்பிலை  அடிப்பது  சிலருக்கு    நம்பிக்கை,,
பாதிக்கப் பட்டவர்களுக்கு   அவமானம்..
சில  தலைமுறைகளின்   இடைவெளி..

"  புதிதாக   சாணை  பிடித்த   அருவாமனை "--  நறுக்கென்ற வார்த்தைகள்.  
"  அவளும்   என்னைப் போலத்தான்,  சுதந்திரமாக   அரச மரத்தைச் சுற்றுகிறாள் "  என  ஒப்பிட்டுப் பார்க்கும்  குணம்.

இவ்வாறு  பெண்களின்   குண  நலன்களுடன்   அநாயாசமாக விளையாடியிருக்கிறார்  ஆசிரியர்.

தோழியும்,  அவளுடன்  இலவச  இணைப்புக்களும்  வருவது  பிடிக்கவில்லை  என்றால்  ''  எனக்கு  வேலை இருக்கிறது "  என்று  தட்டிக் கழித்திருக்கலாம்,  அல்லது  "  முடிந்தால் வா, இல்லையென்றால்  பிறகு  பார்க்கலாம் "  என்று  பட்டும்படாமலும்  பதிலளித்திருக்கலாம்.  அதைவிட்டு, 
“டி.வி.யில் அத்திப்பூக்கள் முடிந்த பிறகு , வாடி”      
என்று  கண்டிப்புடன்   சொல்லியிருப்பதில் , எந்த தலைவலி  வந்தாலும்  பரவாயில்லை, தோழி வரவேண்டும்,  அவளுடன்  பேசி மகிழ வேண்டும்  என்ற  ஆவல்  தொக்கி நிற்பது அருமை. 

வந்த  ஒற்றைத் தலைவலி,  தூங்கி எழுந்து ,  லாப் டாப் ஐ  இழுத்துத் தள்ளிவிட்டு,  " ஹையா ! !  இந்த வீட்டில் ,  உடையாத  டி. வி.  மானிட்டர்,  உடையாத   ஷோ  கேஸ்  கண்ணாடி !           அதேபோல் ,      உடையாத  லாப் டாப்  ! !  "  என்று  அதைப் பார்த்து  சிரிப்பது  மிகவும் அருமை. 

கணவர்  வேலையிலிருந்து  திரும்பியவுடன்  பக்குவமான  மந்திர உபதேசம்.
கணவரின்  சில  தவறான  வார்த்தைகளுக்காக  வேதனைப்  படும்  கதா நாயகி.

உயிர்பிக்கப்பட்ட  லாப் டாப்பில்   கஷ்குமுஷ்குக் குழந்தைகள் தோன்றி சிரிக்கத் துவங்கியதும் தான்,  பாதி உயிர் வந்ததாம்  கதா நாயகிக்கு.

அந்த  வீட்டில்  வாழும்  இரு ஜீவன்களின்  சுவாசக் காற்றே குழ்ந்தைகள்தாம்  என்று  சொல்லாமல்  சொல்லிவிட்டார்  கதாசிரியர் .

லாப் டாப்  உடையவில்லை  என்று  கணவர்  சொல்ல,
என்  மனம்  உடைந்துவிட்டது  என்று  கதறத்  துடிக்கும்  கதா நாயகி.

முடிவாக  நான்  சொல்ல  விழைவது ,  

உன்  கணவர்  சொல்லிய  வார்த்தைகள்  
"  நாவினாற்  சுட்ட  வடு "  அல்ல ,  மகளே !

உன் மனதில்  இருப்பது  சாதாரண  காயங்கள் தான் !

உன் விரல் உன் கண்ணைக் குத்தினால்  உனக்கு  வலிக்காது,  பெண்ணே !

நாளை,  உன் மடி  ஈரமாகும் போது ,   உன் விழிகள்  ஆயிரம்  கதை  சொல்லும் !

எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே
! 


0-0-0--0-0-0-0-0-0-0












  

















No comments:

Post a Comment